ஆசிரியர் நியமனத்துக்கு வயது வரம்பு 40 ஆகக் குறைக்கப்பட்டது அநீதி: உடனடியாக நீக்க வேண்டும்; அன்புமணி

By செய்திப்பிரிவு

ஆசிரியர் நியமனத்திற்கு வயது வரம்பு 40 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது அநீதி என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அன்புமணி ராமதாஸ் இன்று (அக். 10) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி நியமனத்திற்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், அதன்படி 40 வயதைக் கடந்தவர்களுக்கு இனி ஆசிரியர் பணி வழங்கப்படாது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. லட்சக்கணக்கானவர்களின் ஆசிரியர் பணி கனவைக் கலைக்கும் இந்த அறிவிப்பு மிகவும் அநீதியானது.

தமிழக அரசின் இந்த ஆணையை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்களில் வயது வரம்பு நிர்ணயிக்கப்படாத ஒரே பணி ஆசிரியர் பணி மட்டும்தான்.

ஒருவர் ஓராண்டு பணி நிறைவு செய்யும் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் கடந்த 30 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரே நிபந்தனை ஆகும்.

அதன்படி, ஆசிரியர் பணிக்குத் தகுதிபெற்ற ஒருவர் அவரது 57 ஆவது வயதில் கூட பணியில் சேர முடியும். தமிழ்நாட்டில் ஓய்வுபெறும் வயது 59 ஆக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது 58 ஆக உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். மாறாக 40 ஆக குறைக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது.

தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்குத் தேவையான குறைந்தபட்சக் கல்வி பெற்றவர்கள் 7.12 லட்சம் பேர் ஆவர். தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி இடைநிலை ஆசிரியர் பணிக்கு 1 லட்சத்து 66 ஆயிரத்து 543 பேர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 3 லட்சத்து 14 ஆயிரத்து 152 பேர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 2 லட்சத்து 31 ஆயிரத்து 501 பேர் என மொத்தம் 7 லட்சத்து 12 ஆயிரத்து 196 பேர் பதிவு செய்துள்ளனர்.

இவர்கள் தவிர இன்னும் சில லட்சம் பேர் பதிவு செய்வதற்காக காத்திருக்கின்றனர். இவர்களில் சில லட்சம் பேர் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர். இவர்களில் 40 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் 40 வயதைக் கடந்தவர்கள்.

இட ஒதுக்கீட்டு வகுப்பினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகை வழங்கப்பட்டிருந்தாலும் கூட, அதையும் கடந்து ஆசிரியர் பணிக்குத் தகுதி பெற்றுள்ள லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவர். அதற்கு அரசு காரணமாக இருக்கக் கூடாது.

மத்திய அரசின் சார்பிலும், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளின் சார்பிலும் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்பதற்கு வயது வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஒருவர் 55 வயதிலும் கூட ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்; ஆனால், அதில் அவர் தேர்ச்சி பெற்றாலும் கூட ஆசிரியர் ஆக முடியாது என்பது முரண்பாடுகளின் உச்சம் அல்லவா?

தமிழ்நாட்டில் 2013 ஆம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் சுமார் 80 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆசிரியர் பணி நியமனம் நடைபெறாத நிலையில், அவர்களால் பணியில் சேர முடியவில்லை. அதற்குள் அவர்களின் 7 ஆண்டு தகுதிக்காலம் முடிவடைந்து விட்டது. இப்போது அவர்கள் மீண்டும் தகுதித்தேர்வு எழுதி தான் ஆசிரியர் பணிக்குத் தகுதி பெற முடியும் என்று அரசு அறிவித்து விட்டது.

அவர்களில் பெரும்பான்மையினர் 40 வயதைக் கடந்தவர்கள் எனும் நிலையில், அவர்கள் மீண்டும் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றாலும் கூட அவர்களால் ஆசிரியர் பணியில் சேர முடியாது. அவர்கள் எந்தத் தவறும் செய்யாத நிலையில், கொள்கை முடிவு என்ற பெயரில் அவர்களைத் தண்டிப்பது எவ்வகையில் நியாயம்?

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 7,500 இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட 12 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

அதன்படி, அடுத்த சில ஆண்டுகளுக்கு ஆசிரியர் நியமனம் இருக்காது எனும் நிலையில், இப்போது 35 வயதைக் கடந்த எவருக்கும் இனி ஆசிரியர் பணி கிடைக்காது. ஆண்டுதோறும் தொடர்ச்சியாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், ஆசிரியர் பணி நியமனத்திற்கு உச்சவரம்பு நிர்ணயம் செய்வது சமூக நீதிக்கு எதிரான செயல் ஆகும்.

ஆசிரியர் பணிக்கு வயது வரம்பை நீக்குவது எந்த வகையிலும் தகுதிக்குறைவு இல்லை. ஒருவர் 50 வயதில் ஆசிரியர் பணியில் சேருகிறார் என்றால், அதுவரை அவர் பணியில் இல்லாமல் இருந்தார் என்று பொருள் அல்ல. மாறாக, அதுவரை அவர் குறைந்த ஊதியத்தில் தனியார் பள்ளியில் பணியாற்றி வந்திருப்பார்.

அப்படிப்பட்டவரை நியமிக்கும் போது, அவரது அனுபவம் கற்பித்தலுக்குக் கூடுதல் தகுதியாக இருக்குமே தவிர, தகுதிக் குறைவாக இருக்காது. இவற்றையெல்லாம் கடந்து ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு இல்லை என்று கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வந்த நடைமுறையை இப்போது அவசர அவசரமாக மாற்ற வேண்டிய தேவை எதுவும் இல்லை. இதை தமிழக அரசு உணர வேண்டும்.

அரசுப் பள்ளி ஆசிரியர் பணி நியமனத்திற்கு 40 வயது உச்சவரம்பு என்ற தமிழக அரசின் ஆணை செயல்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்களில் ஆசிரியர் பணி கனவு சிதைக்கப்படும்.

எனவே, ஆசிரியர் பணி நியமனத்திற்கு வயது வரம்பு நிர்ணயிக்கும் அரசாணையைத் திரும்பப் பெற்று, இப்போதுள்ள நடைமுறையே தொடரும் என்று அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்".

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்