ஆறு மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் மீண்டும் மதுபார்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் நூலகங்கள் மட்டும் இன்னும் திறக்க அனுமதி கிடைக்காமல் மூடியே கிடக்கின்றன.
கரோனா தொற்றுப் பரவத் தொடங்கியதால் நாடு முழுவதும் மார்ச் 24-ம் தேதி முதல் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஆனால், புதுவையில் 23-ம் தேதி மாலை முதல் ஊரடங்கு அமலானது. பொதுப் போக்குவரத்து, பள்ளிகள், நூலகங்கள், உணவகங்கள், மதுக்கடைகள், மதுபார்கள், விடுதிகள், வர்த்தக, வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன.
இதன்பின், மத்திய அரசு மே மாதம் முதல் படிப்படியாக ஊரடங்கில் தளர்வு அளித்து வருகிறது. மே மாத இறுதியில் 25-ம் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டன. வெளியூரில் இருந்து மது அருந்த வருபவர்களை தடுக்கும் வகையில் கரோனா வரியும் விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பால் புதுவையில் மதுபானங்கள் விலை தமிழகத்திற்கு இணையாக உயர்ந்தது. மதுபானங்கள் விலை உயர்வு, பார்கள் திறக்காதது, பொதுப் போக்குவரத்து ரத்து ஆகியவற்றால் மது அருந்த புதுவைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்தது.
இந்நிலையில், 5-ம் கட்டமாக தற்போது ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் 15-ம் தேதி முதல் திரையரங்குகளை 50 சதவீத இருக்கை வசதியுடன் திறக்கலாம். பள்ளி, கல்லூரிகளைப் படிப்படியாகத் திறக்கலாம் எனப் புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, புதுவையில் வரும் 15-ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளன. 6 மாதங்களுக்குப் பிறகு இன்று (அக். 1) முதல் மதுபார்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கலால்துறை விதிகளுக்கு உட்பட்டு மதுபார்கள் திறக்கப்பட்டதாகவும், இரவு 9 வரை அனுமதி உண்டு எனவும் மதுபான உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். மதுபார்களைச் சுத்தப்படுத்தும் பணி, தனிமனித இடைவெளியின்படி இருக்கைகள் அமைத்தல் ஆகிய பணிகளில் மதுபான ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதே நேரத்தில், புதுச்சேரியில் இன்னும் நூலகங்களை மட்டும் திறக்க அனுமதி கிடைக்கவில்லை. தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி நூலகங்கள் திறக்கப்பட்டன. தமிழகத்தைப் போல் நூலகங்களைத் திறக்கக் கோரி முதல்வரிடம் வலியுறுத்தி மனுவும் தரப்பட்டுள்ளது. ஆனால், அதற்கும் நடவடிக்கையே இல்லை.
இந்நிலையில், மதுபார்களுக்கும், திரையரங்குகளுக்கும் அனுமதி வந்துள்ள நிலையில் நூலகங்கள் திறப்பு மட்டும் அறிவிக்கப்படாமல் உள்ளதால் ஆட்சியரைச் சந்திக்க உள்ளதாக நூலகர்கள் தெரிவித்துள்ளனர்.