தமிழகத்தில் மட்டும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பணி நியமனம் செய்யப்படுவதாக, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (அக். 7) வெளியிட்ட அறிக்கை:
"தமிழ்நாடு இன்றைய ஆட்சியின் கீழ் பெயரளவில்தான் தமிழ்நாடாக இருக்கிறது; நடைமுறையில் பிற மாநிலத்தவரின் வேட்டைக்காடாகவும், பண்பாட்டுப் படையெடுப்பைப் பிற இனத்தவரும், மொழியாளரும், செம்மொழி தமிழைப் புறந்தள்ளி அதற்குரிய முக்கியத்துவத்தையும் தராது இந்தி, சம்ஸ்கிருத கலாச்சாரத் திணிப்பைச் செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு இதனைக் கண்டும் காணாததுபோல் இருப்பதோடு, கடுமையான தனது எதிர்ப்பை மத்திய அரசிடம் வைத்து, மாநில உரிமைகளைக் காப்பதற்கு எந்தவித முயற்சியையும் எடுக்காத ஒரு பொம்மை அரசாகவே நீடிப்பது மிகவும் வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியதாகும்.
» மதுரை கூர்நோக்கு இல்லத்தில் சிறுவர்கள் போராட்டம் எதிரொலி: மாவட்ட முதன்மை நீதிபதி நேரில் ஆய்வு
» நொய்யல் ஆறு புனரமைப்புப் பணிகளில் பொறுப்பின்மை: எம்எல்ஏ கார்த்திக் குற்றச்சாட்டு
பேரபாயம் வளர்ந்துகொண்டே போகிறது!
தமிழ்நாட்டு அரசின் முக்கியத் துறைகளிலும், அலுவலகங்களிலும் தமிழ்நாட்டு மக்கள், உள்ளூர் மக்கள் அறவே புறக்கணிக்கப்பட்டு, பிற மாநிலத்தவரின் வேட்டைக்காடாகவும், ஆதிக்கம் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக பெருகிடும் பேரபாயம் வளர்ந்துகொண்டே போகிறது!
தடுத்து நிறுத்திட தற்போதைய தமிழ்நாடு அரசு எந்த முயற்சியையும் எடுப்பதாகத் தெரியவில்லை.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ஒரு வழக்கை விசாரித்துள்ள நீதிபதிகளின் அமர்வே மிகுந்த வேதனையுடன் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளது, நிலைமை எந்த அளவுக்குக் கீழிறக்கத்திற்குச் சென்றுவிட்டது என்பதற்கு எடுத்துக்காட்டு.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
ஒரு வழக்கு விசாரணையின்போது, 'பிற மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் பணி வழங்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் பிற மாநிலத்தவர்களை அதிக அளவில் அரசுப் பணிகளில் நியமிப்பது ஏன்?' என்ற நியாயமான கேள்வியை நீதிபதிகள் எழுப்பியுள்ளனர்.
நீலகிரி ஆயுதத் தொழிற்சாலையில் ரசாயன பிராசசிங் பணிக்கு 140 பேரை நியமிக்க 2015 இல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இப்பணி இடங்கள் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இத்தேர்வில் ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சரவணன் 40 மதிப்பெண்கள் பெற்றார்; இவரைவிடக் குறைவான மதிப்பெண் பெற்ற 6 பேருக்குப் பணி நியமன உத்தரவு வழங்கியதை எதிர்த்து வழக்கைத் தொடர்ந்தார் பாதிக்கப்பட்ட சரவணன். சரவணனுக்குப் பதவி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து அதை ரத்து செய்யும்படி, ஆயுதத் தொழிற்சாலை செய்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வந்தபோது, அதனை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோரின் அமர்வில் மேற்கண்ட கேள்விகளை நீதிபதிகள் கேட்டுள்ளனர்.
அதோடு, 'மத்திய அரசுப் பணித் தேர்வில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம். இதில் வெற்றி பெற்று பணியமர்த்தப்படுபவர்களுக்கு அந்தந்த மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும். பிற மாநிலங்களில் அந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனால், தமிழகத்தில் மட்டும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.
வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களின் தாய்மொழியான இந்தியில் தேர்ச்சி பெற இயலாத நிலையில், தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, பணி நியமனம் பெறுவது எப்படி? அரசின் கொள்கை முடிவு என்று ஏமாற்றுகிறார்கள்.
பணித் தேர்வுகள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும். ரயில்வே தேர்வில் அதிக அளவு மோசடி நடைபெறுகிறது.
தமிழகத்தில் மின் வாரியம், ரயில்வே எனப் பல்வேறு துறைகளில் பிற மாநிலத்தவர்கள் அதிக அளவில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்' என்று ஆணி அடித்ததுபோல, தமிழக அரசுக்குச் சுட்டிக்காட்டியுள்ளதோடு, மற்றொரு கேள்வியையும் விசாரணையின்போது எழுப்பியுள்ளனர்!
தமிழகத்திற்கு என்ன பிச்சை போடுகிறீர்களா?
'தமிழகத்திற்கு என்ன பிச்சை போடுகிறீர்களா? ஆயுதத் தொழிற்சாலை பணிக்கான எழுத்துத் தேர்வின் விடைத்தாள் 3 நாளில் அழிக்கப்பட்டது ஏன்?
பணி நியமனம் எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பாக ஆயுதத் தொழிற்சாலை பொது மேலாளர் பதில் தர வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளனர்.
ஒரு மாநில அரசு கடமை தவறியது (Dereliction of Duty) என்பதை எவ்வளவு நாசுக்காக உயர் நீதிமன்றமே சுட்டிக்காட்டும் அளவுக்குத் தமிழ்நாட்டு ஆட்சி தமிழ் மக்கள் உரிமைகளைப் பலி பீடத்தில் வைப்பதை இனியாவது, காலந்தாழ்ந்த நிலையிலாவது உடனடியாக விழித்துக்கொண்டு ஆவன செய்ய முன்வரட்டும்.
கர்நாடக பாஜக அரசில், 80 சதவீதப் பணிகள் உள்ளூர்வாசிகளுக்கே என்று சட்டமும் இயற்றி பிரகடனப்படுத்தியுள்ளது.
தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
அதுபோல, மத்தியப் பிரதேச பாஜக அரசும் தனிச் சட்டமே இயற்றப் போகிறோம் என்று கூறுகிறது. ஏற்கெனவே மகாராஷ்டிரா சிவசேனா அரசு நடைமுறையில் அதனைச் செய்துவரும் நிலையில், தமிழ்நாடு இப்படி நாதியில்லாத ஒரு மாநிலமாக, நம் பிள்ளைகள், இளைஞர்கள் வேலை கிட்டாமல் தற்கொலை செய்துகொண்டு மாளும் நிலையில், இப்படி பிற மாநிலத்தவரின் பகற்கொள்ளையா? இதற்கொரு முற்றுப்புள்ளி சட்ட ரீதியாகத் தமிழ்நாடு அரசு வைக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசின் உறக்கம் கலையட்டும்
இதனை வலியுறுத்தி திராவிடர் கழகம் நாடு தழுவிய அறப்போரை, ஒத்த கருத்துள்ளவர்களையும், இளைஞர்களையும் திரட்டி நடத்திடவும் தயங்காது!
தமிழ்நாடு அரசின் உறக்கம் கலையட்டும், சமூக நீதிக் கொடியை இறக்க விடமாட்டோம்!".
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago