தமிழகத்துக்கு எளிதாக 200 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து பெரிதாகப் பேசப்பட்டு பின்னர் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அத்திட்டம் குறித்து அடுத்தகட்ட நகர்வாக முதல்வர்கள் மாநாட்டை பிரதமர் தலைமையில் கூட்டவேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:
“காவிரி பாசன மாவட்டங்களின் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்திற்கான ஆயத்தப் பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. மிக முக்கிய பாசனத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் காட்டப்படும் தாமதம் மிகவும் ஏமாற்றமளிக்கிறது.
தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்கும் இடையிலான காவிரி நீர்ப்பகிர்வு சிக்கல் 150 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. நடப்பாண்டில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பியதாலும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டிலிருந்தே 100 அடிக்கும் கூடுதலாக இருந்ததாலும் எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை.
காவிரி நீர்ப்பகிர்வு சிக்கலின்றி நடப்பதை உறுதி செய்ய உச்ச நீதிமன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள போதிலும், கர்நாடக அணைகள் நிரம்பவில்லை என்றால், தமிழகத்திற்குத் தண்ணீர் கிடைக்காது என்பது உறுதி.
காவிரி பாசன மாவட்டங்களில் எந்தத் தடையும் இல்லாமல் முப்போகம் விளைந்த செழிப்பான காலம் மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றால், அதற்கு காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவது மட்டும் தான் தீர்வு ஆகும். ஒவ்வொரு ஆண்டும் கோதாவரி ஆற்றில் 3000 டிஎம்சி தண்ணீர் ஓடுகிறது.
அவற்றில் 1,100 டிஎம்சி நீர் வீணாக கடலில் கலக்கிறது. அதில் 1000 டிஎம்சி நீரை ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் வழியாக காவிரியில் இணைப்பதுதான் இந்தத் திட்டமாகும். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டுக்கு 200 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.
காவிரி பாசன மாவட்டங்களில் கவலையின்றி விவசாயம் நடப்பதை உறுதி செய்ய இந்தத் தண்ணீர் போதுமானதாகும். அதனால்தான் இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டம் பல பத்தாண்டுகளுக்கு முன்பே பேசப்பட்ட திட்டம்தான் என்றாலும் கூட, அதைச் செயல்படுத்துவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது 2018-ம் ஆண்டில்தான். அப்போது மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்த நிதின்கட்கரி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் காட்டிய ஆர்வத்தைப் பார்த்தபோது, நடப்பாண்டில் பணிகள் தொடங்கப்பட்டு, அடுத்த சில ஆண்டுகளில் திட்டம் நடைமுறைக்கு வந்து விடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருந்தது.
ஆனால், கடந்த ஓராண்டுக்கும் மேலாக இத்திட்டம் குறித்து பெரிய அளவில் பேசப்படுவதில்லை என்பதும், மத்திய அரசின் உயர்மட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படுவதில்லை என்பதும் மிகவும் கவலையளிக்கின்றன. காவிரி-கோதாவரி இணைப்புக்கான விரிவான வரைவு திட்ட அறிக்கை ஓராண்டுக்கு முன்பே தயாரிக்கப்பட்டு விட்டது.
இத்திட்டத்தின் பயனாளிகளான மராட்டியம், சத்தீஸ்கர், ஒடிஷா, தெலங்கானா, கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் வரைவு திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து விட்டால், அதை இறுதி செய்து, திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அடுத்த கட்டத்திற்கு நகர முடியும். ஆனால், ஓராண்டில் சொல்லிக்கொள்ளும்படியாக எந்த நகர்வும் இல்லை.
காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். தமிழக அரசிடமும் பாமக வலியுறுத்தி வருகிறது. ஆனால், எதுவும் நடக்கவில்லை. காவிரி - கோதாவரி இணைப்பின் முதல் கட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் சந்தித்துப் பேச தமிழக அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அதற்குள்ளாக கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து விட்டதால், அந்தப் பேச்சுவார்த்தையை நடத்த முடியவில்லை.
காவிரி-கோதாவரி இணைப்பு எனும் கனவுத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.60,000 கோடி செலவாகும் என்று இரு ஆண்டுகளுக்கு முன் மதிப்பிடப்பட்டிருந்தது. உடனடியாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தத் தவறினால், அடுத்த சில ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடிக்கும் கூடுதலாக அதிகரித்து விடும்.
அதன்பின்னர் அத்திட்டத்தைச் செயல்படுத்துவது சாத்தியமற்றதாகி, இது நனவாகாத கனவுத் திட்டமாகவே வரலாற்றில் இடம்பெற்று விடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டு விடக் கூடாது. காவிரி-கோதாவரி திட்டத்தை விரைந்து செயல்படுத்த அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்கான நடவடிக்கைகளின் முதல் கட்டமாக காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் குறித்து விவாதிப்பதற்காக மராட்டியம், சத்தீஸ்கர், ஒடிஷா, தெலங்கானா, கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் மாநாட்டை பிரதமர் தலைமையில் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
அந்த மாநாட்டில் வரைவு திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அடுத்தகட்டப் பணிகளை நோக்கி நகர வேண்டும். அடுத்த ஓராண்டுக்குள்ளாகவாவது காவிரி - கோதாவரி ஆறுகள் இணைப்புத் திட்டப் பணிகள் தொடங்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்”.
இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago