நடிகை குஷ்பு பாஜகவில் இணைவதில் இழுபறி: ஆர்எஸ்எஸ் எதிர்ப்பால் பதவி வழங்க மேலிடம் தயக்கம்

By இரா.வினோத்

காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு பாஜகவில் இணைவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவருக்கு பதவி வழங்க பாஜக மேலிடத் தலைவர்கள் தயங்குவதால், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிகிறது.

கடந்த 2010-ம் ஆண்டு திமுகவில் இணைந்த நடிகை குஷ்பு, ’ உழைப்புக்கேற்ற வளர்ச்சி கிடைக்கவில்லை’ எனக்கூறி அக்கட்சியில் இருந்து விலகினார்.

2014-ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்த அவருக்கு, அகில இந்திய செய்தி தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட குஷ்பு சீட் கேட்டார். ஆனால் அவருக்கு சீட் வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்தார்.

இதனால் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலருடன் முரண்பட்ட குஷ்பு, அவர்களுக்கு எதிராக மேலிடத்தில் புகார் தெரிவித்தார். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கட்சி நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டாமல் இருந்தார். அண்மைக்காலமாக காங்கிரஸூக்கு எதிரான கருத்துக்களை ட்விட்டரில் தெரிவித்ததால் மூத்த தலைவர்கள் குஷ்புவை பகிரங்கமாக கண்டித்தனர்.

இந்நிலையில் கடந்த 24-ம் தேதி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலையில் குஷ்பு,’கட்சி நிகழ்ச்சிகளுக்கு என்னை யாரும் அழைப்பதில்லை. திட்டமிட்டு சிலர் ஓரங்கட்டுகின்றனர்’ எனப் புகார் தெரிவித்தார். இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் குஷ்பு பாஜகவில் இணைவதற்காக தமிழக பாஜக‌ தலைவர் முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவிக்காத எல்.முருகன், ‘குஷ்பு பாஜகவில் இணைந்தால் வரவேற்போம்’ என பதிலளித்தார்.

குஷ்புவின் கோரிக்கை

இதுகுறித்து குஷ்பு தரப்பில் விசாரித்த போது, ’திமுக, காங்கிரஸில் குஷ்பு கடுமையாக உழைத்தாலும் எதிர்ப்பார்த்த அளவுக்கு வளரமுடியவில்லை. அங்கு கட்சியில் இருப்பவர்களே அவருக்கு எதிராக சதி செய்து பதவி கிடைக்காமல் தடுத்துவிடுகின்றனர்.

இதனால் குஷ்பு மிகவும் மனமுடைந்து இருக்கிறார். இனிமேல் புதிய கட்சியில் சேரும் போதே பெரும் பதவிகளை வாங்கிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

இதனால் பாஜகவிடம் பேசும் போதே, 'எனக்கு தென்னிந்தியா முழுவதும் நல்ல செல்வாக்கு இருக்கிறது. எங்கு தேர்தல் நடந்தாலும் அந்த மாநில மொழிகளிலே பேசி, தேர்தல் பணிகளை செய்வேன். எனவே தேசிய அளவில் முக்கிய பதவி அல்லது மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும். இல்லாவிடில் ஆணைய தலைவர் பதவி மற்றும் வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும்.

இதற்கு சம்மதித்தால் உடனே டெல்லி வந்து தேசிய தலைவர் முன்னிலையில் பாஜகவில் இணைவதாக‌ கூறியுள்ளார். இதற்கு எல். முருகன் மேலிடத் தலைவர்களுடன் ஆலோசித்துவிட்டு பதிலளிப்பதாக கூறியுள்ளார்’ என்றனர்.

ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு

கடந்த சில தினங்களாக டெல்லியில் முகாமிட்டுள்ள எல்.முருகன் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரை சந்தித்தார்.

அப்போது குஷ்புவை பாஜகவில் இணைப்பது குறித்தும், அவரது நிபந்தனைகள் குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளார். பாஜக மேலிடத் தலைவர்கள் குஷ்புவின் நிபந்தனையை உடனே ஏற்காததால், அவர் பாஜகவில் இணைவது தாமதமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து டெல்லி பாஜக மேலிட வட்டாரத்தில் விசாரித்த போது, '' குஷ்பு பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும் வெளியில் மத நம்பிக்கை அற்றவராக காட்டிக் கொள்கிறார். கடந்த காலத்தில் ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவற்றையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதனை ஆர்எஸ்எஸ் முக்கிய நிர்வாகிகள் மறக்க தயாராக இல்லை. மேலும் குஷ்புவுக்கு தனியாக வாக்கு வங்கி எதுவும் இல்லை. எனவே கட்சிக்கு வரும் போதே பெரிய பொறுப்புகள் வழங்குவது சரியாக இருக்காது. அவர் கட்சி பணியை செய்வதை பார்த்து பொறுப்புகளை வழங்கலாம்' என கூறியுள்ளனர்.

ஆனால் குஷ்பு தன் நிபந்தனைகளில் உறுதியாக இருப்பதால், பாஜகவில் இணையும் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் புதிய தேசிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.

அதன்பின் தமிழக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து குஷ்புவை இணைப்பது குறித்து பாஜக மேலிடம் முடிவெடுக்கும்'' எனத் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்