அரசு விழா மேடைகளிலேயே இடம்பெறும் கட்சி நிகழ்வுகள்: புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் போட்டி?

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் அரசு விழா நடத்தப் படும் மேடைகளிலேயே கட்சி நிகழ்ச்சிகளையும் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கவனித்து வருவது அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச் சர் சி.விஜயபாஸ்கர் சார்பில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் கரோனா நிவாரண பொருட்களாக அரிசி, மளிகை பொருட்கள் வழங் கப்பட்டு வருகின்றன.

இதே பொருட்கள், புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியிலும் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம், இதுபோன்ற பொருட்கள் மாவட்டத்தின் ஏனைய சட்டப்பேரவைத் தொகுதிகளில் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், புதுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட எ.குளவாய்ப் பட்டியில் நடமாடும் ரேஷன் கடை தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக விழா மேடை அருகே அதிமுக கொடியை ஏற்றிவைத்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அதற்கான கல்வெட்டையும் திறந்து வைத்தார். பின்னர், ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடமாடும் ரேஷன் கடையை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மேடையில் இருந்தவாறே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர், அவர் பேசிக்கொண்டி ருந்தபோதே அதிமுகவினர் ஒவ்வொருவராக மேடையேறினர். அதைத்தொடர்ந்து, பிற கட்சி களில் இருந்து விலகியோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அவர்களுக்கு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வேட்டி வழங்கி வரவேற்றார்.

ஒரு கட்டத்தில் அதிமுகவினர் மேடையில் அதிக அளவில் ஏறத் தொடங்கியதும், முன்வரிசையில் இருந்த ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள் ஒவ்வொருவராக மேடையில் இருந்து பக்கவாட்டில் கீழே இறங்கி வெளியேறினர்.

இதேநிலைதான் குரும்பிவயல், கிடாரம்பட்டி, பருக்கைவிடுதி ஆகிய கிராமங்களில் நடைபெற்ற நேரடி நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழாக்களிலும் நடந்தது. அரசு நிகழ்ச்சிகளுக்கு செல்லும் வழியில் இடையிடையே சில கிராமங்களில் அதிமுக சார்பிலான நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. மேலும், வயல்வெளியில் வேலை செய்யும் பெண்களிடம் சென்று அதிமுக அரசின் திட்டங்களைப் பற்றியும் அமைச்சர் கூறி வரு கிறார்.

அரசு விழாவை அரசியலுக்காக மாற்றுவது அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்துக்கு உள்ளாவதோடு, அரசு அலுவலர்களுக்கும் தர்மசங் கடத்தை ஏற்படுத்துவதாக தெரி கிறது.

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2001-ல் போட்டியிட்டு முதல் முறையாக வெற்றி பெற்றதைப் போன்று மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான சூழலையும் அமைச்சர் உருவாக்கி வருவதாக அவருடன் நெருக்கமாக உள்ள கட்சி நிர்வாகிகள் தெரிவிக் கின்றனர்.

இதற்கிடையே அமைச்சருடன் நெருக்கமின்றி உள்ள, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாக உள்ள புதுக் கோட்டை தொகுதி முன்னாள் எம்எல்ஏ வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான், புதுக்கோட்டை நகராட்சி முன்னாள் தலைவர் ஆர்.ராஜசேகரன் ஆகியோர் அதிமுக ஒருங்கிணைப்பாளர், வழிகாட்டுக் குழுவினர் அனைவரையும் நேரில் சந்தித்து வருகின்றனர்.

தேர்தலில் தங்களுக்கு புதுக் கோட்டை தொகுதிக்கு சீட் ஒதுக்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாக உள்ளதாக அவர்களது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE