அண்மையில் அறிவிக்கப்பட்ட பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்ததலைவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால், கட்சியின் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பிஹார், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, புதிய தேசிய நிர்வாகிகளின் பட்டியலை கடந்த 26-ம் தேதி அறிவித்தார்.
தேசிய அளவில் 12 துணைத் தலைவர்கள், 8 பொதுச் செயலாளர்கள், 13 செயலாளர்கள், 23 செய்தித் தொடர்பாளர்கள் உட்பட மொத்தமாக 70 பேர் கொண்ட இப்பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர்கூட இடம் பெறவில்லை. தேசிய செயலாளராக இருந்த ஹெச்.ராஜா அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இது அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வருத்தத்தில் பழைய நிர்வாகிகள்
இதுகுறித்து தமிழக பாஜக மூத்த தலைவர்கள் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது:
தேசிய நிர்வாகிகள் பட்டியலில் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இம்முறை முக்கிய பதவிகளை எதிர்பார்த்த தமிழக பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறாததால் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதேபோல கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள கே.டி.ராகவன், வானதி சீனிவாசன், கங்கை அமரன், தடா பெரியசாமி உள்ளிட்டோரும் வருத்தம் அடைந்துள்ளனர்.
இதேபோல பிற கட்சிகளில் இருந்து பொறுப்புகளை எதிர்பார்த்து பாஜகவில் இணைந்தவர்கள் விரக்தி நிலைக்கே சென்றுவிட்டனர். குறிப்பாக திமுகவில் துணை பொதுச் செயலாளராக இருந்து பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி, அதிமுகவில் இருந்து வந்த முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், பகுஜன் சமாஜ் கட்சியில் எம்.பி.யாக இருந்துவந்த அம்பேத் ராஜன் ஆகியோர்தங்களுக்கு உரிய மரியாதை வழங்கவில்லை என நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளனர்.
மாநிலத் தலைவர் எல்.முருகனிடம் பல நிர்வாகிகள் தங்களது அதிருப்தியை நேரடியாக வெளிப்படுத்தியுள்ளனர். ‘பெரிய பொறுப்புகள் கொடுத்தால்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரச்சாரத்துக்கு போவோம்’ என்றும் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனாலேயே எல்.முருகன் டெல்லிசென்றுள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தேர்தலில் உதவும்
கடந்த 3 நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ள எல்.முருகன், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசியபொதுச்செயலாளர்கள் பி.எல்.சந்தோஷ், துஷ்யந்த்குமார் கவுதம்எம்பி உள்ளிட்டோரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழாவை கொண்டாடியது, ரத ஊர்வலங்கள், வாக்குசாவடி அளவிலான நியமனங்கள் உள்ளிட்டவை குறித்து விவரித்துள்ளார்.
‘தமிழகத்தில் கடும் சவால்களுக்கு மத்தியில் கட்சிப் பணியில் ஈடுபட்டுள்ள தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்களுக்கு பதவிகள் வழங்கினால் தேர்தல் பணியை சுறுசுறுப்பாக செய்வார்கள். பாஜகவில் நல்ல முக்கியத்துவம் கிடைத்தால், நிறைய பிரபலங்களும் கட்சியில் இணைவார்கள். அது தேர்தல் வெற்றிக்கு உதவும்’ என விளக்கியுள்ளார்.
இதுதொடர்பாக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட மேலிடத் தலைவர்களையும் சந்தித்து கோரிக்கை விடுக்க எல்.முருகன் திட்டமிட்டுள்ளார். தமிழக பாஜகவினரின் அதிருப்தியை உணர்ந்துள்ள கட்சி மேலிடம் ஓரிரு தலைவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர், தேசிய ஆணையத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வழங்க வாய்ப்பு இருக்கிறது. பிஹார் தேர்தலுக்கு பின் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால், அதில்வாய்ப்பு கிடைக்கலாம் என்றும்டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
21 hours ago