தமிழகத்தில் முதல் முறையாக மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘வி ஃபார் யூ’ என்ற திட்டத்தை எஸ்.பி. மயில்வாகனன் தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டத்தில் இருந்து புதிதாகப் பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவல் துறையினரின் செயல்பாடுகள் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேம்படுத்தும் பணியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்து செல்லும் காவலர்கள் எந்தெந்தப் பகுதிக்குச் சென்றார்கள் என்ற விவரங்கள் உடனுக்குடன் காவல் கண்காணிப்பாளர் அறையில் பதிவாகும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதேபோல், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் 7 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை பதிவு செய்யும் நடைமுறையைத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் மனுக்கள் மீது விரைவாக விசாரணை நடைபெறுவதால் இந்தத் திட்டத்துக்குப் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
மூத்த குடிமக்கள் பாதுகாப்பு
நாடு முழுவதும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக அனைத்து மாவட்டங்களிலும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் முதல் முறை
தமிழகத்தில் முதல் முறையாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனிமையில் வசிக்கும் மூத்த குடிமக்கள் 252 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களைத் தினமும் கண்காணித்து பாதுகாப்பை உறுதி செய்வதுடன் அவர்களுக்குத் தேவையான உதவிகளைக் காவல் துறையினர் செய்யும் வகையில் ‘வி ஃபார் யூ’ (நாங்கள் உங்களுக்காக) என்ற புதிய திட்டத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் இன்று (செப்-28) தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தில் 150 காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்கள் வழக்கமான ரோந்துப் பணியின்போது மூத்த குடிமக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் தேவை குறித்து விசாரிப்பார்கள். மூத்த குடிமக்களின் செல்போன் எண்ணில் அவசர எண் அழைப்பில் அந்தந்தப் பகுதி காவல் நிலையம், காவல் நிலைய அதிகாரி உள்ளிட்டோரின் செல்போன் எண்களும் பதிவு செய்யப்படும். இதன் மூலம் அவர்களுக்கு அவசர உதவி தேவைப்பட்டால் உடனுக்குடன் தொடர்புகொள்ள முடியும்.
இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனிமையில் இருக்கும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பையும் நலன்களையும் பாதுகாக்கும் ‘வி ஃபார் யூ’ திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். ஒவ்வொரு மூத்த குடிமக்கள் வீட்டிலும் ஒரு புத்தகம் வழங்கப்பட்டிருக்கும். இதில், உள்ள க்யூஆர் கோட் மூலம் ரோந்து காவலர் ஸ்கேன் செய்யும்போது, அதுகுறித்த விவரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதிவாகும்.
தினமும் காவலர்கள் வந்து செல்வதால் மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள் தவிர்க்கப்படும். அதேபோல், அவர்களுக்குத் தேவையான மருத்துவம் உள்ளிட்ட பிற உதவிகள் செய்யவும் காவல்துறை தயாராக இருக்கிறது. அரசுத் துறைகளில் ஏதாவது உதவி தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நிறைவேற்றப்படும்’’ என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago