அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் இபிஎஸ்தான் என ஓபிஎஸ் தனது வாய் முகூர்த்தமாகவே அறிவித்துவிட்ட நிலையில், அதிமுகவில் கடந்த பத்து நாட்களாக நிலவி வந்த தேக்க நிலை தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது.
எனினும், இந்த முடிவை எட்டுவதற்காக மட்டும்தான் ஓபிஎஸ் இவ்வளவு மவுனப் போராட்டம் நடத்தினாரா? என்ற கேள்வி அவரைப் போற்றும் அதிமுகவினர் மத்தியிலேயே ஓங்கி எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதிமுக செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியுடன் ஒரு சிறப்புப் பேட்டி:
கடந்த பத்து நாட்களாக அதிமுக நகர்வுகளைக் கவனித்து வரும் அனைவர் மனதிலும் எழும் அதே கேள்விதான்... இப்போது எதைச் சாதித்து விட்டார் ஓபிஎஸ், எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டம்?
ஒன்றை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஓபிஎஸ் எனும் தலைவர் என்றைக்காவது தனக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று கேட்டாரா... அல்லது இபிஎஸ் முதல்வர் பதவியில் இருப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்தாரா? இல்லையே...
ஓபிஎஸ் 11 எம்எல்ஏக்களுடன் மீண்டும் வந்து கட்சியில் இணைந்தபோது அவரைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆக்கியது கட்சி. துணை முதல்வர் பதவி வேண்டாம் என்று மறுத்தபோதும் அவரை வற்புறுத்தி அந்தப் பதவியில் அமர்த்தியது இபிஎஸ் உள்ளிட்ட கட்சியின் முன்னணித் தலைவர்கள்.
இப்படியான சூழலில் அமைச்சர் ஒருவர், ‘அடுத்த முதல்வர் வேட்பாளர் இபிஎஸ்’ என்ற கருத்தை யதார்த்தமாகப் பதிவு செய்தார். இன்னொரு அமைச்சர், ‘அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூடி அடுத்த முதல்வரைத் தேர்வு செய்வார்கள்’ என்று ஜனநாயக நடைமுறையைச் சொன்னார்.
இதையெல்லாம் ஊதிப் பெரிதாக்கிய சில அந்நிய சக்திகள் இதை வைத்தே கட்சிக்குள் குழப்பம் உண்டாக்க நினைத்தன. ஆனால், மூன்று முறை முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்த ஓபிஎஸ், அத்தனைக்கும் பொறுமை காத்து இன்றைக்கு அத்தனை குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இதுதான் கடந்த பத்து நாட்களில் அவர் சாதித்தது. இப்போது நாங்கள் முன்னைவிடத் திடமாகத் தேர்தல் களத்துக்குச் செல்வோம்.
இபிஎஸ்தான் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்பதைச் செயற்குழுக் கூட்டத்திலேயே ஓபிஎஸ் அறிவித்திருந்தால் இந்தப் பிரச்சினைகளுக்கு எல்லாம் வேலையே இருந்திருக்காதே?
முதல்வர் வேட்பாளரைக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. அதுவுமில்லாமல் அன்றைய கூட்டத்தில், என்னைத்தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று யாரும் பிரச்சினை எழுப்பவில்லை. அன்றைய தினம் 15 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன.
அத்துடன் அனைத்துக் கட்சிகளிலும் நடப்பது போல் உட்கட்சிப் பிரச்சினைகள் குறித்துப் பேசப்பட்டது. அதேசமயம் அன்றைய தினமே, ‘அக்டோபர் 7-ம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும்’ என்று சொன்னோம். சொன்னபடி அதைச் செய்திருக்கிறோம்.
கட்சிக்குள் இத்தனை சுமுக நிலை இருப்பது உண்மையானால், ஓபிஎஸ் எதற்காகப் பெரியகுளம் பண்ணை வீட்டில் ஆலோசனை நடத்த வேண்டும்?
வாராவாரம் தனது தேனி மாவட்டத்துக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஓபிஎஸ். அப்படி அவர் தனது தொகுதி மக்களோடு மக்களாய் இருப்பதால்தான், நாடாளுமன்றத் தேர்தலில் அத்தனை தொகுதிகளிலும் அதிமுக தோற்றபோது தேனியில் மட்டும் வெற்றிவாகை சூடியது. அந்த வகையில்தான் அவர் பெரியகுளத்துக்குச் சென்றாரே தவிர, கோஷ்டிக் கூட்டம் நடத்தி கட்சிக்குள் குழப்பம் விளைவிப்பதற்காக அல்ல.
அப்படியானால் சென்னையில் அமைச்சர் பெருமக்கள் விடிய விடிய ஓபிஎஸ் - இபிஎஸ் இல்லங்களுக்கு மாறி மாறிச் சென்று பஞ்சாயத்துப் பேசியது..?
மீடியாக்கள் சொல்வதுபோல் அப்படி எந்தப் பஞ்சாயத்தும் பேசவில்லை. கட்சிக்கு வழிகாட்டும் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்பது முந்தைய செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு. அந்தக் குழுவில் யாரையெல்லாம் உறுப்பினர்களாகச் சேர்ப்பது என்பது குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் செய்யவேண்டி இருந்தது. மூத்த அமைச்சர்கள் அதை முறையே செய்து கட்சியின் கட்டுக்கோப்பைக் கட்டிக் காத்திருக்கிறார்கள்; அவ்வளவுதான்.
கட்சியில் ஆட்சி மன்றக் குழு இருக்கிறது... விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு அமைப்புச் செயலாளர்கள் இருக்கிறார்கள்... பல்வேறு அணிகளும் இருக்கின்றன... மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள்... இவர்களை எல்லாம் கடந்து வழிகாட்டும் குழு எதைச் சாதிக்கப் போகிறது?
அநேகமாக வழிகாட்டும் குழுவானது தேர்தல் பணிகளில் அதிக முனைப்புக் காட்டும் எனத் தெரிகிறது. இருந்தாலும் அந்தக் குழுவின் பணி என்ன... அதற்கான அதிகாரங்கள் என்ன என்பது குறித்தெல்லாம் இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. கூடிய சீக்கிரமே தலைமை அதை வரையறுத்து அறிவிக்கும்.
சசிகலா விடுதலையானால் அதிமுகவில் மாற்றம் வரும் எனப் பாஜக தென் மண்டல பொறுப்பாளர் நயினார் நாகேந்திரன் சொல்லி இருக்கிறாரே..?
இந்தக் கேள்விக்கு என்னைத் தவிர யாராலும் சரியான பதிலைச் சொல்லமுடியாது. ஏனென்றால் சசிகலாவுடன் கூடவே பயணித்தவன் நான். அவரின் குணத்தை அறிந்தவன், அவருக்காக ஜாமீன் கொடுத்தவன். யாருமே அவரது பெயரைச் சொல்லத் தயங்கிய நிலையில் அவரது பெயரைத் தமிழகமெங்கும் முழங்கியவன் நான்.
நயினார் நாகேந்திரன் பசுமை நிறைந்த நினைவுகளைச் சுழற்றிப் பார்த்து அப்படிச் சொல்கிறார். அவர் அதிமுகவில் இருந்தபோது இருந்த 'சின்னம்மா வேறு; இப்போதுள்ள சசிகலா' வேறு. அன்றைக்கு 'சின்னம்மா அம்மாவோடு இருந்தார். இப்போது அவரோடு அம்மா இல்லை'. சிறையைவிட்டு வெளியில் வந்தாலும் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது. அப்படியிருந்தும் அவரைப் பற்றிப் பொய்ச் செய்திகள், திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்யப்படுகின்றன.
ஆனால், இன்றைக்குச் சொல்கிறேன் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்... தினகரனை நம்பிக் கட்சியை ஒப்படைத்துச் சென்றார் சசிகலா. ஆனால், அவர் நினைத்ததுக்கு மாறாக, கொஞ்சம் கொஞ்சமாகக் கட்சியை அழித்துவிட்டு இப்போது அறைக்குள் சென்று பதுங்கிவிட்டார் தினகரன். இதையெல்லாம் பார்த்துவிட்டு அரசியலில் ஈடுபடும் எண்ணத்தையே மூட்டைகட்டி வைத்துவிட்டார் சசிகலா.
எனவே, அவர் ஜனவரியில் விடுதலையாகி வந்தாலும் ஒருக்காலும் அரசியலில் ஈடுபடமாட்டார்; அதிமுகவுக்கோ அதிமுக அரசுக்கோ அவரால் எந்தத் தொல்லையும் இருக்காது. நிச்சயம் அவர் ஓய்வெடுக்கச் சென்றுவிடுவார். எனவே, நயினார் நாகேந்திரன் போன்றவர்கள் சசிகலா விடுதலையைப் பற்றிப் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்பது எனது பணிவான கருத்து.
இவ்வாறு புகழேந்தி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
41 mins ago
தமிழகம்
12 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago