நாட்றாம்பள்ளி சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சித்த மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகளின் முடிவுகளில் நோயாளிகளின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரித்துள்ளதாக தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளன.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி அக்ரகாரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. 60 படுக்கைகள் கொண்ட இந்த சிகிச்சை மையத்தில் இதுவரை 490 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 437 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூட இறப்பு இல்லை என்பது கூடுதல் சிறப்பாகும். திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சம் பேருக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதில் நேற்றைய நிலவரப்படி 5,495 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டம் முழுவதும் பல்வேறு மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாலும், நாட்றாம்பள்ளி அரசு சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் 7 நாட்களில் குணமடைந்து வீடு திரும்புவது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் (CTRI) ஒப்புதலோடு நாட்றாம்பள்ளி சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தில் கரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு, சித்த மருத்துவம் சார்ந்த மருந்துகளின் ஆய்வுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
இதற்கான ஆய்வில் 20 கரோனா நோயாளிகள் கலந்து கொண்டனர். அதில், 19 பேர் 5 நாட்களில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளது ஆய்வின் ஆதாரமாக உள்ளதாக சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் நாட்றாம்பள்ளி சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், முதன்மை சித்த மருத்துவருமான வி.விக்ரம்குமார் கூறியதாவது:
"மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட சித்த மருத்துவர் சுசி.கண்ணம்மா தீவிர முயற்சியால், நாட்றாம்பள்ளியில் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இங்கு பாரம்பரிய முறைப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாகரிகம் என்ற பெயரில் நம் மரபுகளை நாம் கொஞ்சம், கொஞ்சமாக மறந்து வருகிறோம். நவீன தொழில்நுட்பத்துக்கு மாறுகிறோம் எனக் கூறிக்கொண்டு நம் அடையாளங்களைத் தொலைத்து வருகிறோம். அதை நாங்கள் மீண்டும் திருப்பி மக்களுக்குக் கற்றுக்கொடுக்க முயற்சி செய்து வருகிறோம்.
நம் உடலுக்கும், மனத்துக்கும் ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய பாரம்பரிய உணவுகளை நம்மில் பல பேர் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. மக்கள் மறந்துபோன உணவு வகைகளை மீண்டும் காட்சிப்படுத்தி அதை நம் முன்னோர்கள் எப்படி சமைத்துச் சாப்பிட்டார்களோ அதைப்போலவே சமைத்துக் கொடுத்து, கரோனா போன்ற கொடிய வைரஸ் நோயில் இருந்து மீட்டெடுக்க முயற்சி செய்து வருகிறோம். அதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது.
இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு சித்த மருந்துகள் சாப்பிடுவதற்கு முன்பு ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்தோம். மருந்துகள் சாப்பிட்ட பிறகும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்து பார்த்தபோது மிகப்பெரிய மாற்றங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக IL-6, LDH, D-Dimer, COVID Anti Body என்ற ரத்த மாதிரிகளின் முடிவுகள் சித்த மருந்துகளின் நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. கரோனா நோய் காரணமாக ரத்தத்தில் அதிகரித்திருந்த பல விஷயங்கள் ஆய்வின் முடிவில் குறைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையும், வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதைப் பார்க்க முடிகிறது. மேலும், இருமல், சளி, மூக்கடைப்பு, மணம் அறியாமை, சுவை அறியாமை, தொண்டைக்கரகரப்பு, வறட்டு இருமல் ஆகிய அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் சித்த மருந்துகள் மூலம் படிப்படியாக குணமடைந்து பழைய நிலைக்குத் திரும்பி வருகின்றனர்.
அதேபோல, சிறுநீரகம், கல்லீரல் சார்ந்த செயல்பாடுகளில் ஆய்வுக்கு முன்பும், பின்பும் மிகப்பெரிய மாற்றங்கள் இல்லை என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையே, கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களிடம் இருந்து மேற்கொள்ளப்பட்ட சித்த மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சி முடிவுகளில் நோயாளிகளின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி மகிழ்ச்சியை அளித்துள்ளது.
ரத்த மாதிரிகளின் முடிவுகள் சித்த மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகள் உலகைத் திரும்பிப் பார்க்கும் விதமாக அமைந்துள்ளது. இதற்கான ஆய்வறிக்கையை தற்போது தொடங்கியுள்ளோம். விரைவில் அறிவியல் தளத்தில் ஆராய்ச்சி முடிவுகள் பதிவு செய்யப்படும்".
இவ்வாறு விக்ரம்குமார் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago