அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி: ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிவித்தார்

By செய்திப்பிரிவு

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.

அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள் மாறி மாறிக் கருத்து தெரிவித்தது, முதல்வர் வேட்பாளர் மற்றும் வழிகாட்டுதல் குழு போன்ற சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது.

கடந்த செப். 28-ம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் பெரும் விவாதமாகவே வெடித்தது. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இருவரும் நேரடியாகவே காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட, முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு அக்.7-ம் தேதி (இன்று) வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றன.

நேற்று (அக். 6) காலை முதலில் ஓபிஎஸ் உடன் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். ஓபிஎஸ் வீடு முன்பு நேற்று காலை முதலே நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்து, ஆதரவான கோஷங்களை எழுப்பினர்.

அதேநேரம், எடப்பாடி பழனிசாமி உடன் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். பின்னர், காலை 11.30 மணிக்கு, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சண்முகம், உதயகுமார் ஆகியோர் ஓபிஎஸ் வீட்டுக்கு வந்து இரண்டரை மணி நேரம் ஆலோசனை நடத்தினர். .

இதன் பின்னர், அமைச்சர்கள் செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம் உள்ளிட்டோர் நேற்று மாலை பழனிசாமி உடன் மீண்டும் ஆலோசனை நடத்தினர். அதேநேரம், ஓபிஎஸ்ஸும் தனது ஆதரவாளர்களுடனும் அடுத்தகட்ட ஆலோசனையில் இறங்கினார்.

மாலை 6.30 மணி அளவில் ஓபிஎஸ் இல்லத்துக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் வந்து ஆலோசனையில் பங்கேற்றார். பிறகு, ஓபிஎஸ் வீட்டில் இருந்து துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அமைச்சர் சி.வி.சண்முகம், மனோஜ்பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் இரவு 7.40 மணிக்கு முதல்வர் பழனிசாமியைச் சந்தித்தனர். இந்த ஆலோசனைகள் இரவு வரை நீடித்தன.

இதில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பினரின் கருத்துகளும் இறுதி செய்யப்பட்டு, அவர்களது நிபந்தனைகளும் ஏற்கப்படும் நிலையை எட்டியதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று (அக். 7) ஏற்கெனவே அறிவித்தபடி, முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்காக, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதிகாலை முதலே ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் அங்கு குவியத்தொடங்கினர். இருவருக்கும் ஆதரவான முழக்கங்களை அவரது ஆதரவாளர்கள் எழுப்பினர்.

இந்நிலையில், காலை 9.30 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் தன் வீட்டிலிருந்து புறப்பட்டு தலைமை அலுவலகத்தை அடைந்தார். அப்போது அவரது கார் முன்பு மலர்களை தூவி அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். பின்னர், ஜெயலலிதா-எம்ஜிஆர் சிலைகளுக்கு ஓபிஎஸ் மரியாதை செலுத்தினார்.

இதன்பின் சற்று நேரத்தில் முதல்வர் பழனிசாமி தலைமை அலுவலகத்தை அடைந்தார்.

இதையடுத்து, அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது, அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் எனவும், முதல்வர் வேட்பாளரை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிவிப்பார் எனவும் தெரிவித்தார்.

மேலும், அவைத்தலைவர் மதுசூதனனுக்கு உடல்நலம் சரியில்லாததால் வரவில்லை எனவும், அவர் சம்மதத்துடனேயே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவை அறிவித்தார்.

அப்போது, அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையின் அடிப்படையில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

அதன்படி வழிகாட்டுதல் குழுவில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.காமராஜ் ஆகியோரும், முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் எம்.பி. பி.ஹெச்.மனோஜ் பாண்டியன், மோகன், கோபால கிருஷ்ணன், மாணிக்கம் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இதையடுத்து, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் முதல்வர் வேட்பாளரை அறிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வம், துணை முதல்வர்

அப்போது, "தமிழகத்தில் புரட்சியை ஏற்படுத்தி, எம்ஜிஆர் அதிமுகவை மக்கள் இயக்கமாகத் தொடங்கினார். முதல்வராக பல நல்ல திட்டங்களைத் தந்துள்ளார். அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு வாழ்த்துகள்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், அவைத்தலைவர், துணை ஒருங்கிணைப்பாளர்கள், வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள் ஆகியோருடன் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில், 2020-2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளராக, எடப்பாடி பழனிசாமியை நான் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

இதன் மூலம் அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்