இந்தித் திணிப்பில் மத்திய பாஜக அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளை, தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை அடிப்படையில் தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். அதில் அரசு இரட்டை வேடம் போட்டால் மக்கள் வெறுப்பைத்தான் சம்பாதிக்க நேரிடும் என கி.வீரமணி எச்சரித்துள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று விடுத்துள்ள அறிக்கை:
''தமிழக அரசின் ஆட்சிமொழிக் கொள்கை தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கை; இது கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் நடைமுறையில் உள்ள சட்டப்படியான நிலவரமாகும். ஏற்கெனவே இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை ஆங்கிலம் தொடரும் என்ற உறுதிமொழியும் மத்திய ஆட்சி மொழிச் சட்டத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக - பிரதமர் மோடி தலைமையில் ஆர்எஸ்எஸ், பாஜக ஆட்சி அமைந்தது முதல், இந்தி, சம்ஸ்கிருதத் திணிப்புக்கான களமாக தமிழ்நாட்டை ஆக்கி வரும் முயற்சிகள் தொடர் முயற்சிகளாக மேற்பட்டுவருவதும், அந்தத் திணிப்பின் காரணமாக கடும் எதிர்ப்பையும், வெறுப்பையும் மத்திய அரசின் மீதும் பெருக்கி வருகிறது.
» காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்காத 1629 நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளர் நலத்துறை தகவல்
இதில் அரசியல் கண்ணோட்டம் இல்லை, மாறாக மொழி உணர்வும், எந்த மொழி திணிக்கப்பட்டாலும் எதிர்க்கும் மக்களின் மனப்பாங்கும் இயல்பானவை மட்டுமல்ல, பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுக்கும் உணர்வுபூர்வமான ஒன்று.
தமிழ்நாட்டு இந்தி எதிர்ப்புக்கு 80 ஆண்டுகால வரலாறு உண்டு
தமிழ்நாட்டில் இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு என்பது 80 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு என்பதை ஏனோ டெல்லி ஆட்சியாளர் மறந்து, இந்த நெருப்புடன் விளையாடும் விபரீத விளையாட்டை ஆடி, தமிழ் மக்களின் உணர்வுக்கு அறைகூவல் விடுகிறார்கள் - இது, தேவையற்ற ஒன்று. அரசியலமைப்புச் சட்டம் 22 மொழிகளை அங்கீகரித்துள்ளதை ஏனோ ‘‘வசதியாக’’ மறந்துவிடுகிறார்கள்.
ரயில்வே டிக்கெட்டுகளின் முன்பதிவுச் சீட்டை இந்தியில் அச்சடித்து, அதைக் குறுஞ்செய்தியாக தமிழ்நாட்டு ரயில் பயணிகளுக்கு அனுப்புவதும், நாட்டுடைமையாக்கப்பட்ட தேசிய வங்கி ஒன்றில், கங்கைகொண்ட சோழபுரம் கிளையில் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் கடன் கேட்டு மனு போட்டதை விசாரிக்கையில், அந்த வங்கியின் மேலாளர் - வடபுலத்தவர் - ‘‘இந்தியில் பேசினால் மட்டுமே தன்னால் பதில் கூற முடியும்‘’ என்று ஆணவமாகப் பதில் கூறியதும், அதன் விளைவாக பரபரப்பான செய்திக்குப் பிறகு, அவர் திருச்சிக்கு மாற்றப்பட்டதும் வந்த செய்தி அல்லவா. (திருச்சிக்குப் போனால், வணிக முறையில் தமிழ் அவருக்குத் தெரிந்துவிடுமா?)
எங்கே பணிபுரிகிறாரோ அந்த மண்ணின் மொழி தெரிய வேண்டாமா? ஐஏஎஸ், ஐபிஎஸ், அதிகாரிகள்கூட கட்டாயம் அந்தந்த மாநில மொழியைக் கற்கவேண்டும்; தேர்ச்சி பெறவேண்டும்; பேச, எழுத வேண்டும் என்ற சட்டம் அமுலில் இருக்கும்போது, இப்படிப்பட்ட இந்தி அதிகாரிகள் இங்கே இவ்வளவு ஆணவத்துடன் பதில் கூறுவது எந்தப் பின்னணியில்?
அண்ணாவின் இருமொழிக் கொள்கை என்னாயிற்று?
தமிழ்நாட்டில் உள்ள ஒரு அரசு, அண்ணாவின் இருமொழிக் கொள்கைதான் ஆட்சி மொழிக் கொள்கை என்று கூறும் நிலையில், அதுவே இந்தியில் வினா - விடையை நடத்த அனுமதிப்பதா? மருத்துவத் துறையில் இந்தி இணைப்பை மத்திய அரசு அனுப்பினால், அதை அப்படியே ஏற்பதா? தமிழ்நாட்டின் கொள்கைப்படி மறு இணைப்பு தமிழில் இருக்கவேண்டாமா? மாநில அரசு - இரட்டை வேடம் போடுவது, அதன்மீது மக்களுக்குள்ள எதிர்ப்பைத்தான் நாளும் அதிகரிக்கவே செய்யும்.
இந்த உணர்வுபூர்வ பிரச்சினையில் 80 ஆண்டுகால வரலாற்றைக் கூட மறந்துவிட்டு, ஏனோதானே என்று பாசாங்கு அரசியல் செய்யக்கூடாது. மத்திய அரசின் இந்தித் திணிப்பு, ரயில்வேயிலும் மற்றும் பல முயற்சிகளும் தேவையற்ற கிளர்ச்சிகளுக்கு வழிவகுக்கும்.
அந்த மத்திய அரசு, தமிழக அரசின் மாநிலக் கொள்கையை மதித்து நடந்து கொள்ளவேண்டும் என்று துணிவுடன் மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தவேண்டாமா? வன்மையாகக் கண்டிக்கவேண்டாமா? மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது என்றால், குட்டக் குட்ட குனிந்துகொண்டே இருப்பதுதானா?
தமிழ்நாடு அரசு செய்யவேண்டியது என்ன?
‘‘உறவுக்குக் கைகொடுப்போம், அதேநேரத்தில், உரிமைக்குக் குரல் கொடுப்போம் ‘’ என்று கலைஞர் கூறியதை வலியுறுத்திடும் அளவுக்குத் துணிவு வராவிட்டால்கூட பரவாயில்லை, எல்லாவற்றிற்கும் சலாம் போடுவது, இந்திக்கு இடம் கொடுப்பது - தமிழ்நாட்டின் அரசுக்கு நல்லதல்ல; மத்திய அரசின் இந்தித் திணிப்பை தமிழ்நாடு அரசும் எதிர்த்து நிற்கவேண்டிய தருணம் இது - கடமை வழுவாதீர், வரலாற்றுப் பழியைச் சுமக்காதீர்''.
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago