ஜவ்வாதுமலைத் தொடரில் கனமழை; ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை

By ந. சரவணன்

திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அங்கு அதிக அளவில் குவியத் தொடங்கியுள்ளனர். நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரியில் இருந்து கிட்டத்தட்ட 40 கி.மீ. தொலைவில் எழில் மிகு நீர்வீழ்ச்சியாக ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி திகழ்கிறது. ஏலகிரி மலையின் பின்புறம் அடர்ந்த காட்டுப்பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி ரம்மியமாக காட்சியளிக்கிறது.

ஏலகிரி மலையில் பெய்யும் கனமழையால் அங்குள்ள அத்தனாவூர் ஏரி நிரம்பி பின்புறம் உள்ள மலை வழியாக ஜலகம்பாறை நீர்வீழ்ச்சிக்குத் தண்ணீர் வருகிறது.

ஏலகிரி அடுத்த நிலாவூர் மலை வழியாகப் பயணம் செய்தால் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியை எளிதாக அடையலாம். அழகான வயல்களுடன், பறவைகளின் குரல், விலங்குகளின் சத்தம், அருவியில் இருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரின் சலசலப்பு சத்தம் ஆகியவை மனதைச் சுண்டியிழுப்பதால் சுற்றுலாப் பயணிகளை ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி வெகுவாக கவர்கிறது.

இது மட்டுமின்றி நீர்வீழ்ச்சியின் அருகாமையில் லிங்க வடிவில் முருகன் ஆலயம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும்போது நீர்வீழ்ச்சியைக் காணவரும் சுற்றுலாப் பயணிகள் முருகன் கோயிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

மூலிகை மரங்கள் நிறைந்த வனப்பகுதிக்கு நடுவே ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளதால் இந்த நீர்வீழ்ச்சியில் குளித்தால் பலவிதமான நோய்கள் குணமாகும் என்ற நம்பிக்கை சுற்றுலாப் பயணிகளிடம் இருப்பதால் மழைக் காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வரத்தும் இங்கு அதிகமாக காணப்படுகிறது.

கடந்த 3 வாரங்களாக ஜவ்வாதுமலைத் தொடரில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. இதையறிந்த சுற்றுலாப் பயணிகள் அங்கு திரண்டு நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 3 நாட்களாக ஏலகிரி மலையில் கனமழை பெய்து வருவதால் தற்போது ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகமாக காணப்படுகிறது. மலையின் உச்சியில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் அருவி அருகே செல்லவும், அருவியில் இறங்கி குளிக்கவும் வனத்துறையினர் இன்று (அக்.1) தடை விதித்தனர். இதனால், நீர்வீழ்ச்சிக்கு குடும்பத்துடன், நண்பர்களுடன் சுற்றுலா வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதுகுறித்து திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் சோலைராஜன் கூறுகையில், "ஏலகிரி மலையில் பெய்து வரும் கனமழையால் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகமாக காணப்படுகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மலை உச்சியில் இருந்து கீழே இறங்க முயன்ற இளைஞர் ஒருவர் பாறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார். தற்போது தண்ணீர் வரத்து அதிகமாக காணப்படுவதால் உயிர் சேதத்தைத் தடுக்க சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளைக் கண்காணிக்கவும் வனத்துறை ஊழியர்கள் அங்கு கண்காணிப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். ஏலகிரி காவல் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரைத் தொலைவில் இருந்து கண்டு ரசிக்க எந்தத் தடையும் இல்லை" எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்