வேளாண் மின் இணைப்பு விவகாரத்தில் அறநிலையத் துறை முட்டுக்கட்டை போடுவதா? : ராமதாஸ் கண்டனம்

By செய்திப்பிரிவு

வேளாண் மின் இணைப்பு பெற அறநிலையத் துறை முட்டுக்கட்டை போடக் கூடாது என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (அக். 4) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாட்டி,ல் வேளாண் விளைநிலங்களுக்கு இலவச மின்சார இணைப்பு பெறுவதற்கான விதிகளை தமிழக அரசு தளர்த்தியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில், வேளாண் மின் இணைப்பு பெற இந்து அறநிலையத்துறை முட்டுக்கட்டை போட்டிருப்பது அந்த நிம்மதியை பறித்துள்ளது.

தமிழ்நாட்டில் வேளாண் பயன்பாடுகளுக்காக மின்சார மோட்டார் அமைக்க தமிழக அரசு இலவசமாக மின்சாரம் வழங்கி வருகிறது. தமிழக அரசின் இந்த சேவையை பெறுவதற்காக கடந்த 2000 ஆவது ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை 4 லட்சத்து 74 ஆயிரத்து 593 விவசாயிகள் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு விரைந்து மின்சார இணைப்பு வழங்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. 2000-வது ஆண்டு ஏப்ரல் முதல் 2003-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை இலவச மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த அனைவருக்கும் இணைப்பு வழங்க அரசு அனுமதித்துள்ளது. அதுமட்டுமின்றி, சாதாரண மின் இணைப்புத் திட்டத்தில் விண்ணப்பித்த விவசாயிகள், தட்கல் உள்ளிட்ட சிறப்புத் திட்டங்களுக்கு மாற்றிக் கொண்டு இலவச மின்சார இணைப்பை விரைவாகப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையாகவே விவசாயிகளுக்கு பயனளிக்கும்.

ஆனால், இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டுள்ள இதற்கு மாறான நிலைப்பாட்டால், அந்தத் துறைக்கு சொந்தமான நிலங்களில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் இலவச மின்சார இணைப்பு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறை நிலங்களுக்கு இலவச மின்சார இணைப்பு பெற தடையில்லாச் சான்றிதழ் வழங்க முடியாது என்று அத்துறையின் அதிகாரிகள் பிடிவாதம் பிடிப்பது தான் பிரச்சினை ஆகும். அதனால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் விதிகளின்படி நில உரிமையாளர்களுக்கு மட்டும் தான் இலவச மின் இணைப்பு வழங்கப்படும். நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருபவர்கள், நிலத்தின் உரிமையாளர்களிடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெற்றுக் கொடுத்தால் மட்டும் தான் மின் இணைப்பு வழங்கப்படும்.

அதன்படி, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களில் விவசாயம் செய்பவர்கள் அத்துறையிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற்று, அதனடிப்படையில் மின் இணைப்பு பெற்று வந்தனர்.

ஆனால், இப்போது தங்களுக்குச் சொந்தமான நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு தடையில்லாச் சான்று வழங்க இந்து சமய அறநிலையத்துறை மறுப்பது நியாயமல்ல. இந்த நிலைப்பாடு மாற்றத்திற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக 4 லட்சத்து 78 ஆயிரத்து 283.59 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவற்றை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 729 விவசாயிகள் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான விவசாயிகள் ஏற்கெனவே இலவச மின் இணைப்பு பெற்றுள்ளனர்.

தமிழக அரசு இப்போது அறிவித்துள்ள திட்டத்தின்படி அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலங்களில் விவசாயம் செய்து வரும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அதற்கு தடையாக இருப்பது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கடைபிடித்து வரும் முரண்பாடான நிலைப்பாடு தான்.

அறநிலையத்துறைக்கு சொந்தமான பெரும்பான்மையான நிலங்கள் பாசன வசதி இல்லாத பகுதிகளில் தான் உள்ளன. மோட்டார்களின் உதவியுடன் தான் அவற்றுக்கு நீர் இறைத்து பாசனம் செய்ய முடியும். டீசல் விலை உச்சத்தைத் தொட்டுள்ள இந்த காலத்தில் டீசல் நீர் இரைப்பான்களைக் கொண்டு பாசனம் செய்வது லாபகரமாக இருக்காது. நீர்ப்பாசன வசதி இல்லாமல் விவசாயம் செய்யவும் முடியாது.

நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்வதே சிக்கலானது தான். அதிலும் பாசன வசதி இல்லாவிட்டால், விவசாயம் என்பது இழப்பை மட்டுமே ஏற்படுத்தும். தமிழக அரசின் இலவச மின் இணைப்பு கிடைத்தால் நீர்ப்பாசன செலவுகள் மிச்சமாகும். அது விவசாயிகளின் வாழ்க்கையை ஓரளவு வளப்படுத்த உதவும்.

ஆனால், அறநிலையத்துறை எந்த காரணமே கூறாமல் தடையில்லாச் சான்றிதழ் வழங்க மறுப்பது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக பறித்து விடும். அது நியாயமற்றது. அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகளில் பெரும்பான்மையினர் குத்தகையை முறையாக செலுத்தி வருகின்றனர். தங்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் அறநிலையத்துறைக்கு அவர்கள் நன்றிக் கடன்பட்டுள்ளனர். அப்படிப்பட்டவர்களை அறநிலையத்துறை கைவிட்டு விடக் கூடாது.

இதை மனதில் கொண்டு அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் இலவச மின் இணைப்பு பெறுவதற்கான தடையில்லாச் சான்றுகளை வழங்க அத்துறை முன்வர வேண்டும். இது குறித்து அத்துறைக்கு முதல்வர் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்