புதுச்சேரி அரசு மருத்துவமனை ஊழியர்கள் 3-வது நாளாக இன்றும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் வெளிப்புற சிகிச்சைப் பிரிவு இயங்காததால் அவதிக்குள்ளான புறநோயாளிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் சண்முகசுந்தரம் (45). இவரது தந்தை பக்கிரிசாமி (80). நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் செப்.21-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 1-ம் தேதி மாலை உயிரிழந்தார்.
அவரது இறப்புக்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் எனக் கூறி பெண் மருத்துவர், செவிலியரை ஆய்வாளரின் உறவினர்கள், நண்பர்கள் தாக்கி செல்போனைப் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, மருத்துவமனை ஊழியர்கள் 1-ம் தேதி மாலை முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக மருத்துவமனைக் கண்காணிப்பாளர் வாசுதேவன் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம் மற்றும் சிலர் மீது 6 பிரிவுகளின் கீழ் பெரியகடை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், மருத்துவப் பணியாளர் பாதுகாப்பு சட்டப்படி வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியும், தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்யக்கோரியும் நேற்று (அக். 2) 2-வது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
» தமிழக சுற்றுலா தலங்கள் ரூ.3,496 கோடியில் மேம்பாடு: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்
» வளிமண்டலச் சுழற்சி, வெப்பச் சலனம்: 8 மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
இதையடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
இருப்பினும் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (அக். 3) ஆலோசனை மேற்கொண்டனர். இதனிடையே, அரசு பொது மருத்துவனையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவாக எல்லைபிள்ளைச்சாவடி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், டெக்னீஷியன்கள், பணியாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மகளிர் மருத்துவமனையில் பணிகளைப் புறக்கணித்த மருத்துவர்கள் உள்ளிட்டோர் தரையில் தனிமனித இடைவெளியுடன் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு வெளிப்புறப் பரிசோதனைக்கு வந்த கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டனர். பிரசவ வார்டுகளில் மட்டும் மருத்துவர்கள் பணியில் இருந்தனர். இதேபோல் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பரிசோதனை, சிகிச்சை முறைகளை மேற்கொள்ளவில்லை. இதனால் அங்குவந்த நோயாளிகள் ஏமாற்றமடைந்தனர்.
இதனிடையே அரசு பொது மருத்துவமனையில் 3-வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்த நிலையில், அங்கு வெளிப்புற சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் சிலருக்கு மட்டும் சீட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை அளிக்கப்படவில்லை. தொடர் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்படவில்லை. அதோடு, வெளிப்புற நுழைவு வாயில் கதவும் மூடப்பட்டிருந்தது. இதனால் சிகிச்சை பெற முடியாமல் அவதியமடைந்த புறநோயாளிகள் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை எதிரே சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், "அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளாததால் ஏழைகளான நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுக்கின்றனர். தொடர் நோயால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுக்க மறுத்து திருப்பி அனுப்புகின்றனர். 3 நாட்களாக மருத்துவமனைக்கு வந்து மாத்திரை வாங்க முடியாமல் திரும்பிச் செல்கிறோம். இதற்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்" என்றனர்.
இதையடுத்து அங்கு வந்த பெரியகடை காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதால் போராட்டத்தைக் கைவிட்ட நோயாளிகள், வெளிப்புற சிகிச்சை நுழைவு வாயில் படிக்கட்டுப் பகுதியில் காத்திருந்தனர். இருப்பினும் போராட்டம் காரணமாக அங்கு வெளிப்புற சிகிச்சைப் பிரிவு இயங்கவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் நோயாளிகள் அனைவரும் வீடு திரும்பினர்.
இதனிடையே இறந்த பக்கிரிசாமியின் மற்றொரு மகனான வழக்கறிஞர் விஸ்வசுந்தரம் பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது தந்தையின் இறப்பு தொடர்பாக வட்டாட்சியர் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, அவரது புகாரின் பேரில் பெரியகடை காவல் துறையினர் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago