அக்.2 கிராம சபைக் கூட்டம்: எண்ணெய், எரிவாயுத் திட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவது எப்படி?- பேராசிரியர் ஜெயராமன் விளக்கம்

By செய்திப்பிரிவு

நாளை (அக்டோபர் 2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''காவிரிப் படுகையும், கடலோரக் கிராமங்களும் பேராபத்தில் உள்ளன. வரைமுறையற்ற எண்ணெய் - எரிவாயுத் திட்டங்களாலும், எரிவாயுக் குழாய் பதிப்பாலும் காவிரிப் படுகை மாவட்டங்களும், ராமநாதபுரம் மாவட்டமும் ஒட்டுமொத்த அழிப்புக்கு உள்ளாக இருக்கின்றன. சிவகங்கை, அரியலூர் ஆகிய மாவட்டங்களும் தப்பவில்லை.

மரக்காணத்தில் இருந்து நாகை மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் வரை கடற்பகுதியிலும் எண்ணெய் - எரிவாயு ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க எண்ணெய் நிறுவனங்கள் ஏலம் எடுத்துவிட்டுக் காத்திருக்கின்றன. இதனால் கடற்கரையோரக் கிராமங்கள் காலியாகும் அபாயம் உள்ளது. ஆகவே, இத்திட்டங்களைத் தடுத்து நிறுத்த அக்டோபர் - 2 அன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில், அவற்றுக்கு எதிரான தீர்மானங்களைத் தவறாமல் நிறைவேற்றுங்கள்.

உங்கள் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் நமது சொந்த கிராமங்களில் தொடர்ந்து வாழவும், தமிழக நெற்களஞ்சியமான காவிரிப் படுகையில் வேளாண்மை தொடரவும், கடலோரக் கிராமங்களில் நிலம் தாழ்ந்து கடலுக்குள் அமிழ்ந்து போகாமல் தடுக்கவும், பாரம்பரிய மீன்பிடித் தொழில் தொடரவும், இத்தீர்மானங்களை இயற்றுவது அவசியம்.

எப்படிச் செய்வது?

வேளாண்மை கிராமமான நமது ஊராட்சியில் விளைநிலம், பொது நிலம், தனியார் நிலம் எதுவாக இருந்தாலும், அதில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான கிணறுகளையோ, எண்ணெய் - எரிவாயு எடுத்துச் செல்லும் குழாய்களையோ அமைக்க அனுமதிப்பது இல்லை. கிராமத்தின் உழவுச் சூழலையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கின்ற வேறு எந்தத் தொழிலகங்களையும் அனுமதிப்பதில்லை.

காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகத் தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், வேளாண்மை மட்டுமே இங்கு நடக்க வேண்டும் என்பதே நம் கிராமத்தின் நிலைப்பாடு. விவசாயத்தைப் பெரிதும் பாதிக்கும் வகையில், நீர்வாய்க்கால்களின் நீர்ப்போக்கைத் தடுக்கும் வகையிலும், வயல் மற்றும் தோட்டங்களில் விவசாய எந்திரங்கள் பயன்படுத்த முடியாத வகையிலும், தேவையான ஆழ்துளைத் தண்ணீர்க் குழாய்க் கிணறு, கான்கிரீட் கட்டிடங்கள் அமைத்துக்கொள்ள முடியாதபடியும், கிடைமட்ட எண்ணெய் - எரிவாயுக் குழாய்களை அமைக்கும் பணிகளை நமது கிராமத்தில் அனுமதிப்பதில்லை.

விவசாயத்தைப் பாதிக்கும் வகையில், நம் ஊரின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரின் ஒப்புதலைப் பெறாத பாரத்மாலா திட்டத்தின்படியான சாலைகள், பெட்ரோ - கெமிக்கல் தொழிற்சாலைகள், அனல்மின் நிலையங்கள், சுற்றுச் சூழலையும் வாழ்வுச் சூழலையும் பாதிக்கும் தொழிலகங்கள் ஆகியவற்றை அமைக்க அனுமதிப்பதில்லை.

எங்கள் பகுதியை ஒட்டியுள்ள ஆழமற்ற மற்றும் ஆழமான கடற்பகுதியில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதை அனுமதிக்க முடியாது. தமிழகத்தையொட்டிய கடற்பரப்பில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்கத் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. விடுபட்ட பகுதிகளையும் உள்ளடக்கி காவிரிப் படுகை முழுவதும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதிக்குள் சேர்க்கப்பட வேண்டும்.

இவற்றை வலியுறுத்தித் தீர்மானங்கள் இயற்றி நிறைவேற்றிட வேண்டும்''.

இவ்வாறு பேராசிரியர் த.ஜெயராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்