மாநில அரசின்கீழ் செயல்படும் அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசோடு இணைக்கும் உரிமையைத் துணைவேந்தருக்கு அளித்தது யார்? என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (அக். 12) வெளியிட்ட அறிக்கை:
"உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலைக்கழகம் ஒளிவீசிக் கொண்டுதான் இருக்கிறது. இந்தப் பல்கலைக்கழகத்தை உயர்ப் புகழ் நிறுவனமாக ஆக்குவது என்ற பெயரில், மத்திய அரசிடம் தாரை வார்ப்பதைக் கண்டித்து 2019 டிசம்பர் 19 ஆம் தேதியன்றே 'விடுதலை'யில் அறிக்கை வாயிலாக எச்சரித்து இருந்தோம்.
2019 டிசம்பரிலேயே எச்சரித்தோம்!
இந்தப் பல்கலைக்கழகத்தில் படித்த பலரும் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் உள்பட உலகப் புகழ்பெற்றவர்களாக ஒளிவீசுகிறார்கள். இந்த நிலையில், அண்ணா பெயரில் ஒளிரும் பல்கலைக்கழகத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்றும், உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும் என்றும், மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டால் 1,000 கோடி ரூபாய் அளிக்கப்படும் என்றும் கூறி, அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசு விழுங்கும் பம்மாத்தில் மயங்கி, தமிழ்நாடு அரசு பலியாக வேண்டாம் என்று அந்த அறிக்கையில் எச்சரித்து இருந்தோம்.
மாநில அரசிடம் நிதியை அளிக்கட்டும்!
உலகத் தரத்தில் உயர்த்த ரூ.1,000 கோடியை மத்திய அரசு தரத் தயாராக இருந்தால், அந்த நிதியை மாநில அரசுக்கே அளித்து, அண்ணா பல்கலைக்கழகத்தை உலகத் தரத்துக்கு உயர்த்தலாமே! மத்திய அரசுக்குக் கொண்டு சென்றால்தான் இதைச் செய்ய வேண்டுமா என்ற கேள்வியையும் எழுப்பி இருந்தோம்.
இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து!
தமிழ்நாட்டில் செயல்பாட்டில் இருந்துவரும் 69 விழுக்காடு எந்த முறையில் செயல்படுத்தப்படுகிறதோ, அந்த முறையில் செயல்படுத்தப்பட முடியுமா? மத்திய அரசு இட ஒதுக்கீட்டை அளிப்பதாகவே வைத்துக் கொள்வோம், மத்திய அரசு கடைப்பிடிக்கும் சதவீதத்தில்தானே வழங்கப்பட முடியும்? மத்திய பல்கலைக்கழகங்களின் நிலை என்ன? என்றெல்லாம் பத்து மாதங்களுக்குமுன் நாம் எழுப்பிய கேள்விகள் எவ்வளவுத் தொலைநோக்கானவை என்பது இப்போது புரியவில்லையா?
தமிழக மாணவர்களுக்குப் பயன்படவேண்டாமா?
அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் வரிப் பணத்தில், தமிழ்நாட்டு மாணவர்களுக்கு, ஏழை, எளியவர்களுக்குப் பயன்படவேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. நுழைவுத் தேர்வு கிடையாது. இந்த நிலையில், மத்திய அரசு வசம் ஒப்படைக்கப்பட்டால், நுழைவுத் தேர்வை வைத்து, ஏழை, எளிய, நடுத்தர, முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்களை உள்ளே நுழையவிடாமல் கதவடைக்கும் சதி இதன் பின்னணியில் இருக்கிறது, உலகத்தரம் என்ற பெயரில் வடநாட்டு, வெளிநாட்டு மாணவர்கள் ஆக்கிரமிக்கும் இந்தப் போக்கை அனுமதிக்கலாமா?
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், மாநில அரசின்கீழ் இல்லையா? அவருக்கு நேரிடையான தலைமை டெல்லியில்தான் இருக்கிறதா?
துணைவேந்தருக்கு அதிகாரம் உண்டா?
தமிழ்நாடு அரசின் அனுமதி பெறாமல், மாநில அரசின்கீழ் இயங்கும் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாநில அரசு எடுக்க வேண்டிய கொள்கை முடிவை தான்தோன்றித்தனமாகத் தன் கையில் எடுத்துக்கொண்டு, மத்திய அரசுக்கு நேரடியாகக் கடிதம் எழுதுவது, ஒழுங்குத் தவறு அல்லவா? இதன்மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டுமே
தனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதைக் கூட அறியாத, பலகீன அரசாக ஆகிவிட்டதே தமிழக அரசு.
அந்தக் கடிதத்தில் துணைவேந்தர் சூரப்பா குறிப்பிட்டு இருப்பது என்ன? 'உயர்புகழ் நிறுவனமாக அண்ணா பல்கலைக்கழகத்தை தரம் உயர்த்த மாநில அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டியதில்லை; இப்போது தரும் நிதியை அளித்தாலே போதுமானது. மத்திய அரசு திட்டத்தின்படி அண்ணா பல்கலைக்கழகத்தை உயர்புகழ் நிறுவனமாக அறிவித்தால், மாணவர்கள் செலுத்தும் கட்டணம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட பல்கலைக்கழகம் வசூலிக்கும் கட்டணங்கள் மூலம் பல்கலைக்கழகம் தனக்குத்தானே ஆண்டுக்கு ரூ.314 கோடி வீதம் 5 ஆண்டுகளில் ரூ.1,570 கோடியைத் திரட்டிக் கொள்ள இயலும்' என்று துணைவேந்தர் சூரப்பா முடிவெடுத்து மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளார்.
கட்டணக் கொள்ளைக்கு ஏற்பாடு!
இதன் பொருள் என்ன? மாணவர்களின் கட்டண விகிதத்தை உயர்த்தி ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு இங்கு இடம் இல்லை என்று கூறும் அறிவிப்புப் பலகைதானே இது?
2014 ஆம் ஆண்டில் கட்டணம் ஆண்டுக்கு ரூபாய் 50 ஆயிரமாக இருந்தது. 2016 இல் ரூபாய் இரண்டு லட்சமாக உயர்த்தப்பட்டது. துணைவேந்தர் கூறுவதைப் பார்த்தால் இது மேலும் அதிகமாகும். அந்த நிலையில், பெரும் செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகளின் மைதானமாக அண்ணா பல்கலைக்கழகம் உருமாற்றப்பட உள்ளது, எச்சரிக்கை! எச்சரிக்கை!!
உயர்சாதி - கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கம் - உள்நோக்கம்!
மத்திய பாஜக அரசின் கொள்கை என்பது உயர்சாதியினரின் ஆதிக்கம், கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கம் என்ற இரு சக்கரங்களைக் கொண்டு பயணிப்பதாகும். அதன் எதிரொலியே அண்ணா பல்கலைக்கழகத்தின் மீதான மோசமான பார்வை!
அண்ணா எண்ணம் காப்பாற்றப்படட்டும்!
மாநில அரசின் உரிமைகளை நிலை நாட்ட, சமூகநீதி காப்பாற்றப்பட, தமிழ்நாடு மாணவர்கள் பயன்பெற, குறிப்பாக, ஏழை, எளிய மக்கள், கிராமப்புற மக்கள், முதல் தலைமுறையாக அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்று கனவு காணும் பிரிவினர்களின் எண்ணம் ஈடேற, மத்திய அரசின் கண்ணிவெடிக்குப் பலியாகாமல், மத்திய அரசின் முகவராக செயல்படும் துணைவேந்தரின் முயற்சி தடுக்கப்பட, மாநில உரிமை, தமிழன் நிலை உயர கொள்கை வகுத்துச் செயல்பட்ட அண்ணாவின் பெயரில் கட்சியையும், ஆட்சியை நடத்தும் அதிமுக ஆட்சி, மத்திய அரசின் சூழ்ச்சியைப் புரிந்துகொண்டு தமிழ்நாட்டின் உரிமையைக் காக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
எல்லா வகையிலும் மத்திய அரசுக்குச் சரணாகதி அடைந்துவிட்டது அதிமுக அரசு என்ற பழி தொடர வேண்டாம், முதுகெலும்போடு செயல்படட்டும் அதிமுக அரசு!".
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago