கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர் இறந்துவிட்டதாகக் கூறி, அவரது உறவினர்களிடம் வேறு ஒருவரின் உடலை ஒப்படைத்துள்ளனர். இடுகாட்டில் முகத்தைப் பார்த்துவிட்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சியப்பன்(55). சுய நினைவின்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். உடல் சற்று முன்னேற்றமடைந்த நிலையில், மற்றொரு வார்டுக்கு மாற்றப்பட்டார். கரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிறிது நேரத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையைச் சேர்ந்த பாலர்(52) என்பவர் சுய நினைவிழந்த நிலையில் இம்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கொளஞ்சியப்பனை படுக்க வைத்தஅதே படுக்கையில் அவரை அனுமதித்தனர். புதிதாக ஒரு நபர் அனுமதிக்கப்பட்ட நிலையிலும், ஏற்கெனவே அந்தப் படுக்கையில் இருந்த கொளஞ்சியப்பனின் நோயாளி விவரக் குறிப்பு (கேஸ்ஷீட்) மாற்றப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு பாலர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதற்கிடையே, இம்மருத்துவமனையில் பணிபுரியும் கொளஞ்சியப்பனின் உறவினரான செவிலியர் ஒருவர், அவரது உடல்நிலைக் குறித்து கேட்க, அங்கிருந்த மருத்துவப் பணியாளர்கள், நோயாளிக்கான விவரக் குறிப்பை பார்த்து,கொளஞ்சியப்பன் உயிரிழந்து விட்டதாகவும், இறந்து பின்புஎடுக்கப்படும் கரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இத்தகவல் கொளஞ்சியப்பன் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட, அவர்கள் நேற்று மருத்துவமனைக்கு வந்து உடலை பெற்றுச் சென்று, சமூக இடைவெளியைப் பின்பற்றி இறுதி சடங்குகளை மேற்கொள்ள தொட்டியம் இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர்.
கரோனா தொற்று உறுதியாகவில்லை என்றாலும், நோய் பரவல்அச்சத்தால் உடலை குளிப்பாட்டி இறுதி சடங்குகள் செய்யவில்லை. இடுகாட்டில் வைத்து இறுதியாக அவரது முகத்தை பார்க்கலாம் என சடலத்தின் மீது கட்டப்பட்டிருந்த துணியை அகற்றியபோது, உயிரிழந்தது கொளஞ்சியப்பன் இல்லை என்பது தெரியவந்தது.
பதற்றமடைந்த உறவினர்கள், உடனே இதுபற்றி மருத்துவமனைக்குத் தகவல் தெரிவிக்க, மருத்துவமனை நிர்வாகத்தினர், உயிரிழந்தவரின் குறிப்புகளை ஆய்வுசெய்து, இறந்தது பாலர் என்பதை உறுதிப்படுத்தினர். உடனே உடலை திரும்பப் பெற்று பாலரின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அவரது சொந்த ஊரான சந்தைப்பேட்டையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சதீஷ், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவக் குழுவிடம் விசாரணை மேற்கொண்டு 2 மருத்துவர்கள், 5 செவிலியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரை செய்துள்ளார்.
இதற்கிடையே கொளஞ்சியப்பன், பாலர் இருவருக்கும் பரிசோதனை முடிவில் கரோனா தொற்று இல்லை என்று வந்துள்ளது. இந்தக் குழப்பம் ஏதும் அறியாமல் கொளஞ்சியப்பன் தொடர்ந்து சிகிச்சை பெறுகிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago