200 தொகுதிகளுக்கும் மேல் திமுக போட்டியிடப் போகிறது என்று ஓர் அனுமானத்தை மையமாக வைத்து விவாதிக்கிறார்கள். திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என எத்தனிப்பவர்கள் கடைசியில் கலகலத்துப் போவார்கள் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (அக். 12) வெளியிட்ட அறிக்கை:
"இந்தியத் திருநாட்டின் பன்முகத்தன்மையை அழித்து, அனைத்து முனைகளையும் ஒற்றைமயப்படுத்துவதையும், உழைக்கும் மக்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டை 'இந்தியா கார்ப்பரேட் லிமிடெட்' என உரு - உள்ளடக்க மாற்றம் ஏற்படுத்துவதையும் மட்டுமே தனது முழுநேர வேலைத்திட்டமாகக் கொண்டு செயல்பட்டுவரும் மத்திய பாஜகவை வீழ்த்த வேண்டும்; தன்மானம் தவறியும், மாநில உரிமைகளைக் காவு கொடுத்தும், தனது சுயநலன் - பாதுகாப்பு மட்டுமே கருதியும், பாஜகவுக்கு அனுதினமும் அடிமைச் சேவகம் செய்துவரும் அதிமுகவை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்; என்ற உறுதியுடன், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி வடிவமைக்கப்பட்டது திமுக தலைமையிலான கூட்டணி.
அந்தக் கூட்டணி அமைந்த உடனேயே, நாடாளுமன்றத் தேர்தலில் புதுவையையும் சேர்த்து 40-க்கு 39 என்ற வெற்றியைப் பெற்று, வரலாற்றில் வைர முத்திரை பதித்தது.
திமுக தலைமையிலான கூட்டணி, தமிழக மக்களின் நலனைப் பாதிக்கும் பல்வேறு பொதுப் பிரச்சினைகள் குறித்து அவ்வப்போது கூடி, கலந்தாலோசனை செய்து, நேரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
பக்குவப்பட்ட புரிந்துணர்வோடும், பண்பட்ட நேச மனப்பான்மையோடும், இந்தக் கூட்டணி, வெகுமக்களின் ஏகோபித்த ஆதரவுடன், 2021 சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி வெற்றிகரமாக வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது.
திமுகவின் தலைமையிலான கூட்டணிக்குள்ளே, ஏதாவது திருகு தாளங்களைச் செய்து, தூய சுமுகமான உறவு நிலையைக் கெடுத்து, திசைதிருப்பி விடலாம் என்ற சபலத்துடன் சில சக்திகள் இறங்கியிருக்கின்றன.
ஊசிமுனைக் காதளவு துளையேனும் போட்டு, திமுக கூட்டணியின் கட்டமைப்பை அசைக்க முடியுமா என்று அவர்கள் பார்க்கிறார்கள். அவர்களுடைய ஆசையும் நோக்கமும் பாஜக - அதிமுக கூட்டணிக்கு எந்த வழியிலாவது உதவிட வேண்டும் என்பதுதான். அதற்கு ஓரிரண்டு பத்திரிகைகள் - ஊடகங்கள் துணைபோவதும், அரசியல் விமர்சகர் - பத்திரிகையாளர் போர்வையில் ஒருசார்பு கருத்தாளர் சிலர் நுழைந்து விரிவுரை ஆற்றுவதும், எந்தவித பலனையும் தந்துவிடப் போவதில்லை என்பதை நன்கு அறிந்தே செய்கிறார்கள்.
அது எத்தகைய நடுநிலை, எப்படிப்பட்ட நேர்மை, எவ்வாறான மக்கள் பணி என எண்ணிப் பார்க்கவே வியப்பாக இருக்கிறது.
200 தொகுதிகளுக்கும் மேல் திமுக போட்டியிடப் போகிறது என்று ஓர் அனுமானத்தை மையமாக வைத்து விவாதிக்கிறார்கள். தேர்தல் அறிவிப்பு வெளியாகி, கூட்டணிக் கட்சிகள் ஒருமுறை அல்ல, இரண்டு மூன்று முறை அமர்ந்து பேசி, போட்டியிடப் போகும் தொகுதிகள் இறுதி செய்யப்படுவதுதான் வாடிக்கை. அதற்குள் இவர்கள் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. இவையெல்லாம் விவாதத்திற்கான பொருளே அல்ல!
திமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடப் போகிறது என்பதை அதிகாரபூர்வமாக முடிவெடுத்து அறிவிப்பதற்குப் பல மாதங்களுக்கு முன்பே, 200 தொகுதிகளுக்கும் மேல் போட்டியிடப் போகிறது என்ற அனுமானமும், அது தொடர்பான விவாதங்களும், தேவை அற்றவை மட்டுமல்ல; உள்நோக்கம் கொண்டவையும் ஆகும் என்று தமிழக மக்கள் அறிவார்கள்.
திமுக கூட்டணியை மட்டும் குறி வைத்தே செய்திகள் வெளியிடப்படுவதும், விவாதங்களைக் கட்டமைப்பதும், மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. அத்தகைய விவாதங்கள் பொழுதுபோக்கவே பயன்படும்.
அதீதமான கற்பனை மற்றும் அளவில்லா ஊகத்தின் அடிப்படையில், எதையாவது சொல்லி, வலிவுடனும் பொலிவுடனும் திகழும் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என எத்தனிப்பவர்கள் கடைசியில் கலகலத்துப் போவார்கள்.
திமுக கூட்டணியை அந்தச் சக்திகளால் ஆட்டவோ அசைக்கவோ முடியாது. வெற்றிக் கூட்டணியாம், திமுக கூட்டணியின் பாதையும் பயணமும், தெளிவும் திட்பமும் வாய்ந்தவை; எவராலும் அதன் கவனம் சிந்தாது, சிதறாது!".
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago