ஏழைத் தாயின் மகனும் விவசாயியின் மகனும் விவசாயிகளுக்குக் கெடுதல்களைச் செய்கிறார்கள்: ஸ்டாலின் விமர்சனம்

By செய்திப்பிரிவு

ஏழைத் தாயின் மகன் என்கிறார் மோடி. விவசாயியின் மகன் என்கிறார் முதல்வர் பழனிசாமி. ஏழைத் தாயின் மகனும், இந்த விவசாயியும் சேர்ந்து ஏழை மக்களுக்கோ, விவசாயிகளுக்கோ எந்த நன்மையும் செய்யவில்லை; தொடர்ந்து விவசாயிகளுக்கு விரோதமான செயல்களை, கெடுதல்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனைப் போட்டி போட்டுக்கொண்டு செய்கிறார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களைப் பாதிக்கும் மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், அதற்குத் துணை போகும் ஆளும் அதிமுக அரசைக் கண்டித்தும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

காஞ்சிபுரம் – கீழம்பி கிராமத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையேற்று உரையாற்றினார்.

ஸ்டாலின் ஆற்றிய உரை:

“மத்திய பாஜக ஆட்சியில் விவசாய விரோத - மக்கள் விரோதச் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தியும்; அதற்குத் துணை போகும் அடிமை அதிமுக அரசையும் கண்டித்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் நானும் கலந்துகொள்வதற்காக மகிழ்ச்சியடைகிறேன்; பெருமைப்படுகிறேன்.

மண்ணைக் காப்பதற்காக - மக்களைக் காப்பதற்காக; ‘மண்ணைக் காத்த - மக்களைக் காத்த’, நம் ஒப்புயர்வற்ற தலைவர் அண்ணாவைத் தந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

கடந்த 22-ம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டம் - நகரம் - ஒன்றியம் – பேரூர்களில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் - முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது. கூட்டணிக் கட்சிகளின் முன்னணித் தலைவர்கள், தொண்டர்கள், செயல்வீரர்கள் மற்றும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் கரோனா கால விதிமுறைகளைப் பின்பற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

திமுகவை 70 மாவட்டங்களாகப் பிரித்திருக்கிறோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஒவ்வொரு இடத்திலும் 100 பேருக்கு மிகாமல் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றால் கிட்டத்தட்ட 3,50,000 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய அரசு என்றால்; மாநில அரசு விவசாயிகளைக் காலில் போட்டு மிதிக்கிறது. இருவரும் சேர்ந்து வஞ்சிப்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்லத்தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மத்தியில் ஒருவர் பிரதமராக இருக்கிறார். அவர் தன்னை ‘ஏழைத் தாயின் மகன்’ என்று சொல்லிக் கொள்கிறார். இந்த ஏழைத் தாயின் மகன் ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஏராளமான இந்திய மக்கள் ஏழைகள் ஆனார்கள். புதிது புதிதாக ஏழைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் ஏழைத் தாயின் மகன்.

மாநிலத்தில் ஒருவர் முதல்வராக இருக்கிறார். அவர் தன்னை ‘விவசாயி மகன்’ என்றும், 'விவசாயி' என்றும் தம்பட்டம் அடித்துக்கொள்கிறார். அவர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் விவசாயிகளின் வாழ்க்கையே பறிபோய்க் கொண்டிருக்கிறது. ஏழைத் தாயின் மகனும், இந்த விவசாயியும் சேர்ந்து ஏழை மக்களுக்கோ, விவசாயிகளுக்கோ எந்த நன்மையும் செய்யவில்லை; தொடர்ந்து விவசாயிகளுக்கு விரோதமான செயல்களை, கெடுதல்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனைப் போட்டி போட்டுக்கொண்டு செய்கிறார்கள்.

விவசாயத்தை முன்னேற்றப்போவதாகச் சொல்லி மூன்று சட்டங்களை மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. கொஞ்சம் யோசியுங்கள். இந்தச் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஏதாவது நன்மையுண்டா? நன்மை இல்லை என்றாலும் பரவாயில்லை, தீங்கு விளைவிக்கக் கூடாதல்லவா? இந்தச் சட்டங்களால் விவசாயிகள் பின்தங்கி விடுவார்கள். நிலத்தில் இருந்து துரத்தப்படுவார்கள். அதனால்தான் அந்தச் சட்டங்களை எதிர்க்கிறோம்.

தமிழகம் மட்டுமல்ல, பாஜகவின் கூட்டணிக் கட்சியான பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சிரோமணி அகாலி தளம் இந்தச் சட்டங்களை எதிர்க்கிறது. அந்தக் கட்சி, எதிர்க்கட்சி அல்ல, மத்திய பாஜக அரசோடு கூட்டணியில் இருந்த கட்சி எதிர்க்கிறது. கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து கூட்டணியில் இருந்து விலகியிருக்கிறார்கள்.

பஞ்சாப் மாநிலத்தில் 50 ஆண்டுகளாக நிறைவேற்றி வைத்துள்ள விவசாயக் கட்டமைப்பு அழிந்துவிடும் என்று அவர்கள் கூறி எதிர்க்கிறார்கள். அந்தக் கட்சி பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த கட்சி. அக்கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்திருக்கிறார். இந்தச் சட்டத்தை எதிர்ப்பது நாம் மட்டுமல்ல; அவர்களுடன் கூட்டணி வைத்திருந்த கட்சியே எதிர்க்கிறது.

மத்திய அரசு எந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தாலும் திமுகவும் - திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் எதிர்க்கின்றன என்று சிலர் தவறான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். அதைப் பற்றிக் கவலையில்லை. மக்களுக்கு விரோதமான சட்டம் எதுவாக இருந்தாலும் அதனைக் கடுமையாக எதிர்ப்போம். இந்த விவசாயச் சட்டங்களை நாம் மட்டுமா எதிர்க்கிறோம்; இந்தியாவே எதிர்க்கிறது - போராடுகிறது.

பஞ்சாப், ஹரியாணா, மேற்கு வங்கம், கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், டெல்லி எனப் பல்வேறு மாநிலங்களில் விவசாய அமைப்புகள் அரசியல் கட்சிகள் போராடி வருகின்றன. நாடு முழுவதும் இந்தச் சட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் வேளாண் மசோதாவை எரித்துப் போராட்டம் நடைபெற்றது. ராஜஸ்தானில் விவசாயிகள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்துகிறார்கள். கர்நாடகாவில் விவசாயிகள் சாலை மறியல் செய்கிறார்கள். 34 விவசாய சங்கங்கள் சேர்ந்து போராடி வருகிறார்கள்.

ஹரியாணாவில் விவசாயிகள் ரயில் மறியல் செய்து வருகிறார்கள். தண்டவாளத்தில் சமையல் செய்து சாப்பிட்டும், தண்டவாளத்தில் படுத்துத் தூங்கியும் போராட்டத்தை விவசாயிகள் நடத்துகிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில் 31 விவசாய அமைப்புகள் கடையடைப்புப் போராட்டம் நடத்தியுள்ளனர். பேருந்துகள் இயங்கவில்லை. உத்தரப் பிரதேசத்தில் இருந்து டெல்லியை நோக்கி விவசாயிகள் டிராக்டர் ஊர்வலம் நடத்தி உள்ளார்கள். கேரளாவில் ஆளுநர் மாளிகை முன்பு மறியலும், ஆர்ப்பாட்டமும் நடந்துள்ளது.

ஒட்டுமொத்த இந்தியாவே இந்தச் சட்டத்துக்கு எதிராக கொந்தளித்து போராட்டத்தை நடத்தி வருகிறது. வேளாண் சட்டத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய கேரள அரசு தயாராகி வருகிறது. பக்கத்தில் இருக்கும் மாநிலம் நீதிமன்றத்துக்குச் செல்வதைப்போல தமிழக அரசும் நீதிமன்றம் செல்லவேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால், அதைச் செய்யத் தமிழக அரசு முன்வரவில்லை. தமிழக அரசு நீதிமன்றம் செல்லாவிட்டால் தமிழக மக்களின் சார்பாக எதிர்க்கட்சியான நாங்கள் நீதிமன்றத்துக்குச் செல்வோம்.

இந்த மூன்று சட்டங்களும் தவறானது என்று பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்ததோடு மட்டுமின்றி; இதை எதிர்த்துப் போராடுகிறவர்களைக் கைது செய்ய மாட்டோம் என்கிறார். டெல்லியில் விவசாயிகள் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதோடு - சேர்ந்து போராடுகிறது. மேற்கு வங்கத்திலும் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டம் நடந்து வருகிறது.

ஆனால், தமிழ்நாட்டில் ஒருவர் இருக்கிறார். ‘விவசாயி’ என்று சொல்கிற முதல்வர் இருக்கிறார். கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் இந்தச் சட்டங்களை ஆதரிக்கிறார். இந்த மூன்று சட்டங்களை ஆதரித்து மக்களவை- மாநிலங்களவையில் வாக்களித்ததோடு மட்டுமின்றி; இந்தச் சட்டத்தை முழுவதுமாக ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுத்துள்ளார்.

அவர் மட்டுமா, விவசாய அமைச்சர் துரைக்கண்ணுவும் இந்தச் சட்டங்களை ஆதரித்துப் பேட்டி அளித்துள்ளார். வேளாண் அதிகாரியையும் மிரட்டி அச்சுறுத்தி இந்தச் சட்டங்களுக்கு ஆதரவாகப் பேட்டி அளிக்க வைத்துள்ளார்கள்.

ஸ்டாலினுக்கு விவசாயம் என்ன தெரியும் என்கிறார். நான் விவசாயி, விவசாயி என்று கூறித் திரியவில்லையே! விவசாயிகளுக்குத் துன்பம் ஏற்படும்போது துணை நிற்பவன் தான் இந்த ஸ்டாலின். எடப்பாடிதான் கிஸான் திட்டத்தில் உருவான ‘போலி விவசாயி’-யாக வலம் வருகிறார்.

காவிரியின் விவசாயிகளுக்காக இவர் என்ன செய்தார். காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணையைக் கட்டக்கூடாது என்று பிரதமரைச் சந்தித்து வற்புறுத்தினாரா முதல்வர் எடப்பாடி பழனிசாமி? நம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் திமுகவினர் பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தினார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தவில்லை.

எட்டுவழிச் சாலையை எதிர்க்கும் விவசாயிகளை அழைத்துப் பேசியிருக்கிறாரா எடப்பாடி? அவர்களைத் தடியடி நடத்தி, நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்த இவர் விவசாயியா? குடிமராமத்து திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளையடிக்கிறீர்களே, நீங்கள்தான் விவசாயியா? தூர்வாரும் திட்டத்தில் ஊழல் செய்கிறீர்களே, நீங்கள் விவசாயியா? ஹைட்ரோ கார்பன், மீத்தேனுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு எடப்பாடி என்ன செய்தார்? ஊர் ஊராகச் சுற்றி வரும் எடப்பாடி எங்காவது மக்களைச் சந்தித்தாரா? குறைகளைக் கேட்டாரா?

ஊர் ஊராகப்போய் அதிகாரிகளை பார்க்கிறார். வெட்கம் இல்லாமல் விவசாயி என்கிறார். விவசாயி என்று சொல்லும் எடப்பாடியைக் கேட்கிறேன் விவசாயிகளுக்கு நீங்கள் செய்தது என்ன? விவசாயக் கடன்களை வட்டியைத் தள்ளுபடி செய்யமாட்டேன் என்று உச்ச நீதிமன்றம் வரை சென்று மேல் முறையீடு செய்தது யார்? இந்தப் ‘போலி விவசாயி’யை மக்கள் நம்பமாட்டார்கள்.

இந்த வாரம் தனியார் வாரஇதழில் விவசாயச் சட்டம் குறித்து கடுமையாக விமர்சித்து, 'விதைப்பது விவசாயிகள் அறுப்பது யார்?' என்ற தலைப்பில் தலையங்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த இதழ் என்ன திமுகவை ஆதரிக்கும் பத்திரிகையா? இன்னும் சொல்லப்போனால் நம்மை விமர்சிக்கும் கேலி செய்யும் பத்திரிகைதான். எல்லாக் கட்சிகளையும் நடுநிலையுடன் விமர்சிக்கும் பத்திரிகை. அந்தப் பத்திரிகை இந்தச் சட்டங்கள் பற்றி எழுதியிருப்பதில் சில பகுதிகளை மட்டும் படித்துக்காட்டுகிறேன்.

'மக்களவையிலும் மாநிலங்களவையிலும் ஆளுங்கட்சியான பாஜக பெரும்பான்மையுடன் இருக்கிறது என்ற ஒரே காரணத்தால் எதிர்க்கருத்துகளுக்கு இடமே தராமல், கரோனா காலத்தில் அவசர அவசரமாக இந்த மசோதாக்களை நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன? ஒருபுறம் இது ஜனநாயக விரோதம் என்றால் இன்னொருபுறம் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் எதிரானது. விவசாயம் என்பது மாநில அரசுப் பட்டியலில் உள்ள துறை. ஆனால் எந்த மாநில அரசையும் கலந்தாலோசிக்காமல் இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது' என்று சொல்லியிருக்கிறது.

மேலும், 'இரண்டு ஹெக்டேர்கள் வரை நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகள். 80 சதத்துக்கும் மேல் இரண்டு ஹெக்டேருக்குள் மட்டும் நிலம் கொண்ட விவசாயிகளால் விளைபொருள்களைச் சேமித்துவைப்பதற்கான கிடங்குகளை எப்படி அமைக்க முடியும்? ஏற்றுமதிக்கான போக்குவரத்துச் செலவை எப்படிச் செலுத்த முடியும்?' என்று கேள்வியெழுப்புகிறது அந்த வார இதழ்.

"பெரிய நிறுவனங்களுடன் விவசாயிகள் ஒப்பந்தம் செய்துகொண்டு விவசாயம் செய்ய வழிவகுக்கிறது விவசாய ஒப்பந்தச் சட்ட மசோதா. தமிழகத்தில் ஏற்கெனவே கரும்பு ஒப்பந்த அடிப்படையில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆலைகளின் வாக்குறுதிகளை நம்பி சாகுபடி செய்துவிட்டு, பணம் வாங்கக் கால்கடுக்க விவசாயிகள் அலைந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த மசோதா அதற்கு என்ன தீர்வு வைத்திருக்கிறது?" என்று அந்த வார இதழ் கேள்வி கேட்டிருக்கிறது. அந்த வார இதழ் மட்டுமல்ல; பல பத்திரிகைகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன.

பிரதமர் மோடி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் வாக்குறுதிகள் வழங்குவது வழக்கம். ஆனால், அந்த வாக்குறுதிகள் அவருக்கே மறந்து போயிருக்கும். 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்றார். ஒருவருக்காவது வேலை கிடைத்திருக்கிறதா? கிடையாது.

இந்தியப் பொருளாதாரத்தை உலகின் மிகப்பெரும் சக்தியாக மாற்றுவேன் என்றார். எல்லா வகையிலும் இந்தியா பொருளாதாரத்தில் பின்தங்கி விட்டதைப் புள்ளிவிவரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.

கறுப்புப் பணத்தை ஒழிப்பேன் - வெளிநாட்டில் பதுக்கியுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு வந்து ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் தருவேன் என்றார். 15 லட்சம் அல்ல, 15,000, அட 15 ரூபாய், 15 பைசா கூட தரவில்லை.

விவசாயிகளின் எதிர்பார்ப்பு என்ன? குறைந்தபட்ச ஆதார விலை வேண்டும் என்பதுதான். மத்திய அரசு விளம்பரத்தில் குறைந்தபட்ச ஆதார விலையை நீக்கவில்லை என்று இருக்கிறது. ஆனால், வேளாண் சட்டத்தில் இல்லை - எந்தப் பிரிவிலும் இல்லை. அந்த விளம்பரம் ஏமாற்று விளம்பரம். விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன், மானியம் குறித்து இந்தச் சட்டத்தில் எதுவுமில்லை.

விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவேன் என்றார் மோடி. ஆனால் இவரது ஆட்சியில்தான் விவசாயிகள் தற்கொலைகள் தொடர்கின்றன. விவசாயிகளின் எதிர்பார்ப்பு என்ன? மத்திய அரசு செய்யப்போகும் உதவி என்ன? சலுகைகள் என்ன? கடன் தரப் போகிறதா? மானியம் உண்டா? அதைப் பற்றி எதுவும் இந்தச் சட்டங்களில் கிடையாது. இந்தச் சட்டத்தால் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் பயன்பெறும்.

ஒரு பக்கம் குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வந்து இந்தியர்களையே குடியுரிமை இல்லாதவர் ஆக்குகிறார்கள். இன்னொரு பக்கம் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்து அனைவரும் சுதந்திரமாக கல்வி பயில்வதைத் தடுக்கிறார்கள். தலைவரின் சமச்சீர்க் கல்வியைச் சின்னாபின்னமாக்கும் வகையில் புதிய கல்விக்கொள்கை, அனைவரும் படிப்பதைத் தடை செய்கிறது.

மற்றொரு பக்கம் வேளாண் சட்டங்களின் மூலமாக விவசாயிகளை நிராயுதபாணியாக மாற்றப் போகிறார்கள். ஒட்டுமொத்த மக்கள் விரோத ஆட்சியை மத்திய அரசு நடத்தி வருகிறது. அதற்கு மாநில அரசு தலையாட்டுகிறது. அடிமைச் சேவகம் செய்து வருகிறது.

ஏன் நூறுபேரைக் கொண்டு மட்டும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது? ஏன் அனைவரும் மாஸ்க் அணிந்திருக்கிறோம்? எங்கும் சுதந்திரமாகச் செல்ல முடியவில்லை. நாட்டின் சூழ்நிலை தெரியும். இது கரோனா காலம். இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மார்ச் மாதம் முதல் தொடர்ந்து 6 மாதங்களாகத் தொடர்கிறது. இந்தச் சூழ்நிலையில் மக்களைக் காப்பாற்றும் முயற்சியில்தான் மத்திய - மாநில அரசுகள் ஈடுபட வேண்டும். அதைப் பற்றிக் கவலைப்படாமல் மக்களுக்கு கொடுமை செய்யும் சட்டங்களைக் கொண்டுவருகிறார்கள்.

வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு உதவிகள், சலுகைகள், திட்டங்கள், பண உதவிகள் - உண்டா? மோடி மக்களுக்கு ஆயிரம் லட்சம் கோடி - லட்சம் கோடி என்று அறிவிப்பாரே தவிர, சாமானியர்களுக்கு எதுவும் வந்ததா? இல்லை.

தமிழகத்தில் கரோனா நுழைந்ததில் இருந்து மாதந்தோறும் ரூ.5000 தர வேண்டும் என்று சொல்லிவருகிறேன். 6 மாதமாகவே சொல்லி வருகிறேன். ஆனால் தமிழக அரசு தரவில்லை. இந்த நிலையில் இந்தச் சட்டம் தேவையா? மக்களவையில் எதிர்த்தோம். மாநிலங்களவையில் எதிர்த்தோம். மாநிலங்களவையில் திருச்சி சிவா அழுத்தம் திருத்தமாக எதிர்ப்புக் குரல் எழுப்பினார்.

மாநிலங்களவையில் நடந்தது ஜனநாயகப் படுகொலை. வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் மெஜாரிட்டி கிடைக்காது. அமளியை, குழப்பத்தை ஏற்படுத்தி மசோதாவை நிறைவேற்றியிருக்கிறார்கள். அதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும் செய்தியும் வந்திருக்கிறது.

ஒருவர் விபத்தில் பலியாக கிடக்கும்போது கழுத்தில் இருந்த நகையைத் திருடுவது போலத்தான் கொடுமையான கரோனா காலத்தில் இந்தக் கொடுமையான சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். கரோனாவைப் பயன்படுத்திக் கொள்ளையடிக்கும் ஆட்சி, இந்த ஆட்சி. கரோனாவைத் தடுக்க பொருள்கள் வாங்குவதிலும், குறிப்பாகத் தூய்மைப் பணியாளர்களுக்குத் துடைப்பம், சானிடைசர், பிளீச்சிங் பவுடர் போன்ற பொருள்களை வாங்குவதிலும் ஊழல் செய்பவர்களின் ஆட்சி இது. இதைத் துரத்தியடிக்க வேண்டும்.

கரோனா காலத்திலும் கொள்ளை அடிக்கும் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டார்கள். மிகச்சிறிய அளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நம் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, அடுத்தகட்டப் போராட்டத்தை அறிவிப்போம். நிச்சயம் இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறும்வரை போராடுவோம்”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்