மாநகராட்சி சொத்துவரி விதிப்பை குறைக்க உத்தரவிடக்கோரி ரஜினி தொடர்ந்த வழக்கில் கடுமையாக எச்சரித்த உயர் நீதிமன்றம் மனுவை வாபஸ் பெறாவிட்டால் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்படும் என எச்சரித்தது. மாலை ரஜினி தரப்பில் அளிக்கப்பட்ட மெமோவை ஏற்று வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபமும் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்தது. இந்த மண்டபத்திற்கு கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டு காலத்துக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சொத்து வரி செலுத்தும் படி, சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
பேரிடர் காலத்தில் இந்த தொகையை பாதியாக நிர்ணயிக்க விதிகள் உள்ளதால், அதுதொடர்பாக குறைத்து முடிவெடுக்கும்படி செப்டம்பர் 23-ம் தேதி மாநகராட்சிக்கு அனுப்பிய கடிதத்தின் மீது உரிய முடிவெடுக்க கோரி நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனுவில், “கடைசியாக கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி சொத்துவரி செலுத்தியுள்ளோம். சொத்து வரிகளை வழக்கமாக செலுத்தி வருகிறோம். கரோனா தொற்று பேரிடர் காரணமாக, மத்திய - மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்ததால், திருமண மண்டபத்தை யாருக்கும் வாடகைக்கு விடவில்லை. மார்ச் 24ம் தேதி பிறகு அனைத்து திருமணங்களும் ரத்து செய்யப்பட்டு, முன்பணமாக பெற்ற தொகையை திருப்பி வழங்கியுள்ளோம்.
அக்டோபர் 15-ம் தேதிக்குள் சொத்துவரியை செலுத்தாவிட்டால் 2 சதவித அபராதத்தை வட்டியுடன் செலுத்த வேண்டும் என நோட்டீசில் குறிப்பிட்டுள்ளது. மண்டபம் காலியாக இருந்ததால் மாநகராட்சி சட்டப்படி பாதி வரியை திருப்பி வழங்க வேண்டும் என்று விதிகள் உள்ளதால் அதன்படி நிர்ணயிக்க கோரி மாநகராட்சிக்கு அனுப்பிய கடிதத்தின் மீது தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுவரை சொத்து வரி மீது அபராதம் மற்றும் வட்டியை வசூலிக்க தடை விதிக்க வேண்டும்”. என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது ரஜினி தரப்பில் “பாதி வரி வசூலிக்கும்படி அனுப்பிய கடிதத்தில் உரிய முடிவெடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்”, என வாதிடப்பட்டது.
அதை ஏற்க மறுத்த நீதிபதி, செப்டம்பர் 23-ம் தேதி கடிதம் அனுப்பிவிட்டு செப்டம்பர் 29-ம் தேதியே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடிப்பீர்களா? என கேள்வி எழுப்பினார்
மாநகராட்சியிடம் மனு கொடுத்த ஒரு வாரத்தில் எப்படி வழக்கு தொடரமுடியும், நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவகாசம் வேண்டாமா, என தொடர்ந்து கேள்வி எழுப்பினர். நடவடிக்கை எடுக்காவிட்டால், நினைவூட்டல் கடிதம் அனுப்ப வேண்டும் என்ற நடைமுறையும் பின்பற்றவில்லையா. நீதிமன்றம் என்ன மாநகராட்சி அலுவலகமா, என்றும் கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கை கடுமையான அபராதம் விதித்து, தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரித்தார். அதன்பின்னர் இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக ரஜினி தரப்பில் பலமுறை கோரிக்கை வைத்ததை அடுத்து, அதற்கான மனுவை தாக்கல் செய்ய அறிவுறுத்தி வழக்கின் மீதான உத்தரவை மாலை பிறப்பிப்பதற்காக ஒத்திவைத்தார்.
இன்று காலை வாதங்களின்போது வழக்கை வாபஸ் பெறுவதாக ரஜினியின் வழக்கறிஞர் கோரிக்கை வைத்திருந்தார். அதற்கான மெமோவை மின்னஞ்சல் மூலம் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
வழக்கை வாபஸ் பெறுவதற்கான ரஜினி தரப்பிலிருந்து மின்னஞ்சல் மூலம் மெமோ தாக்கல் செய்யப்பட்டது. மெமோவை ஏற்றுக்கொண்ட நீதிபதி அனிதா சுமந்த், மனுவை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago