எங்கள் ஆட்சி ஜெயலலிதா புகழை உயர்த்தும்; தன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக திமுகவுடன் கூட்டணி என பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகிறார்: கே.பி.முனுசாமி பேட்டி

By நந்தினி வெள்ளைச்சாமி

பல யூகங்கள், விமர்சனங்களுக்கு மத்தியில் 2021-ம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் பழனிசாமியே அறிவிக்கப்பட்டுள்ளார். "அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்" என, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

அதிகாரங்கள் வரையறுக்கப்படாமலேயே கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் அடுத்து என்ன என்ற கேள்விக்கு பதில் அளிக்கிறார், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி.

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்துள்ளீர்கள். கட்சியிலும் ஆட்சியிலும் வலுவான தலைமையாக அவர் உருவெடுத்துவிட்டதாகக் கருதுகிறீர்களா?

எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கியவர். அந்தக் கட்சியைக் காப்பாற்றியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவரால் உருவாக்கப்பட்ட தலைவர்தான் இப்போது முதல்வராக இருக்கிறார். அவரால் உருவாக்கப்பட்ட தலைவரை நாங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டோம். அதனடிப்படையில் ஒருங்கிணைப்பாளர், தலைமைக் கழக நிர்வாகிகள், வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள் ஆகியோர் சேர்ந்து, அதிமுக தலைமையில் அமைகிற கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அவரை அறிவித்திருக்கிறோம்.

வழிகாட்டுக் குழுவிலும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அதிகம். கட்சியும் முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிட்டது. ஓபிஎஸ் முக்கியத்துவம் கட்சியில் குறைகிறதா?

அதற்கு வாய்ப்பே இல்லை. ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்கும் இயக்கம் அதிமுக அல்ல. அப்படி ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்க வேண்டிய சூழல் வந்தால் அந்த இயக்கம் சோதனையைத்தான் சந்திக்கும். எல்லோரும் இணைந்துதான் செயல்படுவோம். ஈபிஎஸ் அணி-ஓபிஎஸ் அணி என்பதெல்லாம் இல்லை. இரு அணிகளும் இணைந்த பின்பு கட்சியை வலுப்படுத்தக்கூடிய முயற்சிகளை முன்னெடுத்துச் சென்றுள்ளோம்.

ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டவர் ஈபிஎஸ். ஆனால், அவரால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓபிஎஸ். இந்த முடிவால் கட்சியில் ஓபிஎஸ் புறக்கணிக்கப்பட்டதாகத் தோன்றவில்லையா?

ஓபிஎஸ்தானே முதல்வர் வேட்பாளரை முன்மொழிந்திருக்கிறார். எந்த வித்தியாசமும் இல்லை. ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர்தான் துணை முதல்வர் ஓபிஎஸ். ஆனால், அவரேதான் இந்த முடிவை அறிவித்திருக்கிறார்.

எனில் இடைப்பட்ட நாட்களில் நடந்த சர்ச்சைகள், முடிவு எடுப்பதில் குழப்பங்கள் ஏன்?

ஜெயலலிதா, எம்ஜிஆர் போன்றவர்கள் 'பாப்புலர் லீடர்ஸ்', 'மாஸ் லீடர்ஸ்'. நாங்களெல்லாம் 'பாப்புலர் லீடர்ஸ்' இல்லை. எம்ஜிஆருடன் எங்களை ஒப்பிட முடியாது. ஜெயலலிதாவுடன் எங்களை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. எங்களுக்கு நாங்களே முன்னிறுத்தி ஜெயித்து ஆட்சி அமைக்க முடியாது. இந்த ஆட்சி ஜெயலலிதாவின் தலைமையில் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்ற ஆட்சி. அவர் உருவாக்கி இந்த ஆட்சியைக் கையில் கொடுத்திருக்கின்றார். இந்த ஆட்சியில் அவருடைய புகழை மேலும் உயர்த்தும் வகையிலும், தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல திட்டங்களையும் கொடுத்திருக்கிறோம். அவர்களின் மறைவுக்குப் பிறகு எங்களுக்குள்ளாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் இருக்கின்றனர். இப்படி சமகாலத் தலைவர்கள் நிறையப் பேர் இருக்கின்றனர்.

சமகாலத் தலைவர்கள் நிறையப் பேர் இருப்பதால், அமர்ந்து கருத்துகளைப் பரிமாறி, எதிர்காலத் தேர்தலில் யாரை முன்னிறுத்தினால் நன்றாக இருக்கும் என்பதை விவாதித்து இப்போதைய முதல்வரையே வருங்கால முதல்வர் வேட்பாளராகத் தேர்வு செய்து ஒருங்கிணைப்பாளர் அறிவித்திருக்கிறார்.

ஜெயலலிதா போன்ற 'மாஸ் லீடர்' இல்லை என்கிறீர்கள். எப்படி வரும் தேர்தலைச் சந்திக்க உள்ளீர்கள். உங்களுக்கான சவாலாக எதைக் கருதுகிறீர்கள்?

'மாஸ் லீடர்ஸ்' எங்களிடம் இல்லாவிட்டாலும், அவர்கள் கட்டுக்கோப்பாக கட்டி வைத்திருக்கின்ற அவர்களுடைய புகழ், தியாகம், நற்பணி எங்களுக்கு உறுதுணையாக இருக்கும். இரண்டு தலைவர்களிடம் கற்ற அரசியல் பாடத்தின் வாயிலாக தேர்தலைச் சந்திக்கக்கூடிய அனைத்துத் திறமைகளும் எங்களிடத்தில் இருக்கின்றன. அதனடிப்படையில் நாங்கள் இந்தத் தேர்தலைச் சந்தித்து உறுதியாக வெற்றி பெறுவோம்.

பாஜக, திமுகவுடன் கூட கூட்டணி அமைக்கும், பாஜக அங்கம் வகிக்கும் கட்சி ஆட்சியில் இருக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளாரே?

மாநிலத் தலைவர் எல்.முருகன் அதிமுகவுடன்தான் கூட்டணி இருக்கும் எனக் கூறியிருக்கிறார். பொன். ராதாகிருஷ்ணன் ஏற்கெனவே தலைவராக இருந்து பதவியில் இல்லாதவர். அவர் தன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இப்படிச் சொல்லியிருக்கிறார். அது எங்களுக்கு அவசியமில்லை. ஜே.பி.நட்டா, அமித் ஷா, மோடி இவர்கள்தான் சொல்ல வேண்டும். கூட்டணியில் இருப்பார்களா இருக்க மாட்டார்களா என கட்சித் தலைமைதான் முடிவு செய்வார்கள்.

இடையில் இருப்பவர்கள் பேசுவதுபோல் நாங்கள் பேசினால் நாகரிகமாக இருக்காது. அவர் மாதிரி நாங்களும் பேசுவதற்கு விரும்பவில்லை. அவருடைய கருத்தின் அடிப்படையில் பார்த்தால், பாஜக தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது, களத்தில் இருக்கும் கட்சிகள் அதிமுக, திமுகதான் என்பது தெரிகிறது. அவரே அதை உறுதிப்படுத்துகிறார். திமுக அல்லது அதிமுகவுடன் நின்றுதான் ஜெயிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறார். காங்கிரஸ், பாஜக, இடதுசாரி என எல்லா தேசியக் கட்சிகளின் நிலைமையும் இதுதான்.

சசிகலா விடுதலை குறித்து அமைச்சர்கள் முரண்பாடான கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். அவரது விடுதலை அதிமுகவில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என உறுதியாகச் சொல்ல முடியுமா?

இதுகுறித்து ஏற்கெனவே நான் பதில் சொல்லியிருக்கிறேன். சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்தால், அவருக்கு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும். அதைப் பார்ப்பாரேயொழிய எங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது?

வழிகாட்டுதல் குழுவில் உள்ளவர்களுக்கு என்னென்ன அதிகாரங்கள் தரப்பட்டிருக்கின்றன? அவர்களுடைய பொறுப்புகள் என்ன?

இனி போகப்போகத்தான் தெரியும். இனிமேல் பேசி முடிவெடுக்கப்படும்.

பெண் தலைமையால் வழிநடத்தப்பட்ட ஒரு கட்சியின் வழிகாட்டுதல் குழுவில் ஏன் பெண் பிரதிநிதித்துவம் இல்லை. சிறுபான்மையினருக்கான பிரதிநிதித்துவம், மூத்த தலைவர்களுக்கும் இடமில்லையே?

அடுத்து வரும் குழுக்களில் அனைவருக்குமான பிரதிநிதித்துவம் கிடைக்கும். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்ததுதான் காரணம் எனப் பேசப்பட்டதே?

நாங்கள் கூட்டணி தர்மத்தை மதிப்பவர்கள். அவர்களால்தான் நாங்கள் தோற்றோம் என எக்காலத்திலும் சொல்ல மாட்டோம்.

தேர்தலுக்குப் பிறகும் அதிமுகவில் இரட்டைத் தலைமை தொடருமா?

தொடர்ந்துதானே ஆக வேண்டும். அதிமுகவின் அமைப்பு அப்படித்தான் இருக்கிறது.

தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்