நாளை யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு: தேர்வு நடைமுறை, தேர்வர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விவரம்

By மு.அப்துல் முத்தலீஃப்

இந்திய ஆட்சிப் பணிக்கான முதல்நிலைத் தேர்வு நாளை நடக்கிறது. இதில் தேர்வு எழுதுபவர்களுக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன என்பது வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய ஆட்சிப் பணிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து 7 லட்சம் பேர் வரை எழுதும் இத்தேர்வில் முதல்நிலைத் தேர்வை எழுதிக் கடக்கும் மாணவர்கள் முதன்மைத் தேர்வை எழுதுவார்கள். அதில் தேர்ச்சி அடைபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

அதில் 900 லிருந்து 1000 பேர் வரை ஆட்சிப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். அதில் அவர்கள் எடுக்கும் ரேங்க் அடிப்படையில் ஐஎஃப்எஸ் (இந்திய வெளியுறவுப் பணி) ஐஏஎஸ் ( இந்திய ஆட்சிப் பணி) , ஐபிஎஸ் (இந்தியக் காவல்பணி), ஐஎஃப்எஸ் (இந்திய வனப்பணி), ஐஆர்எஸ் (இந்திய வருவாய்ப் பணி) என அரசின் பல்வேறு ஆட்சிப் பணிகளுக்குப் பணி ஒதுக்கப்படும். சொந்த மாநிலத்தில் பணி கிடைப்பதும் அப்படியே.

இதற்கான முதல்நிலைத் தேர்வு நாளை (அக்.04) இந்தியா முழுவதும் நடக்கிறது. இதற்காக விண்ணப்பித்தவர்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களில் நாளை எழுத உள்ளனர். இந்தத் தேர்வு மே 31 அன்று நடக்க வேண்டியது. கரோனா தொற்று காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டு தற்போது நாளை (அக்.04) நடக்கிறது.

காலை 9.30 மணி முதல் 11.30 மணிவரை முதல் ஒரு தேர்வு, மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை இரண்டாவது தேர்வு என இரு பிரிவுகளாகத் தேர்வு நடக்கிறது. இடையில் 3 மணி நேரம் உணவு மற்றும் பிற தயாரிப்புகளுக்காக ஒதுக்கப்படுகிறது.

கோவிட்-19 பரவலைக் கருத்தில் கொண்டு தேர்வு மையங்களில் ஒரு மேஜைக்கு ஒருவர் என அமரவைக்கும் ஏற்பாடு நடப்பதால் கூடுதல் மையங்கள் செயல்படுகின்றன.

முதல்நிலைத் தேர்வு கடுமையான ஒரு தேர்வு ஆகும். தவறாகப் பதில் அளித்தால் அதற்காக மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை ( இ-டிக்கெட்) தேர்வர்கள் அவர்கள் விண்ணப்பித்துள்ள யூபிஎஸ்சி இணையதளத்திலிருந்து பிரிண்ட் எடுத்துத் தயாராக வைத்திருக்க வேண்டும்.

தேர்வு எழுதும் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்:

* இ-அட்மிட் கார்டுகளை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் எந்த முரண்பட்ட தகவலோ, தவறான சர்ச்சைக்குரிய விஷயங்களோ இருந்தால் உடனடியாக யூபிஎஸ்சி கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும்.

* தேர்வர்கள் பெயர், ரோல் எண், பதிவு செய்த அடையாள அட்டை, எந்த ஆண்டு தேர்வுக்குப் பதிவு செய்தது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தெளிவாக இருத்தல் வேண்டும்.

*தேர்வு எழுதுபவர்கள் இ-அட்மிட் கார்டை பிரிண்ட் எடுத்துத் தங்களுடன் கொண்டு வரவேண்டும். அத்துடன் தாங்கள் அளித்த அடையாள அட்டையின் ஒரிஜினலையும் எடுத்து வர வேண்டும். இ-அட்மிட் கார்டு தேர்வின்போது ஒவ்வொரு முறையும் கேட்கப்படும். அது இருந்தால் மட்டுமே அனுமதி. இ-அட்மிட் கார்டு இறுதித் தேர்வு முடிவு வரும் வரை பயன்படும்.

* உங்களுக்கான இ-அட்மிட் கார்டைப் பொறுப்பாக வைத்துக்கொள்வது உங்கள் பொறுப்பு. வேறு யாராவது தவறாக உபயோகிக்க நேர்ந்தால் அதற்கு இ- அட்மிட் கார்டு உரிமையாளர் பொறுப்பேற்க நேரிடும்.

* இ-அட்மிட் கார்டு இல்லாமல் வரும் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

* விடைத்தாளில்(omr sheet) தவறாக ரோல் நம்பரைப் பதிவு செய்தாலோ, செய்யாமல் விட்டாலோ, அடித்துத் திருத்தினாலோ, கேட்கும் தகவல்களைப் பதிவு செய்யாமல் விட்டாலோ அந்த விடைத்தாள் நிராகரிக்கப்படும்.

* தேர்வு மையம் 10 நிமிடத்திற்கு முன்னரே மூடப்படும். அதற்கு ஏற்ப தேர்வு எழுதுபவர்கள் முன்னரே வந்துவிட வேண்டும். அதற்குப் பின்னர் தேர்வு எழுதுபவர்கள் வந்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

* தேர்வு எழுத வருபவர்கள் செல்போன் எடுத்து வரக்கூடாது. பென் ட்ரைவ், சேமித்து வைக்கப்படும் எத்தகைய எலக்ட்ரானிக் பொருட்களையும் எடுத்து வரக்கூடாது. (ப்ளூடூத், ஸ்மார்ட்போன், எலக்ட்ரானிக் வாட்ச், சுவிட்ச் ஆஃப் செய்து எடுத்து வருகிறோம் என எதையும் எடுத்து வரக்கூடாது. மீறி எடுத்து வந்து சிக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும்) .

* சாதாரண கைக்கடிகாரத்தை மட்டும் தேர்வர்கள் பயன்படுத்த வேண்டும். எலக்ட்ரானிக் வாட்ச், ஸ்மார்ட் வாட்ச் அல்லது வேறு வகையிலான டிவைஸ் உள்ள எதையும் பயன்படுத்தக்கூடாது.

* தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மார்க் கொடுக்கப்பட்டு விடைகளில் கழிக்கப்படும். இது இரண்டு தேர்வுகளுக்கும் பொருந்தும்.

* தேர்வு எழுதுபவர்கள் கருப்பு மை பால் பாயிண்ட் பேனாவை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

*. மாணவர்கள் தேர்வு மையத்துக்கு உரிய தயாரிப்புடன் வரவேண்டும். உடல் பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.

* தேர்வு எழுதுபவர்கள் விலை உயர்ந்த பொருட்கள், பைகளைக் கொண்டுவர வேண்டாம். அப்படிக் கொண்டு வந்து காணாமல் போனால் தேர்வுத்துறை பொறுப்பேற்காது.

* இ-அட்மிட் கார்டில் தேர்வு எழுதுபவர்கள் புகைப்படத்தில் முகம் சரியாகத் தெரியவில்லை என்றால் 2 பாஸ்போர்ட் போட்டோக்களைக் கொண்டுவரவேண்டும். அத்துடன் ஒரிஜினல் ஐடி கார்டையும் (பான், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களில் எதைச் சமர்ப்பித்தீர்களோ அதை).

* மாற்றுத்திறனாளிகள் தங்களுக்காக தேர்வு எழுத உதவியாளரை நியமித்திருந்தால் அவர்களுக்குத் தனியாக இ-அட்மிட் கார்டு வழங்கப்பட்டிருக்கும். அதைக் கட்டாயம் கொண்டு வந்தால்தான் அனுமதி.

* முகக்கவசம் கட்டாயம், தேர்வு மையத்துக்குள் முகக்கவசம், முகம் மூடும் கண்ணாடி இழையிலான கவசம் இல்லாமல் வருபவர்களுக்கு அனுமதி இல்லை. முழு நேரமும் முகக்கவசம் அணிந்து தேர்வு எழுதவேண்டும். அடையாளம் காண மட்டும் ஒரு முறை முகக்கவசம் கழற்ற அனுமதிக்கப்படும்.

* தேர்வு எழுதுபவர்கள் வெளியில் தெரியும் வகையில் திரவம் அடைக்கப்பட்ட சிறிய சானிடைசர் பாட்டிலைத் தாங்களே கொண்டுவரவேண்டும்.

* கோவிட்-19 தடுப்புக்காக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்றி தனிநபர் இடைவெளி, முகக்கவசத்துடன் தேர்வெழுத வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்குக் கீழ் உள்ள இணைப்பில் காணலாம்.

file:///C:/Users/50239/Downloads/5_6228898594447950142.pdf

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE