தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: வன்னியர்கள் - சீர்மரபினருக்கு தனித்தனி இட ஒதுக்கீடு தேவை; முதல்வருக்கு ராமதாஸ் கடிதம்

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் அறிவுறுத்தல்படி தமிழ்நாட்டில் சீர்மரபினர் கணக்கெடுப்பை நடத்துவதால் அவர்களுக்கும், வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்குமான இட ஒதுக்கீடு கடுமையாகப் பாதிக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதைத் தடுக்க தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்,
வன்னியர்கள், பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினருக்குத் தனித்தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி தமிழக முதல்வருக்கு ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

ராமதாஸின் இந்தக் கடிதத்தை பாமகவின் இணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஏ.கே.மூர்த்தி, செய்தித் தொடர்பாளர்கள் வழக்கறிஞர் கே.பாலு. வழக்கறிஞர் ந.வினோபா பூபதி ஆகியோர் அடங்கிய குழு தமிழக முதல்வரை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (அக். 12) நேரில் சந்தித்து வழங்கியது.

அந்தக் கடிதத்தின் விவரம்:

"மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை கேட்டுக் கொண்டவாறு தமிழ்நாட்டில் சீர்மரபினர், நாடோடிகள், அரை நாடோடிகள் கணக்கெடுப்பை மேற்கொள்ள மாநில அரசு ஒப்புக் கொண்டிருப்பதால், சமூக அளவிலும், சமூக நீதி அளவிலும் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்தும், அந்தப் பாதிப்புகளைக் களைய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இக்கடிதத்தை நான் எழுதுகிறேன்.

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

நாடு முழுவதும் உள்ள சீர்மரபினர், நாடோடிகள் மற்றும் அரை நாடோடிகள் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்த முடிவு செய்துள்ள மத்திய அரசு, அதற்காக அவர்களை அடையாளம் காணும் நோக்குடன், அவர்கள் குறித்த கணக்கெடுப்பை அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில அரசுகளின் மூலமாக நடத்தத் திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் டிசம்பர் மாத இறுதிக்குள் அத்தகைய கணக்கெடுப்பை நடத்தி விவரங்களைத் தாக்கல் செய்யும்படி மத்திய அரசு அறிவுறுத்தி இருப்பதாகவும், அத்தகைய கணக்கெடுப்பை நடத்தி புள்ளிவிவரங்களை வழங்குவதற்குத் தமிழக அரசு ஒப்புக்கொண்டிருப்பதாகவும் அறிகிறேன்.

தமிழ்நாட்டில் அத்தகையதொரு கணக்கெடுப்பை நடத்துவது சமூகப் பதற்றத்தையும், சட்டம் - ஒழுங்கு சிக்கலையும் ஏற்படுத்திவிடும் என அஞ்சுகிறேன்.

மத்திய அரசு தயாரித்துள்ள சீர்மரபினர், நாடோடிகள் மற்றும் அரை நாடோடிகள் பட்டியலும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் (கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு) சட்டம் - 1993-ன் (The TamilNadu Backward Classes, Scheduled Castes and Scheduled Tribes (Reservation of Seats in Educational Institution and of Appointments or Posts in the Services under the State) Act, 1993) 3 (ஏ) பிரிவின்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள சீர்மரபினர் பட்டியலும் பெருமளவில் மாறுபட்டவை.

அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் நாடோடிகள் என எந்தச் சமுதாயமும் அறிவிக்கப்படவில்லை; அதற்கான பட்டியலும் வெளியிடப்படவில்லை. மத்திய அரசின் சீர்மரபினர், நாடோடிகள் மற்றும் அரை நாடோடிகள் பட்டியலுக்கும், தமிழக அரசின் சீர்மரபினர் பட்டியலுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருப்பதை 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் தமிழக அரசுக்கு எழுதிய கடிதங்களில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

இத்தகைய சூழலில், தமிழ்நாட்டில் சீர்மரபினர், நாடோடிகள் மற்றும் அரை நாடோடிகள் இருக்கலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் அதுகுறித்த கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றதே தவறு ஆகும்.

மத்திய அரசின் இக்கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்திருக்க வேண்டும். இத்தகைய கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும். இந்த உண்மையை தமிழக அரசுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் விரிவாக விளக்கியிருப்பதாக எனக்கு நெருங்கிய வட்டாரங்கள் மூலமாக அறிகிறேன்.

தமிழ்நாட்டில் சீர்மரபினர் என்ற பிரிவினரை அவர்கள் சார்ந்த சமுதாயத்தின் பெயரைக் கொண்டு மட்டும் தீர்மானித்து விட முடியாது. சென்னை மாகாணத்தில் 1911-ம் ஆண்டு முதல் 1947-ம் ஆண்டு நடைமுறையில் இருந்த குற்றப்பரம்பரைச் சட்டத்தின்படி, சில பூகோளப் பகுதிகளில் உள்ள சில சமூகங்கள் மட்டுமே குற்றப்பரம்பரையாக அறிவிக்கப்பட்டன.

அவர்கள் தான் அச்சட்டத்தின்படி கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் யார்? அவர்கள் எந்த பூகோளப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதையெல்லாம் வரையறுக்காமல், வெறும் சாதிப் பெயரின் அடிப்படையில் சீர்மரபினர் கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், குறிப்பிட்ட பெயர்களிலான சாதிகளைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக சீர்மரபினராக சேர்க்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு சேர்க்கப்பட்டால், உண்மையான சீர்மரபினருக்குக் கிடைக்க வேண்டிய பயன்கள், அவர்கள் சார்ந்த சாதியின் பெயரைத் தாங்கிக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் அனைவருக்கும் கிடைக்கும். அது பிற சாதிகளைச் சேர்ந்த மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதிக்கு எதிராக போராடத் தொடங்கினால், அது மிகப்பெரிய சட்டம் - ஒழுங்கு சிக்கலாக மாறும்.

தமிழ்நாட்டில் சீர்மரபினர் கணக்கெடுப்பு நடத்துவதால் பொதுவாக மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், குறிப்பாக வன்னியர்களும் தான் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் சீர்மரபினரும், நாடோடிகளும் பட்டியலினத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் தான் அவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின் ஒரு பிரிவாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் சீர்மரபினர் பூகோளப் பகுதிகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகின்றனர். ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும்போது சீர்மரபினராகவும், வேறு பகுதிகளில் வாழும் போது பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் கருதப்படுவார்கள்.

அப்படிப்பட்டவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டதால், சில பிற்படுத்தப்பட்ட சாதியினர், தாங்கள் குறிப்பிட்ட பகுதியில் வசிப்பதாக பொய்யான தகவல்களைக் கொடுத்து, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று சான்றிதழ் பெற்று பயன்களை அனுபவிக்கின்றனர்.

அதனால், சீர்மரபினர், வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் சமூக நீதி உரிமை திட்டமிட்டுச் சூறையாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் சீர்மரபினர் கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், அது உண்மையான சீர்மரபினருக்குரிய வரையறைகளின் அடிப்படையில் நடத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை; மாறாக ஒரு பகுதியில் சீர்மரபினராக அறிவிக்கப்பட்ட சாதியின் பெயரில் தமிழ்நாடு முழுவதும் வாழும் அனைவரும் தங்களின் பெயர்களை சீர்மரபினராகப் பதிவு செய்து கொள்வர்.

அதனால் சீர்மரபினரின் எண்ணிக்கை மிக அதிக அளவில் அதிகரிக்கும். அது தமிழகத்தில் இட ஒதுக்கீடு வழங்குவதிலும், சமூக நீதி வழங்குவதிலும் எல்லையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தும்; அதைச் சரி செய்யமுடியாது.

1989-ம் ஆண்டு வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு குறித்து அப்போதைய முதல்வர் கருணாநிதியுடன் நான் நடத்திய பேச்சுகளுக்குப் பிறகு, யாரிடமும் கருத்துக் கேட்காமல் வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருடன் சீர்மரபினரையும் சேர்த்து புதிய இட ஒதுக்கீட்டுப் பிரிவு உருவாக்கப்பட்டது.

அப்போதே சீர்மரபினர் என்ற போர்வையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பல சாதிகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டைச் சூறையாடுவர் என்று அச்சம் தெரிவித்தேன். அதுதான் கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இப்போது சீர்மரபினர் கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் பத்தில் ஒரு பங்கு கூட உண்மையான பயனாளிகளுக்குக் கிடைக்காது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு சுரண்டப்படுவதை அரசு அனுமதிக்க முடியாது.

சமூகத்தின் அடித்தட்டில் உள்ள சீர்மரபினரை முன்னேற்ற வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதற்காக அவர்களுக்குக் கூடுதல் உரிமைகளும், சலுகைகளும் வழங்கப்படுவதை பாமக வரவேற்கிறது.

ஆனால், சீர்மரபினருக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளை சாதியின் பெயரில் உள்ள ஒற்றுமையைப் பயன்படுத்திக் கொண்டு பிறர் கொள்ளையடிப்பதை மட்டும்தான் பாமக எதிர்க்கிறது.

இந்தச் சிக்கலுக்கு எந்தச் சமுதாயமும் பாதிக்கப்படாமல், அனைத்துச் சமுதாயங்களுக்கும் உரிய உரிமைகள் வழங்கப்படுவதற்கும், சீர்மரபினருக்குக் கூடுதல் உரிமைகளும், சலுகைகளும் வழங்கப்படுவதற்கும் சில எளிய தீர்வுகளை பாமக முன்வைக்கிறது.

1. சீர்மரபினருக்கான கணக்கெடுப்பை தனித்து நடத்த முடியாது. அவர்கள் வரையறுக்கப்பட்ட ஒரு பகுதிக்குள் மட்டும் தனித்து வாழவில்லை. அவர்கள் பரவலாக மற்ற சமுதாய மக்களுடன் கலந்துதான் வாழ்கிறார்கள் என்பதால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே சீர்மரபினரைக் கணக்கெடுக்க முடியும்.

அவ்வாறு செய்யும்போது அனைத்து சாதியினரையும் கணக்கெடுப்பது எளிதானது. அதற்கான எந்த கூடுதல் செலவும் ஆகாது. சீர்மரபினர் கணக்கெடுப்புக்கு ஆகும் செலவை மத்திய அரசே ஏற்றுக் கொள்கிறது என்பதால், தமிழ்நாட்டில் மத்திய அரசின் செலவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்து விட முடியும்.

2. சீர்மரபினர் என்ற பிரிவு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புடன் இணைக்கப்பட்டு இருக்கும் வரை சீர்மரபினர் என்ற பெயரில் சான்றிதழ் பெற்று மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை வளர்ந்த சமூகங்கள் பறித்துக் கொள்ளும் கொடுமை தொடரும். இச்சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் சீர்மரபினரை தனிப்பிரிவாக அறிவித்து, அவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்கலாம்.

3. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இடம்பெற்றிருக்கும் தமிழகத்தின் பெரும்பான்மை சமூகமான வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்கலாம். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் உள்ள மற்ற சாதிகளுக்கு அவர்களின் மக்கள்தொகைப்படி தனித்தொகுப்பு இட ஒதுக்கீடு வழங்கலாம்.

இவ்வாறு செய்வதன் மூலம் அனைவருக்கும் முழுமையான சமூக நீதி கிடைப்பதை உறுதி செய்ய முடியும். எனவே, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துதல், வன்னியருக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்குதல், சீர்மரபினருக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள பிற சமுதாயங்களுக்கு தனித்தனி தொகுப்பு இட ஒதுக்கீட்டை வழங்குதல் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வராகிய தாங்களைக் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு அக்கடிதத்தில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்