அகில இந்தியத் தொகுப்பிற்கு அளிக்கப்படும் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் இந்த ஆண்டே பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 விழுக்காடு இடங்களை ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு கமிட்டியில் கோரவில்லை என மத்திய அரசு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது, அதிமுகவின் கபட நாடகம் வெட்டவெளிச்சமாகியுள்ளது என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:
அகில இந்தியத் தொகுப்பிற்கு அளிக்கப்படும் மருத்துவம், பல்மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளுக்கான இடங்களில், தமிழகத்தின் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இந்த ஆண்டே 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநில (அதிமுக) அரசு, கமிட்டிக் கூட்டத்தில் முன் வைக்கவில்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது” என்று வெளிவந்துள்ள அதிர்ச்சியான செய்தி, இடஒதுக்கீட்டுக் கொள்கையில் அதிமுக அரசின் இரட்டை வேடத்தை - மத்திய பாஜக அரசுடன் “கூட்டணி” வைத்து நடத்தும் கபட நாடகத்தை மீண்டும் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.
உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் திமுக சார்பில் வாதாடியதன் தொடர்ச்சியாக, “மருத்துவக் கல்வி இடங்களில் 50 சதவீத இட ஒதுக்கீட்டு உரிமை தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உண்டு” என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை 27 ஆம் தேதி வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்தது.
அத்தீர்ப்பின் அடிப்படையில் மூன்று மாதங்களுக்குள் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறைகள் பற்றி ஆராய ஒரு குழு அமைத்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. தீர்ப்பு வெளிவந்தவுடன் வரவேற்று அறிக்கை விடுத்த நான், “அகில இந்தியத் தொகுப்பிற்கு அளிக்கப்படும் மருத்துவம், பல்மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளுக்கான இடங்களில், இந்த ஆண்டே இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்” என்ற நியாயமான கோரிக்கையை வலியுறுத்தினேன்.
உடனே அதிமுக அரசும், “இந்த ஆண்டே இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்” என்று கூறி - “அடுத்த ஆண்டு முதல் இடஒதுக்கீடு வழங்கலாம்” என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்நிலையில் மத்திய அரசு - மாநில அரசு - இந்திய மருத்துவக் கவுன்சில் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டது. நேற்றைய தினம் (13.10.2020), இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் வந்த போது, “22.9.2020 அன்று கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இந்த ஆண்டே இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழக அரசின் பிரதிநிதி முன் வைக்கவில்லை.
அடுத்த ஆண்டு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது” என்றும்; “பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவரின் இடஒதுக்கீடு சதவீதங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் மாநில அரசிடம் கேட்ட சில விவரங்களை இன்னும் தமிழக அரசு தராததால் அதில் முடிவு எடுக்க இயலவில்லை” என்றும் கூறியிருக்கிறது மத்திய அரசு.
உடனே திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன், “உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலான இடஒதுக்கீட்டினை முடிவு செய்யும் வரை- அந்தத் தீர்ப்பிற்குப் பாதகமின்றி- ஏற்கனவே நடைமுறையில் உள்ள 27 சதவீத இட ஒதுக்கீட்டினை இந்த ஆண்டே மருத்துவக் கல்வி இடங்களில் வழங்கிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
இதனடிப்படையில் “அதற்கான வழிமுறைகளைப் பெறுமாறு” மத்திய அரசு வழக்கறிஞரை உச்சநீதிமன்றம் நேற்றைய தினம் அறிவுறுத்தியிருக்கிறது. மருத்துவக் கல்வி இட ஒதுக்கீட்டைப் பெறுவதில் அதிமுக அரசின் இரட்டை வேடமும், செயல்பாடும் மிகவும் கவலையளிக்கிறது..
“இந்த ஆண்டே இடஒதுக்கீடு வேண்டும்” என்று கோரிக்கை வைத்து உச்சநீதிமன்றத்திற்குப் போன அதிமுக அரசு - குட்கா வழக்கிற்குப் பயந்தோ அல்லது நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கிற்கு அஞ்சியோ - அதற்கான மத்திய அரசின் கமிட்டிக் கூட்டத்தில் இந்த இடஒதுக்கீடு துரோகத்தைத் தமிழகத்தில் மருத்துவக் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்குச் செய்திருக்கிறது.
பதவிக்காக - ஊழலுக்காக, “நீட் தேர்வில்” தமிழகக் கல்வி உரிமையைப் பறி கொடுத்தது போல், இப்போது இந்த இடஒதுக்கீட்டிலும் தமிழக மாணவர்களை வஞ்சிக்கிறது. ஆட்சியிலிருந்து போவதற்குள் - ஏற்கனவே செய்த துரோகங்கள் போதாது என்று, எஞ்சியிருக்கின்ற மாதங்களில் இன்னும் என்னென்ன துரோகங்களைத் தமிழ்நாட்டிற்கும்- தமிழக மக்களுக்கும் செய்துவிட்டுப் போக அதிமுக அரசு காத்திருக்கிறதோ.
இந்த ஆண்டே இடஒதுக்கீடு பெற வேண்டும் என்ற முயற்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையைப் போட்டு - பொறுப்பற்ற முறையில் செயல்பட்டிருக்கும் அதிமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே, திமுக ஏற்கனவே வலியுறுத்தியது போல், மருத்துவக் கல்வி இடங்களில் 50 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே பெறுவதற்கு அதிமுக அரசு இனியும் காலதாமதம் செய்யாமல் - மாநில இடஒதுக்கீட்டு உரிமையை இழப்பதற்குத் துணை போகாமல் விரைந்து செயல்பட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.
இருப்பது இன்னும் சில மாதங்கள். அதற்குள், தேர்தலுக்கான கூட்டணி பேரத்தை முன்னிறுத்தி, நம் பதவிக்குக் கடைசி நேர ஆபத்துக்களை ஏன் விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று நினைத்து முதல்வர் செயல்பட்டால் - அந்த மாபெரும் துரோகத்தைத் தமிழகம் மன்னிக்காது.
தமிழக இளைஞர்கள் எக்காலத்திலும் மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டார்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன். பாஜகவுடனான தேர்தல் கூட்டணிக்காக, எடப்பாடி அதிமுக எதையும் விட்டுக் கொடுக்கவும், பலி பீடம் ஏற்றவும் தயாராக இருக்கிறது என்பதைத் தமிழக மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்”.
இவ்வாறு ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago