விவசாயிகள் எல்லாம் மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் இருக்கிறார்கள் என்று கோயபல்ஸ் பிரச்சாரத்தில் அமைச்சர் காமராஜ் தயவு செய்து ஈடுபட வேண்டாம் என, முன்னாள் திமுக அமைச்சரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளருமான எ.வ.வேலு எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, எ.வ.வேலு இன்று (அக். 16) வெளியிட்ட அறிக்கை:
"பாவம்! காவிரி டெல்டாவில் பிறந்தும் கள நிலவரம் தெரியாமல் திருதிருவென முழிக்கிறார் அமைச்சர்! 'காவிரி டெல்டா பகுதிகள் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் உரிய காலத்தில், அதாவது, அக்டோபர் 1-ம் தேதியே நேரடி கொள்முதல் நிலையங்களை அரசு திறக்கவில்லை' என்பது அக்மார்க் உண்மை. விவசாயிகளை நேரடியாகச் சந்தித்தால் அமைச்சரின் முகத்திற்கு எதிரே அதை அவர்கள் சொல்வார்கள்.
ஏன், அமைச்சரே கூட தனது அறிக்கையில் 'கடந்த பருவத்தில் 2,153 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. ஆனால், நேற்று வரை 816 நேரடி கொள்முதல் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன' என்று கூறியிருக்கிறார். அப்படியென்றால் போதிய நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டில் எங்கேயிருந்து அரசியல் காழ்ப்புணர்ச்சி வந்தது?
அதேபோல், எங்கள் திமுக தலைவர் ஒரு நேரடி கொள்முதல் நிலையத்தில் 1,000 மூட்டை நெல்லுக்கு மேல் கொள்முதல் செய்வதில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார். அதையே அமைச்சர் தனது அறிக்கையில் ஏற்றுக் கொண்டிருக்கிறார். நேரடிக் கொள்முதல் நிலையங்கள் போதிய எண்ணிக்கையில் திறக்கப்படவில்லை என்பதையும், நெல் கொள்முதலில் உள்ள உச்சவரம்பு என்ற எங்கள் திமுக தலைவரின் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டு விட்டு அமைச்சர் பிதற்றுவது ஏன்?
'திமுக தலைவரின் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது' என்று கூறும் அமைச்சர்தான் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் கோட்டையில் அமர்ந்திருக்கிறார். ஆகவே எங்கள் திமுக தலைவர் சொன்ன குற்றச்சாட்டு நூற்றுக்கு நூறு உண்மை!
நேற்றைய தினம் உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நெல் கொள்முதல் குறித்து சூர்யப்பிரகாசம் என்பவர் ஒரு வழக்குத் தொடர்ந்திருக்கிறார். அதில், 'அரசின் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலுக்காக டெல்டா மாவட்டங்களில் 10 முதல் 15 நாட்கள் காத்திருக்க வேண்டியதிருக்கிறது. அதனால் மழையில் நெல் ஈரமாகிச் சேதமடைகிறது. ஆகவே, தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் தேவையான அளவுக்கு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்திருக்கிறார். திமுக தலைவருக்கு அறிக்கை விடும் அமைச்சர் இப்படியொரு வழக்குப் போட்டிருப்பதை முதலில் தெரிந்து கொண்டாரா இல்லையா?
அந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள், 'விவசாயிகளின் விளைபொருட்களை உரிய நேரத்தில் விற்பனை செய்ய முடியாமல் சாலையிலேயே நாட்கணக்கில் காத்துக்கிடக்கின்றனர். பல விவசாயிகள் வறுமை தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலையும் உள்ளது. அரசு அதிகாரிகள் ஒரு மூட்டை நெல்லுக்கு ரூ.40 லஞ்சமாகத் தராத விவசாயியிடம் நெல் கொள்முதல் செய்வதில்லையாம். அரசு அதிகாரிகள் சம்பளத்தைத் தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்குச் சமம்' என்று கடுமையாகக் கண்டித்திருக்கிறார்களே, அதாவது அமைச்சர் காமராஜூக்குத் தெரியுமா?
எனவே, கள நிலவரமே தெரியாமல் காவிரி டெல்டாவில் உள்ள ஒரு நபர், அமைச்சராகி விட்டோம் என்பதற்காக திமுக தலைவருக்கு பதிலறிக்கை என்ற பெயரில் பொய்யும், புரட்டும் வெளியிட்டு விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளைக் கொச்சைப்படுத்துவது மகா கேவலமான போக்கு!
திமுக தலைவர் ஆதாரமின்றி எந்தக் குற்றச்சாட்டையும் சொல்லமாட்டார் என்பதற்கு நெல் கொள்முதல் குறித்து உயர் நீதிமன்றம் விடுத்துள்ள கண்டனமும், அமைச்சரின் அறிக்கையில் ஒப்புக்கொண்டுள்ள உண்மைகளுமே அத்தாட்சியாக இருக்கிறது.
ஆகவே, அமைச்சர் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஏனென்றால் தன் துறையில் அப்படியொரு ஊழல் மழையில் அவர் நனைவதால், அந்த மகிழ்ச்சி அவருக்குக் கிடைத்திருக்கலாம். தனது சுகத்தை நினைத்துக் கொண்டு விவசாயிகளின் துயரத்தை அவமானப்படுத்தக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள் நெல்லை விற்க முடியாமல், விற்ற நெல்லுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தடுமாறுகிறார்கள். தாங்க முடியாத துயரத் தீயில் சிக்கித் துடிக்கிறார்கள் கடந்த 12.10. 2020, திங்கட்கிழமை அன்று டெல்டா மாவட்டமான திருவாரூருக்கு நான் சென்றிருந்த போது விவசாயிகள் படும் துயரை கண்கூடாகப் பார்க்க நேர்ந்தது. அந்த விவசாயிகளின் மனதைப் புண்படுத்தும் விதத்தில் விவசாயிகள் எல்லாம் மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் இருக்கிறார்கள் என்று கோயபல்ஸ் பிரச்சாரத்தில் அமைச்சர் காமராஜ் தயவு செய்து ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அமைச்சராக இருக்கும் நீங்கள் பொறுப்புடன் பதில் சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள். பிரதான எதிர்க்கட்சித் தலைவர் கூறும் குற்றச்சாட்டுக்குப் பரிகாரம் தேட முயற்சி செய்யுங்கள். விவசாயிகள் தங்கள் நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு 3,000 கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
அதுபற்றி அமைச்சர் வாய் திறக்காமல், மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகளுக்குத் துரோகம் செய்தது குறித்தும் பதில் பேசாமல், திமுக தலைவரின் ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுகளைப் பொய் எனத் திரித்து அறிக்கை விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
7 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago