ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை உரிமையுடன் கேட்டுப் பெறுவதில் முதல்வர் பழனிசாமி தோல்வி: தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமைக்கு ஆபத்தானது; ஸ்டாலின் விமர்சனம்

By செய்திப்பிரிவு

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடுசெய்வது குறித்து ஆக்கபூர்வமாக வலியுறுத்தி, மற்ற மாநிலங்களின் ஆதரவினையும் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (அக். 4) வெளியிட்ட அறிக்கை:

"ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடுசெய்ய உருவாக்கப்பட்ட நிதியில் போதிய பணம் இல்லை என்பதால், வருவாய் இழப்பை ஈடுகட்ட மாநிலங்கள், சந்தையில் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு குறித்து, 5.10.2020 அன்று நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சிலின் 42-வது கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது என்று செய்திகள் வெளிவந்துள்ளன.

101-வது அரசியல் சட்டம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (மாநிலங்களுக்கு ஈடுசெய்தல்) சட்டம் 2017 ஆகியவற்றில், ஜிஎஸ்டி சட்டத்தைச் செயல்படுத்துவதால் ஏற்படும் வருவாய் இழப்பு 5 ஆண்டுகளுக்கு ஈடுசெய்யப்படும் என்று மாநிலங்களுக்கு அளித்த இறையாண்மை மிக்க உத்தரவாதத்தை மத்திய பாஜக அரசு காற்றில் பறக்கவிட்டுள்ள செயல் மிகுந்த வேதனைக்குரியது.

வசூல் செய்யப்பட்ட ஈடுசெய்தல் நிதியை, சம்பந்தப்பட்ட ஜிஎஸ்டி மாநிலங்களுக்கு ஈடுசெய்யும் நிதியில் வரவு வைக்காமல், இந்தியத் தொகுப்பு நிதியில் வைத்துக் கொண்டு, 47 ஆயிரத்து 272 கோடி ரூபாயை வேறு செலவுகளுக்கு மத்திய அரசு பயன்படுத்தி விட்டது என்று சிஏஜி அமைப்பே பகிரங்கமாகக் குற்றம்சாட்டி விட்டது.

இந்தியத் தலைமை வழக்கறிஞர் கூறியிருக்கிறார் என்று ஒரு காரணத்தை மேற்கோள் காட்டி, வருவாய் இழப்பீட்டினை ஈடுசெய்ய முடியாது என்று மத்திய பாஜக அரசு கைவிரித்துள்ளது. மாநிலங்கள் வேண்டுமானால் சந்தையில் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறியிருப்பது, மாநிலங்களின் நிதி தன்னாட்சி உரிமையைப் பாதிக்கும்!

கடந்த 27.8.2020 அன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 41-வது கூட்டத்திலேயே இந்த அறிவிப்பு வெளியானபோது தமிழக அரசின் சார்பில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார் அதை வலுவாக எதிர்த்து, வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று போராடியிருக்க வேண்டும்.

ஜிஎஸ்டி நிலுவைத் தொகை குறித்து நான்கு நாள் கழித்து 31-ம் தேதி பிரதமருக்கு 4 பக்கக் கடிதம் எழுதியுள்ள முதல்வர் பழனிசாமியும், 'மாநிலங்களே கடன் வாங்கிக் கொள்வது நிர்வாக சிக்கல் கொண்டது. அது கடினம். ஆகவே அதுகுறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்று கோரிக்கை வைத்திருக்க வேண்டும்.

ஜிஎஸ்டி கவுன்சிலில் இருக்கும் வாக்கெடுப்பு முறையைப் பயன்படுத்தி, ஜிஎஸ்டி வருவாய் இழப்பீட்டை ஈடுசெய்ய மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக மாநிலங்களைத் திரட்டும் ஓர் அருமையான வாய்ப்பை அதிமுக அரசு சென்ற கூட்டத்திலேயே கோட்டை விட்டுவிட்டது.

உதாரணமாக, இதற்கு முன்பு நடைபெற்ற 38-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், லாட்டரிக்கு வரி விதிப்பது குறித்த பிரச்சினையில், கேரள மாநில நிதியமைச்சர் இப்படியொரு வாக்கெடுப்பு உரிமை பற்றி கோரிக்கை வைத்து, அதை ஜிஎஸ்டி கவுன்சிலும் ஏற்றுக்கொண்டு முதல்முறையாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அப்படியொரு வாக்கெடுப்பும் நடந்து முடிந்திருக்கிறது என்பதைக் கூட இக்கூட்டங்களில் பங்கேற்கும் அமைச்சர் ஜெயக்குமாரும் புரிந்து கொள்ளவில்லை; முதல்வரும் அதுகுறித்து எல்லாம் யோசிக்கவே நேரமில்லை.

இதுபோன்ற நிலையில்தான் இப்போது 42-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அக்கூட்டத்தில் ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடுசெய்ய மாநிலங்கள் சந்தையில் கடன் பெறுவது உள்ளிட்ட மத்திய அரசு வழங்கிய இரு வாய்ப்புகள் குறித்தும், மற்றும் இழப்பீட்டை ஈடுசெய்யும் நிதிக்கான வரி (Cess) வசூல் காலத்தை நீட்டிப்பது குறித்தும் விவாதிக்க இருப்பதாகச் செய்திகள் வருகின்றன.

மத்திய அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழித்து, மாநிலங்களே சந்தையில் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பைப் பல்வேறு மாநிலங்களும் எதிர்க்கின்றன. கடந்த 31.8.2020 அன்று முதல்வர் பழனிசாமி, ஜிஎஸ்டி குறித்து ஒரு நீண்ட கடிதத்தை வழக்கம் போல் பிரதமருக்கு எழுதி, மத்திய அரசே கடன் வாங்கியோ அல்லது இந்தியத் தொகுப்பு நிதியிலிருந்து (Consolidated Fund of India) கொடுத்தோ ஜிஎஸ்டி வருவாய் இழப்பீட்டை மாநிலத்திற்கு ஈடுசெய்ய வேண்டும் என்று மட்டும்தான் கூறியிருக்கிறாரே தவிர, மத்திய அரசின் முடிவு மாநில நிதி உரிமைகளுக்கு எதிரானது என்றும், அதுகுறித்து ஜிஎஸ்டி கவுன்சிலில் வாக்கெடுப்பு நடத்தியே முடிவு செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்தவில்லை; அப்படி பிரதமரிடம் மாநில உரிமைக்காகக் கோரிக்கை வைக்கத் தைரியமும் இல்லை!

கடிதம் எழுதி விட்டால் ஜிஎஸ்டி வருவாய் இழப்பீட்டை மத்திய அரசு ஈடுசெய்து விடாது என்பதை பழனிசாமி உணர வேண்டும்.

திமுக உறுப்பினர் வில்சன் மாநிலங்களவையில் இதுகுறித்துக் கேள்வி எழுப்பிய போது, 'தமிழ்நாட்டுக்கு 11 ஆயிரத்து 269 கோடி ரூபாய் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை நிலுவையில் உள்ளது' என்று 20.9.2020 அன்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் பதிலளித்திருக்கிறார்.

கரோனா பேரிடரில், தமிழகத்தின் நிதி நிலைமை தள்ளாடிக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் கூட மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய இழப்பீட்டுத் தொகையை, அரசியலமைப்பு சட்டத்தின்படி உறுதியளிக்கப்பட்டுள்ள தொகையை, உரிமையுடன் கேட்டுப் பெறுவதில் இதுவரை முதல்வர் பழனிசாமி தோல்வி கண்டு நிற்பது, தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமைக்கு ஆபத்தானது.

ஆகவே, இனியும் அமைதி காக்காமல், அக்டோபர் 5-ம் தேதி நடக்கும் 42-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடுசெய்வது குறித்தும், மத்திய அரசு அளித்த உத்தரவாதத்தை மீறியிருப்பது குறித்தும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆக்கபூர்வமாக வலியுறுத்தி, மற்ற மாநிலங்களின் ஆதரவினையும் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 secs ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்