அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசின் நிதி தேவையில்லை என்றும், அதற்கான உயர்சிறப்பு அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்றும் முக்கிய முடிவை எடுத்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுத துணைவேந்தர் சூரப்பா என்ன மாநிலத்தின் மற்றொரு முதல்வரா? அல்லது அண்ணா பல்கலைக்கழகத்தைக் காவிமயமாக்க முதல்வர் - ஆளுநர் - துணைவேந்தர் ரகசியக் கூட்டணியா? என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (அக். 12) வெளியிட்ட அறிக்கை:
"ஐந்து ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தால் 1,500 கோடி ரூபாய் நிதி திரட்டிக் கொள்ள முடியும். மாநில அரசின் நிதிப் பங்கீடு இல்லாமலேயே பல்கலைக்கழகத்தால் சமாளிக்கவும் முடியும். ஆகவே, உயர் சிறப்பு அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்று, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள், தமிழக உயர்கல்வி வளர்ச்சியில், குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில், அக்கறை கொண்டிருக்கும் அனைவருக்கும் அதிர்ச்சியைத் தரும்.
அதிமுக அரசின் சார்பில் இதுகுறித்து ஆராய்ந்து, கொள்கை முடிவு எடுக்க அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் பரிந்துரை இன்னும் வெளிவராத சூழலில், ஒரு துணைவேந்தர் எப்படித் தன்னிச்சையாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்? முதல்வர் பழனிசாமி ரகசியமாகக் கொடுத்த அனுமதி காரணமா? என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுகிறது.
» பாஜகவில் இணைவதாக தகவல்: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து குஷ்பு நீக்கம்
» மதுரையில் ஊராட்சித் தலைவர், ஊழியர் வெட்டிக்கொலை: டிஐஜி, எஸ்.பி., நேரில் விசாரணை
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து என்று கூறிவிட்டு, மாநில அரசும் நிதியளிக்க வேண்டும் என்று கூறி வருகிறது மத்திய அரசு. 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு எவ்விதப் பாதிப்பும் வராது என்று எவ்வித உத்தரவாதத்தையும் அதிகாரபூர்வமாக அளிக்க மத்திய பாஜக அரசு இன்றுவரை மறுத்து வருகிறது.
மாநில நிதி நிலைமை, மாநிலத்தில் உள்ள இட ஒதுக்கீடுக் கொள்கை போன்றவற்றில் முடிவு எடுக்கவும், மாநில அரசின் நிதி தேவையில்லை, பல்கலைக்கழகமே அந்த நிதியைத் திரட்டிக் கொள்ளும் என்றும் மிக முக்கியமான முடிவுகளை எடுத்து, துணைவேந்தர் மத்திய பாஜக அரசுக்குக் கடிதம் எழுதுகிறார் என்றால், அவர் என்ன மாநிலத்திற்கு இன்னொரு முதல்வர் போல் செயல்படுகிறாரா?
துணைவேந்தராக இருக்கும் சூரப்பாவின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய இருக்கும் நேரத்தில்; தமிழகத்திற்கும், மாணவர்களுக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக, அண்ணாவின் புகழ்ப் பெயருக்கும் இப்படியொரு துரோகத்தைச் செய்ய அவருக்கு எப்படி தைரியம் வந்தது?
தமிழகத்தில் நிலவும் இட ஒதுக்கீட்டின் ஆணிவேரில் வெந்நீரை ஊற்றும் செயலில் ஒரு துணைவேந்தர் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதோடு, துணைவேந்தரின் அதிகார அத்துமீறலுக்குத் திமுகவின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணா பல்கலைக்கழகம், தன்னிச்சையாக எப்படி நிதி திரட்டும்? அதுவும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சுமையாகவே மாறிவிடும். அப்படியொரு அபாயத்தை, போகிற போக்கில் திட்டமிட்டு ஒரு துணைவேந்தர் உருவாக்கியிருக்கிறார் என்றால், கல்வியைக் காவிமயமாக்க அவருக்கு அண்ணா பல்கலைக்கழகம்தான் கிடைத்ததா?
உலகம் முழுவதும் தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள துணைவேந்தர், தமிழ்நாட்டுக்கு விரோதமாகச் செயல்படுவதை எப்படி வேந்தராக இருக்கும் ஆளுநர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதும் புரியாத மர்மமாக இருக்கிறது.
இந்நிலையில், துணைவேந்தர் சூரப்பா எழுதிய கடிதத்தை ஏதோ அது தனிப்பட்ட ஒருவரின் முயற்சியாக நான் கருதவில்லை. துணைவேந்தர் - முதல்வர் பழனிசாமி - தமிழக ஆளுநர் ஆகியோர் கூட்டணியாக, எப்படியாவது அண்ணா பல்கலைக்கழகத்தின் உயர்கல்வியை, காவிமயமாக்கிடச் செய்யும் திட்டமிட்ட சூழ்ச்சி நடவடிக்கையாகவே எண்ணிட வேண்டியதிருக்கிறது.
குறிப்பாக, முதல்வர், உயர் கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் எல்லாம் நீட் சட்டம் குறித்துப் பேசப் போகிறோம் என்று கூறிவிட்டு ராஜ்பவனுக்குச் சென்று, ஆளுநரைச் சந்தித்ததில் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தரின் இந்தக் கடிதத்திற்கும் அனுமதி கொடுக்கப்பட்டதா என்பதை முதல்வர் பழனிசாமி உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அதிமுக அரசின் தீமை பயக்கும் உள்நோக்கத்தை அறிந்துதான் அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரிக்கும் அதிமுக அரசின் முடிவினைச் சட்டப்பேரவையில் திமுக எதிர்த்தது.
ஆகவே, இந்தக் கடிதம் எழுதப்பட்டிருப்பதில் முதல்வருக்கு உடந்தை இல்லை எனில், இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும், மாநில நிதி உரிமைக்கு விரோதமாகவும், மத்திய அரசுக்கு அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பாக, தன்னிச்சையாகக் கடிதம் எழுதியுள்ள துணைவேந்தர் சூரப்பாவை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று வேந்தராக இருக்கும் தமிழக ஆளுநருக்கு முதல்வர் பழனிசாமி பரிந்துரை செய்ய வேண்டும்.
மேலும், 'துணைவேந்தர் எழுதியுள்ள கடிதத்திற்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தமில்லை. 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு உரிய அதிகாரபூர்வமான உத்தரவாதம் இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்சிறப்பு அந்தஸ்தை ஏற்றுக்கொள்ள முடியாது' என்றும் பிரதமருக்கு உடனடியாகக் கடிதம் எழுதி, தனது எதிர்ப்பை முதல்வர் பழனிசாமி வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும்; உயர்சிறப்பு அந்தஸ்துக்கு வழிவிடும் துணைவேந்தர் கடிதத்திற்குத் துணைபோகும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரிக்கும் சட்ட முன்வடிவைத் தமிழக ஆளுநர் நிராகரித்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இட ஒதுக்கீட்டுக் கொள்கையைக் காவு கொடுக்க முயலும் துணைவேந்தர் கடித விவகாரத்தில் அதிமுக அரசு கால தாமதம் இன்றி நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் திமுகவின் இளைஞரணி, மாணவரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்".
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago