லட்சக்கணக்கானோரின் கனவைக் கலைத்த அறிவிப்புக்கு எதிர்ப்பு: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமன வயதுவரம்பு நீக்கப்படுமா?

By த.சத்தியசீலன்

தமிழகத்தில் 40 வயதை கடந்தவர்களுக்கு இனி அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி வழங்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது லட்சக்கணக்கானோரின் ஆசிரியர் பணி கனவைக் கலைத்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர், ஆசிரியர் சங்கத்தினர்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர இதுவரை வயது உச்ச வரம்பு இல்லாமல் இருந்தது. ஒருவர் ஓராண்டு பணி நிறைவு செய்யும் தகுதியை பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் கடந்த 30 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரே நிபந்தனை. இதன்படி ஆசிரியர் பணிக்கு தகுதிபெற்ற ஒருவர் அவரது 57-ஆவது வயதில் கூட பணியில் சேர முடியும். தமிழ்நாட்டில் ஓய்வு பெறும் வயது 59-ஆக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயதை 58-ஆக நிர்ணயிப்பதற்குப் பதிலாக 40-ஆக குறைத்திருப்பது ஏற்புடையதல்ல என்கின்றனர், ஆசிரியர் தரப்பினர்.

இது குறித்து தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் கே.பி.ஓ. சுரேஷ், பொதுச் செயலாளர் பி.மனோகரன் ஆகியோர் கூறியதாவது:

மத்திய அரசின் சார்பிலும், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளின் சார்பிலும் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்பதற்கு வயது வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஒருவர் 55 வயதிலும் கூட ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் ஆசிரியர் ஆக முடியாது என்பது தமிழக அரசின் முரண்பாடான அறிவிப்பாக உள்ளது.

தமிழ்நாட்டில் 2013-ம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் சுமார் 80,000 பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆசிரியர் பணி நியமனம் நடைபெறாத நிலையில், அவர்களால் பணியில் சேர முடியவில்லை. அதற்குள் அவர்களின் 7 ஆண்டு தகுதிக்காலம் முடிவடைந்து விட்டது. இப்போது அவர்கள் மீண்டும் தகுதித் தேர்வு எழுதி தான் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற முடியும் என்று அரசு அறிவித்துவிட்டது.

அவர்களில் பெரும்பாலானோர் 40 வயதைக் கடந்தவர்கள் எனும் நிலையில், மீண்டும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றாலும் கூட அவர்களால் ஆசிரியர் பணியில் சேர முடியாது. அவர்கள் எந்தத் தவறும் செய்யாத நிலையில், கொள்கை முடிவு என்ற பெயரில் அவர்களை தண்டிப்பது நியாயமற்றது.

ஆண்டுதோறும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், வயது உச்சவரம்பு நிர்ணயம் செய்வது சமூகநீதிக்கு எதிரானது. ஆசிரியர் பணிக்கு வயது வரம்பை நீக்குவது எந்த வகையிலும் தகுதிக் குறைவு இல்லை. ஒருவர் 50 வயதில் ஆசிரியர் பணியில் சேருகிறார் என்றால், அதுவரை அவர் பணியில் இல்லாமல் இருந்தார் என்று பொருள் அல்ல.

மாறாக, அதுவரை அவர் குறைந்த ஊதியத்தில் தனியார் பள்ளியில் பணியாற்றி வந்திருப்பார். அப்படிப்பட்டவரை நியமிக்கும் போது, அவரது அனுபவம் கற்பித்தலுக்கு கூடுதல் தகுதியாக இருக்குமே தவிர, தகுதி குறைவாக இருக்காது.

இந்த அரசாணை செயல்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்களின் ஆசிரியர் பணி கனவு சிதைக்கப்படும். எனவே, அரசாணையை திரும்பப் பெற்று, ஏற்கெனவே உள்ள நடைமுறையே தொடரும் என்று அரசு அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்