சென்னைக் குடிநீர் தேவைக்காக கட்டப்பட்டுவரும் கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அப்பணிகள், இம்மாத இறுதியில் நிறைவுபெறும் என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி ஆந்திர அரசு, கண்டலேறு அணையிலிருந்து சென்னைக் குடிநீர் தேவைக்காக ஆண்டுதோறும் 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை வழங்கவேண்டும். அந்நீரை சேமித்து வைக்கக் கூடிய பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,257 மில்லியன் கன அடி மட்டும்தான்.
ஆகவே, திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை பகுதிகளில் உள்ள 2 ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணி 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் 800.65 ஏக்கர் பட்டா நிலம், 629.92 ஏக்கர் புறம்போக்கு நிலம், 54.59 ஏக்கர் காப்புக்காடு என 1,485.16 ஏக்கர் நிலத்தில் அமைகிறது. இப்பணி கடந்த 2013-ம் ஆண்டு செப்.11-ம் தேதி தொடங்கப்பட்டது.
ரூ.380 கோடி மதிப்பிலான இப்பணியை 2 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில், பட்டா நிலத்தை கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. நீர்த்தேக்கத்தில் 7.15 கி.மீ. தொலைவுக்கு கரை அமைக்கும் பணியில், ஏற்கெனவே 5 கி.மீ. தொலைவுக்கான பணி முடிவுற்றது. மீதமுள்ள பணி கடந்த 2018 இறுதியில் தொடங்கி 2019-ல் முடிவுக்கு வந்தது. அதேபோல், கிருஷ்ணா கால்வாய் ஜீரோ பாயின்ட் அருகேயிருந்து, நீர்த்தேக்கம் வரை 8.6 கி.மீ. தொலைவுக்கு நீர்த்தேக்க கால்வாய் அமைக்கும் பணியும் கடந்த 2019-ல் முடிவுற்றது.
1,100 ஏக்கர் நீர்ப்பரப்புக் கொண்ட இந்த நீர்த்தேக்கத்தில், ஆண்டுக்கு இருமுறை 500 மில்லியன் கன அடி வீதம் தேக்கி வைக்கப்படும் ஒரு டிஎம்சி நீரை சென்னை குடிநீர் வாரிய நீரேற்று நிலையத்துக்கு அனுப்ப ஏதுவாக உள்வாங்கி கோபுரம் அமைக்கும் பணி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முடிவுற்றது.
அதுமட்டுமல்லாமல், கண்ணன்கோட்டை, தேர்வாய் ஆகிய கிராமங்களின் 700 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற ஏதுவாக 5 மதகுகளை அமைக்கும் பணி ஏற்கெனவே முடிவுற்றுள்ளது.
ஆந்திராவின் சத்தியவேடு காட்டுப் பகுதிகளின் ஓடைகள் மூலம் வரும் மழைநீர், நீர்த்தேக்கத்துக்கு வரும் வகையில் கண்ணன் கோட்டை பகுதியில் உள்வாங்கி அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, கரடிபுத்தூர் பகுதிகளில் இருந்துவரும் மழைநீர், நீர்த்தேக்கத்துக்கு வருவதற்காக உள்வாங்கி அமைக்கும் பணி, நீர்த்தேக்க கரை கைப்பிடி சுவர்கள், உள்வாங்கி கோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் இம்மாத இறுதியில் நிறைவுபெறும். அதன் பிறகு, வடகிழக்கு பருவமழையால் கிடைக்கும் தண்ணீர் மற்றும் கிருஷ்ணா நீரை புதிய நீர்த்தேக்கத்தில் தேக்கி வைக்கலாம்.
மேலும், புதிய நீர்த்தேக்கத்தில் சேமிக்கப்படும் நீரை, ஊத்துக்கோட்டை அடுத்த தாராட்சி அருகே கிருஷ்ணா கால்வாய்க்கு எடுத்துச் செல்லும் வகையில் சென்னைக் குடிநீர் வாரியத்தால், சுமார் 16 கி.மீ. தொலைவுக்கு ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago