நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை; குவிண்டாலுக்கு ரூ.3000-ஆக உயர்த்திட வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை எவ்வித உச்சவரம்பும் இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யவும்; அதற்கு ஏற்றவாறு அனைத்து இடங்களிலும் தேவையான எண்ணிக்கையில் நேரடி கொள்முதல் நிலையங்களைத் திறக்கவும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“கொள்ளிடம் பகுதியில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டதால், 50 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்” என்றும்; “ எந்த ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும், 1000 மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் செய்வதில்லை” என்றும்; தினமும் விவசாயிகள் அனுபவிக்கும் தீராத இன்னல்களை, “வினோத விவசாயியின்” அதிமுக அரசு இதுவரை கண்டுகொள்ளாமல் இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

ஏற்கனவே உரிய நேரத்தில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்காமல் - காவிரி டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மூட்டை மூட்டையாக நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகிப் போனது. இப்போது கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டும் - வியர்வை சிந்தி விளைச்சல் செய்து விட்டு - தங்கள் நெல்லை எப்படி விற்பனை செய்யப் போகிறோம் என்ற வேதனைத் தீயில் விவசாயிகள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் முழுவதையும் கொள்முதல் செய்ய அரசு அதிகாரிகள் மறுத்து வருகிறார்கள். அறுவடை செய்த நெல்லைச் சேமித்து வைத்து விற்க விவசாயிகளுக்கு வாய்ப்பும் இல்லை; வசதிகளும் இல்லை. ஆகவே அறுவடை செய்தவுடன் நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்றால்தான் - அவர்களின் குறைந்தபட்ச வாழ்வாதாரமாவது தப்பிக்கும் என்ற சூழல்.

அதிக எண்ணிக்கையில் நேரடிக் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாதது அதிமுக ஆட்சியின் விவசாயிகள் விரோதப் போக்கிற்கான அடையாளமாகும். இதனால், ஆங்காங்கே பெய்யும் மழையில் நெல்மூட்டைகள் எல்லாம் வீணாகி - விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பிற்கும், துயரத்திற்கும் உள்ளாகித் தவிக்கிறார்கள்.

இன்று தினசரி நாளிதழ் ஒன்றின் தலையங்கத்தில் “நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பாஜக அரசும், மாநிலத்தில் உள்ள அதிமுக அரசும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைத்த “உற்பத்திச் செலவோடு 50 சதவீதம் கூடுதல் விலை கொடுக்க வேண்டும்” என்ற எண்ணம் கூட இல்லாமல் - இந்த ஆண்டு “பெயரளவுக்கு” ஒரு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்து - விவசாயிகளை மேலும் கவலைக் கிணற்றில் தள்ளி விட்டுள்ளன.

சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 1958 ரூபாய், சாதாரண ரக நெல்லுக்கு 1918 ரூபாய் என்ற குறைந்தபட்ச ஆதாரவிலை நிச்சயம் போதாது - இது விவசாயிகளின் வாழ்வில் நிம்மதியைத் தராது. கட்டுபடியாகாத இந்த விலை நிர்ணயத்தால், விவசாயிகள் அனைவருமே தங்களின் வருமானத்தை இழந்து - வாழ்வாதாரத்தைத் தொலைக்கும் துயரம் நிறைந்த இக்கட்டான சூழலுக்கு உள்ளாகியுள்ளனர்.

வேளாண் பெருமக்களுக்கு, விவசாயத்தின் மீதே ஒரு வெறுப்புணர்வும் விரக்தியும் ஏற்படும் சூழ்நிலைகளை உருவாக்க மத்திய - மாநில அரசுகள், தந்திரமாகத் திட்டமிட்டுச் செயல்படுகின்றனவோ என்ற சந்தேகமே எழுகிறது. இந்த விவசாயிகள் விரோத மனப்பான்மையை முதலில் அதிமுக அரசு கைவிட வேண்டும் - அதுவும் “விவசாயி” என்று தனக்குத்தானே “தற்புகழ்ச்சி” செய்து, தகுதியில்லாப் பட்டம் சூட்டிக் கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறவே கைவிட வேண்டும்.

ஆகவே, விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை எவ்வித உச்சரவரம்பும் இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யவும்; அதற்கு ஏற்றவாறு அனைத்து இடங்களிலும் தேவையான எண்ணிக்கையில் நேரடி கொள்முதல் நிலையங்களைத் திறக்கவும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

விவசாயிகளும் - விவசாயமும்தான் தமிழகத்தைத் தாங்கி நிற்கும் முக்கியத்தூண்கள் என்பதை இப்போதாவது உணர்ந்து - ஏற்கனவே அறிவித்துள்ள விலையை மறுபரிசீலனை செய்து - நெல் குவிண்டால் ஒன்றுக்கு 3000 ரூபாய் கிடைக்கும் அளவிற்கு - குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்திட வேண்டும்; நெல் விலையில் எந்தவிதக் கழிவும் செய்திட அனுமதிக்கக் கூடாது; என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்