மெரினாவில் மக்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மெரினா கடற்கரையில் மீன் விற்பனையை முறைப்படுத்துவது, மெரினாவைச் சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் நீதிமன்றத்தில் காணொலிக் காட்சி மூலம் ஆஜராகினர்.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணையின்போது, ஊரடங்கு இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், மெரினாவில் பொதுமக்களை அனுமதிக்க முடியாது என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் ரமேஷ் அடங்கிய அமர்வில் இன்று (அக். 13) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, "மெரினாவில் ஆக்கிரமிப்புகள் முளைத்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இதை எப்படி சரிசெய்யப் போகிறீர்கள்?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட்டு விட்டன என்றார்.
மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மண்டல உதவி ஆணையர் தலைமையிலான குழு, லூப் சாலையில் 65 ஆக்கிரமிப்புகளை அகற்றியதாகவும், வாழ்வாதாரம் இழந்ததால் வியாபாரம் செய்ய வந்து விட்டதாகவும், மீனவர் சங்கத் தலைவர்களுடன் கலந்துபேசி, இனிமேல் ஆக்கிரமிப்புகள் முளைக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்தார்.
பின்னர், மீன் சந்தை அமைப்பது, நடை மேம்பாலம் அமைப்பது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, நிலத்தை வகை மாற்றம் செய்வது தொடர்பான கோப்பு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து நவம்பர் 11-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு எப்போது அனுமதி வழங்கப்படும் என நீதிபதிகள் கேட்டதற்கு பதிலளித்த ஆணையர் பிரகாஷ், மெரினாவில் அனுமதி வழங்கினால் ஏராளமான மக்கள் கூடிவிடுவர் எனவும், மெரினாவில் மக்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மெரினாவில் நவம்பர் மாதம் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைகளை மேம்படுத்த வேண்டும் எனவும், மெரினாவைத் தூய்மையாக வைக்க ஏதுவாக கடற்கரையில் தினமும் காலை, மாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்படி சென்னை மாநகராட்சி ஆணையருக்கும், காவல் துறை ஆணையருக்கும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். நீதிபதிகளும் நடைப்பயிற்சி செய்தால் எல்லாம் சரியாகும் எனவும் தெரிவித்தனர்.
பின்னர் வழக்கு விசாரணையை நவம்பர் 11-ம் தேதிக்குத் தள்ளிவைத்த நீதிபதிகள், அன்றைய தினமும் காணொலியில் ஆஜராக இரு அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago