மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவதில் தயக்கம் ஏன்? - பிற்படுத்தப்பட்டோர் உரிமையைப் பந்தாடுவது நியாயமல்ல: கி.வீரமணி

By செய்திப்பிரிவு

மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதில் தயக்கம் ஏன் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (அக். 14) வெளியிட்ட அறிக்கை:

"மத்தியத் தொகுப்புக்கு மருத்துவக் கல்விக்கான மாநிலங்கள் அளிக்கும் இடங்களில் பட்டப் படிப்புக்கும், பட்ட மேற்படிப்புக்கும் கொடுக்கும் இடங்களில் ஓபிசி என்ற பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு சட்டப்படி ஒதுக்கிட வேண்டிய இட ஒதுக்கீட்டினை மத்திய அரசும், அதன் சுகாதாரத் துறையும் தராமல் மறுப்பது சமூகநீதிக்கு விரோதம் என்று திராவிடர் கழகம், திமுக, மதிமுக, காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பாமகவும் வழக்குத் தொடர்ந்தன. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான அதிமுகவும், தமிழ்நாடு அரசும்கூட இந்தப் பிரச்சினையில், இதே நிலைப்பாட்டினை வலியுறுத்தி, வழக்கு தொடர்ந்தது.

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வில் வழங்கிய தீர்ப்பில், மாநிலத்தில் தற்போது அமலில் உள்ள 69 சதவிகிதப்படி பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு தரப்படவேண்டும்; மூன்று மாதத்திற்குள் ஒரு கமிட்டி போட்டு, அக்கமிட்டியில் தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை செயலாளரும் இடம்பெற்று, மத்திய அரசின் பிரதிநிதி, மத்திய சுகாதாரத் துறை பிரதிநிதி ஆகியோர் முடிவு செய்து தரவேண்டும் என்றார்.

இதற்கிடையில், தமிழ்நாடு அரசு சார்பாக இவ்வாண்டே அதனைத் தரவேண்டும் என்பதாக ஓர் தனி வழக்கினையும், இதன் தொடர்பாகப் போட்டனர்; திமுக இவ்வழக்கில் கேவியட் மனுவும் போட்டிருந்தது.

டி.ஆர்.பாலு எம்.பி., நாடாளுமன்றத்தில் கேள்வி!

நாடாளுமன்றத்தின் திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, இது சம்பந்தமாக ஏன் மருத்துவக் கல்வித் துறையில் தாமதம் என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கு நேற்று (அக். 13) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, 69 சதவிகிதப்படி, 50 சதவிகித பிற்படுத்தப்பட்டவருக்கான புள்ளி விவரங்கள் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பற்றி குழு கேட்டு, அக்குழு 22.9.2020 கலந்தாலோசித்து, அது 2021-க்காக மட்டுமே என்று அந்தக் கலந்தாய்வில் கூறப்பட்டது. இப்படி சாக்கு போக்கு கூறிய நிலையில், மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் தரப்பட்டது.

27 சதவீதத்தை அளிப்பதில் எந்தச் சிக்கலும் இல்லையே...

கேவியட் மனு மூலம் தன்னை இணைத்துக் கொண்ட திமுக வழக்கறிஞர் வில்சன் எம்.பி., 'வரும் 16.10.2020 தேதியில் நீட் தேர்வு முடிவை வெளிட இருப்பதால், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் 27 சதவிகிதம் கொடுப்பதுபோல, இவ்வழக்குக்கு எந்தவித பாதகமில்லாமல் (without prejudice to the case and committee’s decision for this year alone) கமிட்டி முடிவுக்குக் குந்தகமில்லாமல், குறைந்தது 27 சதவிகித இட ஒதுக்கீடு மத்திய அரசால் வழங்கப்படலாம். இது ஒரு தற்காலிக ஏற்பாடாக ஏற்றுக்கொண்டு, இந்தக் கல்வியாண்டே இட ஒதுக்கீடு தரவேண்டும்' என்று வாதிட்டார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 'இது சரியான நல்ல யோசனைதான். மத்திய அரசின் பதிலைக் கேட்டுக் கூற வேண்டும்' என, மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞரிடம் (ASG) தெரிவித்துள்ளனர்!

பொறுத்திருந்து பார்ப்போம்!

அரசியலமைப்புச் சட்டப்படியும், உயர் நீதிமன்றத்தில் தெளிவாகத் தரப்பட்டுள்ள தீர்ப்பின்படியும் அளிக்க வேண்டிய இடங்களைத் தராது, இப்படி ஏனோ தானோவென்று, நாடாளுமன்றத்தின் இத்தனை உறுதிமொழிக்குப் பிறகும், தாமதிக்கப்படுகிறது. மீண்டும் வழக்கு 15.10.2020 அன்று விசாரிக்கப்பட உள்ளது. என்ன முடிவு வருகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட மக்களின் மருத்துவப் படிப்பு உரிமைகள் இப்படி பந்தாடப்படுவது விசித்திரமாகவும், வேதனையாகவும் உள்ளது!".

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்