தூத்துக்குடி- மாலத்தீவு இடையே நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டிருப்பதன் மூலம் பாரம்பரிய தோணித் தொழில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தோணி உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கப்பல் போக்குவரத்து தொடக்கம்
இந்தியா- மாலத்தீவு இடையே நேரடிசரக்கு கப்பல் போக்குவரத்தை மத்திய கப்பல் துறை இணை அமைச்சர் மன்சுக்மண்டவியா மற்றும் மாலத்தீவு போக்குவரத்து, பயணிகள் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆயிஷத் நஹீலா ஆகியோர் கடந்த 21-ம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர். தூத்துக்குடியில் இருந்து இந்த சரக்கு கப்பல் புறப்பட்டு, கொச்சி துறைமுகம் வழியாக மாலத்தீவில் உள்ள குல்ஹதுபுஷி துறைமுகம் சென்று, பின்னர் அங்கிருந்து மாலே துறைமுகம் வரை செல்லும்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி மாலத்தீவு சென்றிருந்த போது உறுதியளித்தபடியும், கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் காணொலி காட்சி மூலம் மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை அடிப்படையிலும் இருநாட்டு உறவை மேம்படுத்தும் வகையில் இந்த சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
இதன்படி தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இருந்து 16 சரக்கு பெட்டகங்களையும், 2,000 டன் பொது சரக்குகளையும் ஏற்றிக் கொண்டு கடந்த 21-ம் தேதி முதலாவது சரக்கு கப்பல் புறப்பட்டுச் சென்றது .
தோணித் தொழிலுக்கு ஆபத்து
இந்நிலையில் பாரம்பரிய தோணித் தொழிலுக்கு ஆபத்தாக சரக்கு கப்பல் போக்குவரத்து அமையக்கூடும் என தூத்துக்குடி தோணி உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சரக்குப் பெட்டக கப்பல்களின் வருகையால் ஏற்கெனவே தூத்துக்குடி- கொழும்பு இடையே தோணிப் போக்குவரத்து அடியோடு நின்று விட்டது. தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு மட்டுமே தற்போது தோணி போக்குவரத்து நடைபெறுகிறது. இந்நிலையில் மாலத்தீவுக்கு நேரடிசரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால் பாரம்பரிய தோணித் தொழில்அடியோடு அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தோணி உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தூத்துக்குடி கடலோர தோணி உரிமையாளர் சங்க செயலாளர் எஸ்.லெசிங்டன் பெர்னாண்டோ கூறியதாவது: கடந்த 1990-ம் ஆண்டு வரை தூத்துக்குடியில் தோணித் தொழில் சிறந்து விளங்கியது. தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு மட்டும் 40 தோணிகள் காய்கறிகள், பழங்கள், கருவாடு, அத்தியாவசியப் பொருட்கள்உள்ளிட்டவற்றை ஏற்றிச் சென்று கொண்டிருந்தன.
அதன் பிறகு சரக்குப் பெட்டக கப்பல்களின் வருகையால் தோணித் தொழில் நலிவடையத் தொடங்கியது. கடந்த 2010-ம் ஆண்டு முதல் கொழும்புக்கு தோணிப் போக்குவரத்து அடியோடு நின்றுவிட்டது.
6,000 தொழிலாளர்கள்
தற்போது தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து மாலத்தீவுக்கு மட்டும் 15 தோணிகள் சென்று வருகின்றன. 300 முதல் 400 டன் கொள்ளளவு கொண்ட இந்த தோணிகள் மூலம் காய்கறிகள், பழங்கள், அத்தியாவசியப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், சாண உரம் ஆகியவை மாலத்தீவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அதுபோல அங்கிருந்து பழைய இரும்புப் பொருட்கள் இங்கே வருகின்றன. இந்தத் தொழிலை நம்பி 5,000 முதல் 6,000 தொழிலாளர்கள் உள்ளனர்.
தற்போது தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டிருப்பதன் மூலம் தோணிப் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடல் வாணிபத்தின் பாரம்பரிய அடையாளமான தோணித் தொழிலை காப்பாற்ற சரக்குகளை ஏற்றிச் செல்ல தோணி கட்டணத்தை விட கப்பல் கட்டணத்தை குறைவாக நிர்ணயிக்கக் கூடாது. தோணி போக்குவரத்துக்கு என குறிப்பிட்ட சரக்குகளை ஒதுக்கித் தர வேண்டும்.
மேலும், தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சரக்கு கப்பலை இயக்குவதற்கு பதில் மங்களூரு, கொச்சியில் இருந்து இயக்கலாம். இதன் மூலம் பாரம்பரிய தோணித் தொழில் பாதுகாக்கப்படும். இந்த கோரிக்கையை மத்திய அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago