அக்.1-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: மாணவர்களின் உயிர்ப் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்துவிடாமல் பாதுகாப்பை உறுதி செய்க; ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

பள்ளிக்கு வரும் மாணவர்களின் உயிர்ப் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்துவிடாமல் மாணவர்கள் பாதுகாப்பை அதிமுக அரசு உறுதி செய்திட வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (செப். 26) வெளியிட்ட அறிக்கை:

"10 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் பள்ளிகள், அக்டோபர் 1-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்ட பிறகு, '50 வயதுக்கு மேல் உள்ள ஆசிரியர்கள் பங்கேற்கலாமா என்பதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் முடிவு செய்வார்'; 'பாடத் திட்டங்கள் குறைப்பது குறித்து முதல்வர் முடிவு செய்வார்' என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்துள்ள பேட்டிகள் மாணவர்களையும், பெற்றோர்களையும் மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்தி, மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

கரோனா பேரிடரால் பள்ளிகள் நீண்ட காலமாக மூடப்பட்டுள்ளன. தங்கள் குழந்தைகள் நேரடியாக வகுப்பறைக் கல்வி கற்க முடியாமல் இருக்கிறதே என்று பெற்றோர் கவலைப்படுகிறார்கள்.

இதுபோன்ற நேரத்தில், அக்டோபர் 1-ம் தேதி பள்ளிகளைத் திறக்கிறோம் என்று அறிவித்து விட்டு, இப்படிக் குழப்பமான பேட்டிகளை அமைச்சர் கொடுத்து வருவது சரியல்ல. மாணவர்களின் பாதுகாப்பை இந்த அரசு ஏதோ விளையாட்டாக நினைத்துச் செயல்படுகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு 'வழிகாட்டுதல் மட்டும் வழங்கப்படும்' என்பதும், 'பெற்றோர் சம்மதக் கடிதம் எழுத்துபூர்வமாகப் பெற்று வந்தால்தான் மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்' என்றும், அரசு ஆணையில் வெளியிடப்பட்டுள்ள நிபந்தனைகள், மாணவர்களின் பாதுகாப்பைப் பெற்றோர் தலையில் போட்டு, நாம் தப்பித்துக் கொள்வோம் என்ற அதிமுக அரசின் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

பள்ளிகள் திறக்க வெளியிடப்பட்டுள்ள 24-ம் தேதியிட்ட அரசாணை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கே தெரியாதோ என்ற சந்தேகம் வருகிறது. ஆசிரியர்களில் யாரெல்லாம் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும் என்பதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் முடிவு செய்வார் என்பதும், பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்து முதல்வர் முடிவு செய்வார் என்பதும், பள்ளிகளைத் திறக்கும் இந்த அரசாணை, எவ்வித ஆலோசனையும் இன்றி, பல்வேறு துறைகளுக்கு இடையில் முன்கூட்டியே கலந்தாலோசனையும் இன்றி வெளியிடப்பட்டுள்ளதும் அம்பலத்திற்கு வந்துள்ளது.

'பள்ளிகள் திறப்பதே மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு இல்லை; சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்கே' என்றும்; 'ஆன்லைன் மூலமும் சந்தேகங்களைக் கேட்டுக் கொள்ளலாம்' என்றும் கூறிவிட்டு, ஏன் இப்படி அவசர கதியில் மாணவர்களைப் பள்ளிக்கு வரச் சொல்கிறது அரசு என்பதும் புரியாத புதிராக இருக்கிறது.

மாணவ, மாணவியரின் எதிர்காலத்துடன் கரோனா பேரிடர் ஒருபுறம் விளையாடுகிறது என்றால், அதிமுக அரசு இன்னொரு புறம் விபரீத விளையாட்டை நடத்திக் கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஆகவே, 10 முதல் 12-ம் தேதி வரை படிக்கும் மாணவர்களுக்கான பள்ளிகளை அக்டோபர் 1-ம் தேதி முதல் திறக்க முடிவு செய்துள்ள அதிமுக அரசு, மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் ஆகியோரின் பாதுகாப்பை மிகக் கவனமாக, முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், உறுதி செய்ய வேண்டும்.

கரோனா எண்ணிக்கை சென்னையில் மீண்டும் அதிகமாகிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டுப் பெற்றோர் பதற்றத்தில் இருக்க முடியாது.

’எழுத்துபூர்வமாகப் பெற்றோரிடம் அனுமதி பெற்றுத்தானே வந்தீர்கள்' என்று மாணவர்களின் உயிர்ப் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்துவிடாமல், அதிமுக அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழித்து விடாமல், மாணவர்கள் ஒவ்வொருவரும் பள்ளிக்குச் சென்றுவிட்டு, பத்திரமாக வீடு திரும்புவதை உறுதி செய்திடும் வகையில் முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்