அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்களில் இருந்து ஒதுக்கப்படும் மருத்துவ மேற்படிப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 விழுக்காடு இடங்களை ஒதுக்க உயர் நீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகும், அதற்கு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்புத் தெரிவித்திருப்பது இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வஞ்சக மனப்பான்மையையே காட்டுகிறது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (அக். 15) வெளியிட்ட அறிக்கை:
"இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின சமுதாயத்திற்கு மத்திய அரசின் 49.5 சதவீத இட ஒதுக்கீட்டினைப் பின்னப்படுத்தி, சிதைத்தெடுத்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியிருக்கும் மத்திய பாஜக அரசின் அராஜக, சட்டவிரோதப் போக்கிற்குத் திமுகவின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி, யூகோ வங்கி ஆகியவற்றுக்கு வங்கி அதிகாரிகள் பணிக்கான தேர்வில், இட ஒதுக்கீடு என்னும் பெயரில் இப்படியொரு மோசடியை, வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தியிருக்கிறது.
சமூக நீதியைக் கிள்ளுக்கீரையை விடக் கீழானதாக நினைத்துப் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின சமுதாயத்தினருக்குத் தொடர்ந்து மத்திய அரசு கேடு விளைவித்து வருவதும், இட ஒதுக்கீடு உரிமை படைத்த பெரும்பான்மை மக்களை எள்ளி நகையாடி வருவதும் மிகுந்த வேதனையளிக்கிறது.
2019-ம் ஆண்டுக்கான இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரை விடக் குறைந்த கட் ஆஃப் மதிப்பெண்களை பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு அளித்து, மற்ற சமுதாயங்கள் சார்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆவதை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மத்திய பாஜக அரசு தடுத்தது.
அதற்கு முன்பு, பாரத ஸ்டேட் வங்கியின் பணியாளர் தேர்விலும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரைக் காட்டிலும் குறைவான கட் ஆஃப் மதிப்பெண்களை முன்னேறிய வகுப்பினருக்கு அளித்து, இளைஞர்களின் வேலைவாய்ப்புகளைக் கெடுத்தது.
மத்திய சட்டப் பல்கலைக்கழகங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டினைக் கடைப்பிடிக்காமல், பிற்படுத்தப்பட்ட சமுதாயம் அறிவுசார்ந்த வழக்கறிஞர்களாக, நீதிபதிகளாக, நீதித்துறையைச் சிறப்பிக்கும் வாய்ப்பினைத் திட்டமிட்டுத் தடுத்து வருகிறது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகும், அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்களில் இருந்து ஒதுக்கப்படும் மருத்துவ மற்றும் மருத்துவ மேல்படிப்புக்கான இடங்களில் 50 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமல்ல, அந்த இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துவது குறித்த நடைமுறையை முடிவு செய்யும் வரை ஏற்கெனவே இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ள 27 சதவீத இட ஒதுக்கீட்டைக் கூட இந்த ஆண்டு வழங்க முடியாது என இன்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய பாஜக அரசு பிடிவாதமாக வாதிட்டிருப்பது, சத்திய பிரமாண வாக்குமூலமாகவே தாக்கல் செய்து எதிர்த்திருப்பது, மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வஞ்சக மனப்பான்மையைக் காட்டுகிறது.
பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இட ஒதுக்கீட்டுக் கொள்கை மீது குறி வைத்துத் தாக்குதல் நடத்தப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களின் சமூக நீதி பறிக்கப்படுகிறது. இந்நாட்டின் முன்னேற்றத்தில், நிர்வாகத்தில் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை ஓரங்கட்டப்படுகிறது.
தற்போதையை வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவன இட ஒதுக்கீடு மோசடியைப் பொறுத்தவரை, முதல் நிலைத் தேர்வு மட்டுமே நடைபெற்று முடிந்திருக்கிறது. இன்னும் முதன்மைத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடைபெறவில்லை.
ஆகவே, உடனடியாக மத்திய பாஜக அரசு தலையிட்டு, 49.5 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து 10 சதவீத இட ஒதுக்கீட்டைப் பிய்த்துப் பிரித்துக் கொடுத்திருக்கும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனத்தின் முதல்நிலை தேர்வை ரத்து செய்து, புதிய தேர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின சமுதாயத்தினருக்கு உள்ள 49.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எந்த பாதகமும் விளைவிக்காத வகையில் புதிய பணியாளர் தேர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இதற்கான நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்!
இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் ஏகப்பிரதிநிதி (ஓபிசி) என்று கூறிக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டினை, திட்டமிட்டுப் புறக்கணித்து, மண்டல் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை முழுவதுமாகச் செயல்படுத்தாமல், சமூக நீதியைச் சீர்குலைத்து வருவது வருத்தமளிக்கிறது.
நாட்டின் பெரும்பான்மையான சமுதாயத்தின் சமூக நீதி உரிமையைப் பறிக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகளும், சமூக நீதியின் மீது அக்கறையுள்ள அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டிய தருணம் வேகமாக வந்து கொண்டிருக்கிறது என்று மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்க விரும்புகிறேன்".
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago