190 ஆண்டுகளுக்கு முன்பே காலராவால் கொத்துக் கொத்தாய் மடிந்த தமிழக மக்கள்: கடந்தகால நோய்கள் மூலம் பாடம் கற்க அறிவுரை

By எஸ். முஹம்மது ராஃபி


190 ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், இந்தியாவில் பரவிய காலரா நோயால் பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த கால நோய்களின் வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்று நம்மைக் தற்காத்துக் கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அறிவியல் வளர்ச்சி அடைந்த இக்காலத்திலேயே தொற்று நோய்களை கட்டுப்படுத்த மருத்துவ உலகம் திணறி வரும்போது, எவ்வித தடுப்பு சாதனங்களும் கண்டுபிடிக்கப்படாத அக்காலத்தில் கொள்ளை நோய் உயிரிழப்புகள் தவிர்க்க முடியாததாக இருந்துள்ளன.

பல நூற்றாண்டுகளாக பிளேக், அம்மை, காலரா, இன்ஃபுளூயென்சா ஆகிய பல நோய்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பரவி பல லட்சம் பேரை கொன்று உலகை அச்சுறுத்தி வந்துள்ளது.

19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வேகமாகப் பரவிய காலரா எனும் கொள்ளை நோய் மூலம் மக்கள் கொத்துக் கொத்தாய் மடிந்தனர் என்பதை அறியும்போது, நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் இது என்பதை உணர முடியும்.

இது பற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது:

இன்று உலகையே ஆட்டிப் படைக்கும் கரோனா போன்று, நூற்றாண்டுகளுக்கு முன்பு காலராவால் பல லட்சம் பேர் மடிந்தார்கள். கி.பி. 1831-32, 1843-44, 1861-63 ஆகிய ஆண்டுகளில் காலராவின் பாதிப்புகள் ஒருங்கிணைந்த மதுரைமாவட்டத்தில் (ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல்) மிக மோசமாக இருந்ததாக கி.பி.1868-ல் வெளிவந்த மதுரை மாவட்ட மேனுவல் எனும் நூலை எழுதிய ஆங்கிலேயரான நெல்சன் என்பவர் தெரிவித்துள்ளார்.

கி.பி.1887 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு வெளியிட்ட காலரா பற்றிய அறிக்கையில் 1871-1881 வரையிலான காலத்தில் அன்றைய தென்மாவட்டங்களில் மட்டும் 63,437 பேர் காலராவால் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1877-ல் மட்டும் 30,000 பேர் இறந்துள்ளனர். அந்தாண்டு காலராவின் தாக்கம் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில்தான் மிக அதிகமாக இருந்துஉள்ளது.

பல ஆங்கிலேயர்களும் இந்நோய்க்கு இறந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில் கி.பி. 1832-ல் காலரா பாதிப்பால் ஜார்ஜ் கேரோவ் பேட் என்ற 14 வயது சிறுமி இறந்துள்ளார். ராமநாதபுரம் வடக்குத் தெரு கிறிஸ்து நாதர் தேவாலயத்தில் உள்ள கல்லறை கல்வெட்டால் இதை அறியமுடிகிறது.

மேலும் கிறித்துவ சபை பாஸ்டர் ஆர்தர் ஹீபர் தாமஸ் என்பவர், ராமநாதபுரம் பகுதிகளில் கி.பி.1888 டிசம்பரில் புயல் காரணமாக காலரா பரவி பலர் இறந்ததை தனது குறிப்பேட்டில் பதிவு செய்துள்ளார்.

கொள்ளை நோயோ, தொற்று நோயோ தனி மனிதனின் விழிப்புணர்வும், பாதுகாப்பும் தான் நம்மைபாதுகாக்கும். கடந்த கால நோய்களின் வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்