மிச்சம் மீதி இருக்கும் வேளாண்மைக் கட்டமைப்பையும், ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டத்தான், இப்போது இந்த மூன்று சட்டங்களையும் பாஜக அரசு கொண்டு வந்திருக்கிறது. மத்திய - மாநில அரசுகள் செய்த தவறுகளைச் சரி செய்வதற்கான வல்லமை மக்களுக்கு உண்டு என்பதை அக்டோபர் 2 ஆம் நாள் அகில இந்தியாவுக்கும் காட்ட கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் ‘அக்டோபர் - 2 கிராம சபைகள் கிளர்ந்தெழட்டும்!’ என்ற தலைப்பில் இன்று காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் ஆற்றியுள்ள உரை வருமாறு:
''பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய விவசாயப் பெருங்குடி மக்களே, விவசாயத் தொழிலாளர்களே, பாட்டாளித் தோழர்களே, அன்பு உடன்பிறப்புகளே வணக்கம்.
» புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக வழக்கு: திருச்சி சிவா உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
அக்டோபர் 2 - உலகத்துக்கு அகிம்சையைப் போதித்து, இந்தியாவின் விடுதலைக்குப் புதுப்பாதை காட்டிய பெருந்தகை அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாள். இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத் தரப் போராடியது மட்டுமே அவரது பெருமையல்ல; இந்தியா எப்படிப்பட்ட நாடாக வளர வேண்டும் என்பதையும் காந்தியடிகள் சொல்லிச் சென்றார்.
'இந்தியா என்பது கிராமங்களில்தான் வாழ்கிறது' என்றார் அந்த மகாத்மா. 'விவசாயியே நீதான் அரசன், இவ்வுலகின் எஜமான்' என்ற பாடலை அவர் அடிக்கடி பாடினார். அப்படிப்பட்ட மகாத்மா காந்தி வாழ்ந்த விவசாய நாட்டை கார்ப்பரேட்டுகளுக்கு விற்கக் கூடிய வகையில் மூன்று சட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார்களே… அதைப் பற்றித்தான் இப்போது உங்களிடம் பேசப்போகிறேன்!
2014 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் பரப்புரை செய்து வந்த பிரதமர் மோடி , நான் பிரதமரானால் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவேன் என்று மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தார். ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன; அவர் சொன்னது நடக்கவில்லை.
ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளில் 60 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் 10 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டிருக்கிறார்கள். இதுதான் மகாத்மா காந்தி காண விரும்பிய இந்தியாவா?
மிச்சம் மீதி இருக்கும் வேளாண்மைக் கட்டமைப்பையும், ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டத்தான், இப்போது இந்த மூன்று சட்டங்களையும் பாஜக அரசு கொண்டு வந்திருக்கிறது. இந்தச் சட்டங்களால் விவசாயிகள் வாழ்க்கை செழித்துக் குலுங்கப் போவதாகப் பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தச் சட்டங்களால், விவசாயி வாழ்க்கை தரிசு நிலமாகப் போகப் போகிறதுதான் உண்மை.
* விவசாயிகள் உற்பத்தி செய்கிற பொருட்களுக்குக் குறைந்தபட்ச அடக்க விலையை இந்தச் சட்டங்கள் சொல்லவே இல்லை!
* விவசாயிகளைக் காக்க வேண்டிய தனது பொறுப்பை மத்திய அரசு தட்டிக் கழிக்கிறது!
* விவசாயி என்ன விளைய வைக்கலாம்; அதை யாருக்கு விற்கலாம்; என்ன விலைக்கு விற்கலாம் என்பதையெல்லாம் தீர்மானிக்கின்ற உரிமையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கத்தான் இந்தச் சட்டங்கள் மூலமாக வழி வகுத்திருக்கிறார்கள்!
* இந்திய உணவுக்கழகம், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள், நேரடி கொள்முதல் நிலையங்கள் இவை எல்லாவற்றையுமே மூடப்போகிறார்கள்!
* உழவர் சந்தைகளை இனி திறக்க மாட்டார்கள்!
* கரோனா ஊரடங்கு காலத்தில் அவசர கதியில் இந்தச் சட்டங்களை நிறைவேற்றினார்கள்! மூன்று சட்டங்களையுமே நாடாளுமன்றத்தில் முறைப்படி நிறைவேற்றவில்லை! அதற்கான வாக்கெடுப்பு கூட நடத்தவில்லை!
* வேளாண்மை என்பது மாநிலப் பட்டியலில் இருக்கிறது. ஆனால், மாநில உரிமைகளைப் பறித்து கூட்டாட்சித் தத்துவத்துக்கு வேட்டு வைக்கிறது இந்தச் சட்டம்!
* இந்தச் சட்டத்தில் விவசாயிக்கு இழப்பீடு உண்டா? கடன் தள்ளுபடி உண்டா? உணவு தானிய மானியம் உண்டா? உர மானியம் உண்டா? பொருட்களைப் பதப்படுத்தி வைக்க நிதி உதவி உண்டா? விவசாயத் தொழிலாளர்க்கு வேலை உத்தரவாதம் உண்டா? எதுவுமே இல்லை!
அதனால்தான் இந்தச் சட்டங்களை நாம் கடுமையாக எதிர்க்கிறோம்!
இந்தச் சட்டங்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பதுக்கலுக்கு வழிவகுக்கிறது. செயற்கையான தட்டுப்பாடு உருவாக வகை செய்கிறது. ஏழை - எளிய, நடுத்தரப் பிரிவுகளைச் சார்ந்த நுகர்வோர் வாங்கிக் குவித்திட முடியாத அளவிற்கு விலைவாசி ஏற்றத்திற்கும், பதுக்கல்காரர்கள் கொள்ளை லாபம் பெறவும் ஏதுவாக அமைந்துள்ளது.
இந்த மூன்று சட்டங்களை நாம் மட்டுமல்ல, இந்தியாவே எதிர்க்கிறது. அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகள் வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு மாநில அரசுகள் எதிர்க்கின்றன. ஆனால் விவசாயி என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் ‘போலி விவசாயியான’ பழனிசாமி, இந்தச் சட்டங்களை விழுந்து விழுந்து ஆதரிக்கிறார்!
விவசாயிகள் கடனை ரத்து செய்ய முடியாது என்று சொல்லி உச்ச நீதிமன்றம் வரை போன இவர் ஒரு விவசாயியா? காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடகாவைத் தடுக்க முடியாத இவர் ஒரு விவசாயியா? ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்’ என்று அறிவித்துவிட்டு, பழைய ஹைட்ரோகார்பன் திட்டங்கள் தொடர்ந்து செயல்படும் என்று சொன்னாரே. இவர் ஒரு விவசாயியா?
எட்டுவழிச்சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளைக் கைது செய்து துன்புறுத்தும் இவர் ஒரு விவசாயியா? கிசான் திட்டத்தில் போலி நபர்களைச் சேர்த்து முறைகேட்டுக்கு உதவிய இவர் ஒரு விவசாயியா? குடிமராமத்துப் பணிகளில் கூட ஊழல் செய்து கொள்ளையடிக்கும் இவர் ஒரு விவசாயியா?
விவசாயிகளையும், விவசாயத்தையும் ஒட்டுமொத்தமாக அழிக்கக்கூடிய ஆபத்தான மூன்று சட்டங்களையும் ஆதரிக்கிற இவர் ஒரு விவசாயியா? இத்தனை கொடுமைகளையும் செய்துகொண்டே தன்னை ஒரு விவசாயி என்று வேறு சொல்லிக் கொள்கிறார். அவர் விவசாயி அல்ல, வேடதாரி.
விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களைக் கொண்டுவரும் பாஜக அரசைக் கண்டித்தும் - அதற்கு தலையாட்டும் அதிமுக அரசைக் கண்டித்தும் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கடந்த 28 ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். 3500-க்கும் மேற்பட்ட இடங்களில் மூன்றரை லட்சம் பேர் திரண்டு போர் முழக்கம் எழுப்பினார்கள்!
அடுத்தகட்டமாக இந்த மூன்று சட்டங்களையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளோம். அதற்கும் அடுத்ததாக, மக்கள் சக்தியை, மத்திய அரசுக்குக் காட்டக் கூடிய வகையில் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன்.
அக்டோபர் 2 ஆம் நாள் தமிழகக் கிராமங்கள் அனைத்திலும் நடக்கக் கூடிய கிராம சபைக் கூட்டங்களில், மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று சட்டங்களையும் எதிர்த்து, அனைத்து ஊராட்சித் தலைவர்களும் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் அந்த வேண்டுகோள்!
* அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் - 2020
* விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம்-2020
* விவசாயிகள் விளைபொருட்கள் வாணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம்- 2020
- ஆகிய மூன்று சட்டங்களும் விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்கள். இதனால் விவசாயம் பாழாகும். விவசாயி வாழ்க்கை சிதையும். கிராமங்களே அழிந்துபோகும்.
இதனை மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில் அனைத்து கிராம சபைகளிலும் தீர்மானம் நிறைவேற்றுங்கள்!
நம் கழனிகளை கார்ப்பரேட்டுகளுக்கு அடகு வைக்கும் மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தொட்டிலாக இருக்கும் ஊராட்சி மன்றங்களிலும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
அதனால்தான், அண்ணல் காந்தி அடிகள் பிறந்த நாளான, அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில், கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுங்கள் என்று அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
வேளாண் துறையைக் காப்பாற்றக் கட்சி வித்தியாசம் பாராமல் அனைவரும் இதனைச் செய்ய வேண்டும். இந்த மூன்று சட்டங்களுக்கும் எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் இருக்கிறது என்பதை இரண்டு அரசுகளுக்கும் காட்ட வேண்டும்.
இதற்கான முன்முயற்சிகளைத் திமுகவின் ஊராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை - நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
"சரியானதைச் செய்வதற்கான சுதந்திரம் மட்டுமல்ல; தவறுகளைச் சரி செய்வதற்கான வல்லமையும் இணைந்ததுதான் உண்மையான சுயராஜ்யம்" என்றார் காந்தியடிகள்.
மத்திய - மாநில அரசுகள் செய்த தவறுகளைச் சரி செய்வதற்கான வல்லமை மக்களுக்கு உண்டு என்பதை அக்டோபர் 2 ஆம் நாள் அகில இந்தியாவுக்கும் காட்டுவோம்''.
இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago