திருப்பத்தூர் நகரின் மையப்பகுதியில் ரூ.109 கோடி மதிப்பில் ஆட்சியர் அலுவலகம்; காணொலிக் காட்சி மூலம் நாளை அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்

By ந. சரவணன்

திருப்பத்தூர் நகரின் மையப்பகுதியில் புதிதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்துத் துறை அரசு அலுவலகக் கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவை தமிழக முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் நாளை தொடங்கி வைக்கிறார்.

வேலூர் மாவட்டத்துடன் இருந்த திருப்பத்தூர் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதி தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. புதிய மாவட்டத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளும் படிப்படியாக செய்து தரப்படும் என மாவட்டத் தொடக்க விழாவில் தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிகமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கப்பட்டது. அங்கிருந்தபடியே கடந்த ஓராண்டாக மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக திருப்பத்தூரை ஒட்டியுள்ள ஜோலார்பேட்டை, மண்டலவாடி, பொன்னேரி, நாட்றாம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைப்பதற்கான போதிய இடவசதிகள் அங்கு இல்லாததால், புதிய ஆட்சியர் அலுவலகம் அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

அதன்படி, திருப்பத்தூர் நகரின் மையப்பகுதியில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்துக்கு சொந்தமான காலி இடத்தில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, திருப்பத்தூர் நகரின் மையப்பகுதியில் உள்ள வனச்சரகர் அலுவலக வளாகத்தில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் புதிதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க முதல் கட்டமாக ரூ.109.71 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து அரசாணையை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை (செப்-30) நடைபெறுகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, "தமிழகத்தின் 35-வது மாவட்டமாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்துக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் படிப்படியாக செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையொட்டி அனைத்து அரசு அலுவலகங்களும் ஒரே இடத்தில் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வனச்சரகர் அலுவலகத்தில் காலியாக உள்ள 14 ஏக்கர் காலி இடத்தில், சுமார் 27 ஆயிரத்து 376 சதுர மீட்டர் பரப்பளவில் புதிதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடக்கிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்வர் பழனிசாமி அடிக்கல்நாட்டு விழாவை தொடங்கி வைக்கிறார்.

இப்பணிகள் உடனடியாக தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தரைத்தளத்துடன் 7 மாடி கட்டிடமாக கட்டப்பட உள்ளது. இங்கு, மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகம், வேளாண்மைத் துறை அலுவலகம், கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றம் சிறுபான்மைப்பிரிவு, மாவட்ட தொழில் மையம், வீட்டுவசதி வாரியம், தாட்கோ, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், சமூக நலத்துறை, தேர்தல் பிரிவு, நகர்ப்புற வளர்ச்சி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, கால்நடை பராமரிப்புத்துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் வனம், செய்தி மற்றும் சுற்றுலாத்துறை, தகவல் தொழில்நுட்பம், தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாடு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலம், போக்குவரத்துத் துறை, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு என முக்கிய அரசுத்துறை அலுவலகங்கள் ஒரே இடத்தில் அமைக்கப்பட உள்ளன.

2020-21 ஆம் நிதியாண்டில் முதல் கட்டமாக ரூ.109.71 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இப்பணிகள் விரைவாக தொடங்கப்பட்டு ஒன்றரை ஆண்டில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டக் காவல் துறை அலுவலகம், காவல் பயிற்சி மைதானம், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலகம் கட்டத் தனியாக இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்