எப்போது யார் காலை வாருவார்கள் என்ற பயத்திலேயே ஆட்சி ஓடுகிறது: ஸ்டாலின் விமர்சனம்

By செய்திப்பிரிவு

எப்போது யார் காலை வாருவார்கள் என்ற பயத்திலேயே ஆட்சி ஓடுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (அக். 7), கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் காணொலி வாயிலாகப் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

"இன்றைய தினம் தமிழகத்தை ஆளும் அரசு, இந்த மாவட்டத்துக்கு மட்டுமல்ல; எந்த மாவட்டத்துக்கும் எதுவும் செய்யவில்லை!

இது விவசாயிகள் அதிகமாக வாழும் பகுதியாகும். அதிலும் குறிப்பாக கரும்பு விவசாயிகள் அதிகம் வாழும் பகுதி. கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை, மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலை ஆகிய இரண்டு ஆலைகள் இருக்கின்றன.

கரும்பு விவசாயிகளிடம் இருந்து கரும்பு பெறும் சர்க்கரை ஆலைகள், அதற்கான விலையை முறையாக, ஒழுங்காக உரிய நேரத்தில் தருகிறார்களா என்றால், இல்லை!

இத்தொகையை வாங்கித் தருவதற்கான போராட்டத்தை நாம்தான் நடத்தினோம். சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசினோம். விவசாயிகள் கைக்கு ஓரளவு பணம் வந்து சேரப் போராடினோம். ஆனால், முழுமையாக இன்னமும் வரவில்லை.

தமிழகத்தில் மட்டும் 46 சர்க்கரை ஆலைகள் மூலமாக விவசாயிகளுக்கு சுமார் 2,000 கோடி ரூபாய் தரப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள். இதில் அரசு சர்க்கரை ஆலைகளும் உள்ளன; தனியார் சர்க்கரை ஆலைகளும் உள்ளன. இருவருமே முழுமையாகத் தரவில்லை. பாக்கி வைத்துள்ளார்கள் என்றால் அந்தக் தொகையை வாங்கித் தர வேண்டியது அரசாங்கத்தின் கடமை அல்லவா?

இந்த லட்சணத்தில் மத்திய அரசின் வேளாண்மைச் சட்டம் வந்தால் என்ன ஆகும்?

மத்திய அரசு தான் கொண்டுவரும் வேளாண் சட்டங்களை ஆதரித்து ஒரு விளம்பரத்தைப் பத்திரிகைகளில் கொடுத்தார்கள். அதில் பருத்தி, காபி, தேயிலை, கரும்பு ஆகியவை போலவே கார்ப்பரேட் நிறுவனங்களோடு சேர்ந்து விவசாயிகள் தொழில் செய்யலாம், அதிக லாபம் பெறலாம் என்று விளம்பரம் செய்திருந்தார்கள்.

இந்த விளம்பரம் தயாரித்தவர்கள் கள்ளக்குறிச்சிக்கு வந்து கரும்பு விவசாயிகளிடம் கருத்துக் கேட்க வேண்டும். அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்களா? இல்லையா என்பதைக் கேட்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு வாரக்கணக்கில் அல்ல; மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில் பாக்கி வைத்துள்ளார்கள். பிறகு அவர்களால் எப்படி மகிழ்ச்சியாக வாழ முடியும்?

கரும்பு விவசாயியின் வாழ்க்கை, ஆலையில் அரைக்கப்படும் கரும்பாக ஆகிவிட்டது. அதே போல் மற்ற விவசாயிகளின் வாழ்வையும் நசுக்க நினைக்கிறார்கள். அதற்காகத்தான் வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளார்கள்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் சட்டம் கொண்டு வந்துவிட்டு, அதனை விவசாயிகள் ஆதரிக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. அந்தச் சட்டத்தை 'நானும் விவசாயி தான்' என்று சொல்லிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறார்.

அந்த மூன்று சட்டங்களும் நிறைவேறினால் வேளாண்மை சிதைந்து போகும்! விவசாயி வாழ்க்கை இருண்டு போகும்! அதனால் நாங்கள் எதிர்க்கிறோம்.

எல்லா விவசாயிகளுக்கும் இருக்கும் ஒரே எதிர்பார்ப்பு, தான் விளைவிக்கும் பொருளுக்கு உரிய குறைந்தபட்ச விலை வேண்டும் என்பதுதான். அதுவே இந்த மூன்று சட்டத்திலும் இல்லை.

இது ஒன்றே போதாதா இந்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கு?

ஆனால் எல்லாம் தெரிந்தவரைப் போல ஆதரிக்கிறார் பழனிசாமி. 'ஸ்டாலினுக்கு விவசாயம் தெரியுமா?' என்று கேட்கிறார் பழனிசாமி. நான் விவசாயி என்றோ, விவசாயம் செய்வதாகவோ சொன்னேனா? இல்லையே!

விவசாயிகளின் கஷ்டம் தெரிவதற்கு விவசாயியாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை. விவசாயத்தின் மீது, விவசாயிகள் மீது உண்மையான அக்கறை இருந்தால் போதும். அது என்னிடம் இருக்கிறது.

விவசாயிகள் மீது உண்மையான அக்கறை இருப்பதால் தான் அந்த மூன்று சட்டங்களுக்கும் எதிராக நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் மக்களவையிலும் பேசினோம். கண்டித்தோம். எதிர்ப்புத் தெரிவித்தோம்.

உடனடியாக திமுக கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளோம்.

மத்திய அரசு இயற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்துத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும், சட்டப்பேரவையை உடனே கூட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.

வேளாண்மை நாட்டின் முதுகெலும்பு என்றால், விவசாயிகள் நம் மாநிலத்தின் உயிரோட்டமானதும் விலைமதிப்பற்றதுமான அரிய சொத்துகள்! அவர்களின் தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்றிடும் கடமை உணர்ச்சி மாநில அரசுக்கு இருக்க வேண்டும். அத்தகைய உணர்ச்சி எடப்பாடி பழனிசாமிக்கு இருந்தால் அவரை விவசாயி என்று ஒப்புக்கொள்ளலாம்!

அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலில் இருக்கும் பொருள் 14-ல் இருக்கும் வேளாண்மை தொடர்பான சட்டங்களை நிறைவேற்றும் முழு அதிகாரமும் மாநில அரசுக்குத்தான் இருக்கிறது.

அதேபோல் நிலம் - நிலம் சார்ந்த உடன்படிக்கை ஆகியவை மாநிலப் பட்டியல் 18-ல் இருக்கிறது.

இந்த அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது. இதனைத் தடுக்க முடியாத பழனிசாமிக்கு தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்ளத் தகுதி நிச்சயமாக கிடையாது.

இந்த மூன்று சட்டத்தையும் அவர் எதிர்த்தால், விவசாயி என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டு நானும் விவசாயி தான் என்பது ஊரை ஏமாற்றும் காரியம்!

வேளாண்மைச் சட்டங்களால் விவசாயிகள் அடையும் நன்மை என்ன என்று சென்னைக்கு வந்து வகுப்பு எடுக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். பொருளாதாரத்தை மொத்தமாகத் தரை மட்டத்துக்கு இறக்கிய பிறகு இப்போது வேளாண்மைத் துறை பற்றி விளக்கங்கள் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்.

விவசாயிகள் வெளிமாநிலத்தில் போய் விற்பனை செய்யலாம் என்று ஏதோ பெரிய கண்டுபிடிப்பைப் போல அவர் சொல்லி இருக்கிறார். தங்கள் ஊரைவிட்டு வெளியே போய் விற்பனை செய்யும் விவசாயிகள் சிலர்தான் இருப்பார்கள். மாவட்டத்தை விட்டு அடுத்த மாவட்டம் செல்பவர்கள் அதிலும் குறைவாகத்தான் இருப்பார்கள். ஆனால், மாநிலம் விட்டு மாநிலம் போகலாம் என்று சொல்கிறார் நிதியமைச்சர்.

அப்படி மாநிலம் விட்டு மாநிலம் எல்லாராலும் போய் வியாபாரம் செய்ய முடியுமா? அதற்கான செலவை விவசாயிகள் ஏற்க முடியுமா?

'குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்' என்று நிர்மலா சீதாராமன் சொல்கிறார். அவரது பேட்டியில்தான் குறைந்தபட்ச ஆதார விலை இருக்கிறதே தவிர; சட்டத்தில் இல்லையே! பிரதமர் பேசும்போதுதான் குறைந்தபட்ச ஆதார விலை இருக்கிறதே தவிர; சட்டத்தில் இல்லையே!

மத்திய அரசு கொடுக்கும் விளம்பரத்தில்தான் குறைந்தபட்ச ஆதார விலை இருக்கிறதே தவிர; சட்டத்தில் இல்லையே! பிரதமரோ, நிதியமைச்சரோ, குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து சட்டத்தைத் திருத்தத் தயாரா என்று கேட்க விரும்புகிறேன்.

இதுவரை விவசாயிகள் அரசாங்கத்திடம் விற்றார்கள். உழவர் சந்தையில் விற்றார்கள். வேளாண் விற்பனை கூடங்களில் விற்றார்கள். ஆனால், இந்தச் சட்டம் மூலம் பண்ணை ஒப்பந்தம் என இடைத்தரகர்களை நுழைத்தது ஏன்?

விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்வது மாநிலத்தின் அதிகாரம் என்று சொல்லும் மத்திய அரசு அவர்களின் விளை பொருட்களின் விற்பனைக்கு மத்திய அரசு சட்டம் இயற்ற எப்படி அதிகாரம் கிடைத்தது?

மாநில அதிகாரத்தில் உள்ள வேளாண்மையில் மத்திய அரசு சட்டம் இயற்ற அதிகாரம் அறவே இல்லை. கடந்த நான்காண்டு காலமாக ஆட்சி நடக்கவில்லை. அதிமுக என்ற கட்சியைக் கோட்டையில் வைத்து நடத்திக் கொண்டு இருந்தார்கள்.

முதலில் பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் சண்டை! அடுத்து, பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் சண்டை! பின்னர், பழனிசாமிக்கும் சசிகலாவுக்கும் சண்டை!அதற்கடுத்து, பன்னீர்செல்வத்துக்கும் பழனிசாமிக்கும் சண்டை!

இதுதான் நான்காண்டு காலமாக தமிழ்நாட்டில் நடக்கிறது. எப்போது யார் காலை வாருவார்கள் என்ற பயத்திலேயே ஆட்சி ஓடுகிறது.

'ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது, விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும். அந்த விசாரணைக் கமிஷனில் முதல் ஆளாக அமைச்சர் விஜயபாஸ்கரை விசாரிக்க வேண்டும்' என்று சொன்னவர் பன்னீர்செல்வம். அவரே விசாரணைக் கமிஷனுக்குப் போகவில்லை.

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் என்ன சொன்னார்? எப்போதும் நிறுத்தி நிதானமாகப் பேசக் கூடியவர். 'பன்னீர்செல்வம் தன் மீதான ஊழல் புகார்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். சேகர் ரெட்டியை அறிமுகப்படுத்தியதே ஓபிஎஸ்தான். ஜெயலலிதா சிறையில் இருக்கும் போது சேகர் ரெட்டிக்கு பதவி போட்டுக் கொடுத்தது பன்னீர்செல்வம்தான்' என்று பேசியவர் அமைச்சர் சி.வி.சண்முகம்.

இப்படிப்பட்ட ஆட்கள் இன்று ஒன்று சேர்ந்துள்ளார்கள் என்றால் என்ன அர்த்தம் மக்களுக்காகவா? அல்ல! இன்னும் ஆட்சி முடிய ஆறுமாதம் இருக்கிறது.

இன்று நடப்பது ஆட்சியல்ல; வீழ்ச்சி. இந்த வேதனையாட்சி விரைவில் முடிவுக்கு வரவேண்டும். இந்த வீழ்ச்சி விரைந்து தடுக்கப்பட வேண்டும். அதற்கான பிரச்சாரப் பணியை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்".

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்