பெரியாரை எதிர்க்காமல் புகழ்வது என்கிற யுக்தியை பாஜக கையிலெடுத்துள்ளது; இளைஞர்களை ஏமாற்ற முடியாது: கி.வீரமணி விமர்சனம்

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் நடக்க உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள பெரியாரை எதிர்க்காமல் புகழ்வது எனும் யுக்தியை பாஜக பயன்படுத்துகிறது. தமிழ்நாட்டு மக்களும், இளைஞர்களும் ஏமாளிகள் அல்லர், ஆரியத்தின் சூழ்ச்சியை முறியடிப்பார்கள், பாடம் புகட்டுவார்கள் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கி.வீரமணி இன்று விடுத்துள்ள அறிக்கை:

''நேற்றைய (25.9.2020) ‘ஆங்கில இதழ் ஒன்றில் இந்தியாவில்' தமிழ்நாட்டில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கியை வளர்த்துக் கொள்ள வேண்டுமானால், இதுநாள் வரை கடைப்பிடித்த தந்தை பெரியாரைக் கொச்சைப்படுத்தி, அவரது சிலைகளை இழிவுபடுத்தியும், அவரை ஈ.வெ.ரா. என்றும் பேசிவருவதன்மூலமும் தமிழ்நாட்டு இளைஞர்களின் பேரெதிர்ப்புக்கு ஆளாகி, உள்ளதையும் இழக்கும் நிலைதான் ஏற்படும் என்ற அச்சம் பாஜகவினரை இப்போது உலுக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் பொம்மலாட்டத்தை பாஜக நடத்திக் கொண்டிருக்கிறது

தமிழ்நாட்டை வளைக்க, விபீடணக் கட்சிகளைப் பிடித்து, ராமாயணத்தில், விபீடணன், சுக்ரீவன், அனுமார் ஆகிய பாத்திரங்களின் பங்களிப்பு எப்படியோ, அப்படி செய்து, அதிலும் ஒடுக்கப்பட்ட எஸ்.சி., எஸ்.டி., பி.சி., போன்ற வகுப்பிலிருந்து சில நபர்களைப் பிடித்து அவர்களுக்கு ‘‘வேஷங் கட்டி'' முன்னிறுத்தி, அரசியல் பொம்மலாட்டத்தை பாஜக நடத்திக்கொண்டிருக்கிறது. அதன் ஒருவகை உத்தி (Strategy) யாக சிலர் பெரியாரைப் புகழ ஆரம்பித்து புது வசனங்களைப் பேசுகின்றனர்.

இந்த ஆங்கில நாளேடு பேட்டியில் தொலைக்காட்சி விவாதங்களில் ஈடுபடும் இரண்டு பேரில் ஒருவர், ‘இதெல்லாம் பயன் தராது (அதாவது பெரியாரைப் புகழ்வது ‘‘திராவிடத்தை'' கற்பிப்பது) பாஜக, ஆர்.எஸ்.எஸ். கொள்கைக்கு விரோதமானது என்று வெளிப்படையாக் கூறுகிறார். இன்னொருவர் பூசி மெழுகி ஏதோ வியாக்கியானம் செய்கிறார்.

காக்கை - நரி - வடை பழைய கதை இங்கு எடுபடுமா?

எப்படி என்றாலும், லட்சியங்களால் இரு இயக்கக் கொள்கைகளால் - முற்றிலும் எதிரானவை என்பது மறுக்க முடியாத உண்மை. அரசியல் தூண்டில்களால் சமூகப் புரட்சி இயக்கத்தையோ, அதனைப் பின்பற்றி தெளிவடையும் தமிழ்நாட்டு இளைஞர்களையோ ஒருபோதும் இந்த மாற்று ‘‘உத்திகளால் - வித்தைகளால்'' (Ploy) ஏமாற்றிவிட முடியாது! பழைய காக்கை - நரி - வடை கதை இங்கு எடுபடுமா என்றால், உறுதியாக எடுபடாது!

இது பெரியார் மண். பவுத்தத்தை தொடக்கத்தில் புகழ்ந்து, இணைந்து ஊடுருவி, இறுதியில் கபளீகரம் செய்த பழைய ஆரிய வித்தை இங்கு ஒருபோதும் இப்போது எடுபடாது.

பொய்க்கால் குதிரைகளைக் கண்டு ஒருபோதும் தமிழ்நாட்டு இளைஞர்கள் ஏமாறமாட்டார்கள்

'Trojan Horses' என்ற ட்ரோஜன் குதிரைகளை - மாயக் குதிரைகளை, பொய்க்கால் குதிரைகளைக் கண்டு ஒருபோதும் தமிழ்நாட்டு இளைஞர்கள் ஏமாறமாட்டார்கள். யாரோ சிலர் அனுமார் அவதாரம் எடுத்தாலும், அது பொருட்படுத்தக் கூடிய அளவில் அவர்களுக்கு - அக்கட்சிக்குப் பயன்தராது!

வடக்கேயும் பெரியார் - அம்பேத்கர்தான்

காந்தியை அணைத்துக் கொண்டு பேசுவதுபோல், அம்பேத்கரையும் புகழ்ந்து பேசிடும், வித்தையால், அம்மக்களை வளைத்துவிடலாம், அம்பேத்கரையும் செரிமானம் செய்துவிடலாம் என்பதே இப்போது செலவாணி ஆகவில்லை - வடக்கேயும் பெரியார் - அம்பேத்கர்தான் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் போருக்கான ஆயுதங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காட்சியை மறைக்க முடியாது.

தமிழ்நாடுதான் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு உரிமை முழக்கங்களுக்கு வழிகாட்டியாகும்.

தமிழ்நாட்டு இளைஞர்களை ஏமாற்றிட, பெரியார் என்ற முகபடாம் போட்டுக் காட்டலாம் என்று நினைத்தால், அவர்கள் ஏமாந்து போவது நிச்சயம். காரணம், பாலுக்கும், மண்ணெண்ணெய்க்கும் உள்ள வேறுபாட்டினை நன்கு உணர்ந்தவர்கள் தமிழ்நாட்டு இளைஞர்கள் - மாணவர்கள் - வாலிபர்கள் - முதியவர்களும் கூடத்தான். நாங்கள் மாறிவிட்டோம் என்று கூறி, இளைஞர்களை இழுத்துவிடலாம் என்பது அசல் தப்புக் கணக்கு என்பதை எம் இளைஞர்கள் புரிய வைப்பார்கள்.

தத்துவப் பேராசானை வழிகாட்டியாகக் கொண்டு...

காரணம், பெரியார் எம் மக்களுக்கு வெறும் சிலை அல்ல - உரிமைப் போருக்கான ஆயுதம் - சக்தி வாய்ந்த அறப்போர் ஆயுதம் - என்றும் முனை மழுங்காத ஆயுதம் என்பது அவர்களுக்குப் புரிந்ததால்தான், தத்துவப் பேராசானை வழிகாட்டியாகக் கொண்டு தங்களது சமூக நீதிப் போரை நடத்துகின்றனர்.

பாஜக மாறிவிட்டது என்று கூறினால், இதை செய்து தமிழ் மண்ணை வெல்லட்டும்

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே ரேஷன் கார்டு, ஒரே கல்வி - ஏனென்றால், ‘ஒரே, ஒரே' என்று கூறும் இவர்கள் ஒரே சாதிதான் இனி - அதாவது சாதியை ஒழிக்க இதோ அவசரச் சட்டம் என்று கூறட்டும். சமத்துவ சமுதாயத்தை சமைப்போம் என்று பிரகடனப்படுத்தட்டும்

மனுதர்மத்தை ஏற்கமாட்டோம் - உங்களைப் போலவே எதிர்ப்போம்- எரிப்போம்! கீதையை ஒப்புக்கொள்ளமாட்டோம் - எல்லோரும் ஒன்று என்ற சமத்துவ சமுதாயத்தை சமைப்போம் என்று பிரகடனப்படுத்தட்டும் - செய்ய முன்வருவார்களா? ஊசியின் காதில் ஒட்டகமே நுழைந்தால்கூட, இதை அவர்கள் செய்வார்களா?

இல்லையென்றால், என்ன அர்த்தம்? ‘ஓநாய் சைவமாகிவிட்டது' என்ற பிரச்சாரத்தை நம்பி, தமிழ்நாடும், இளைஞர்களும் ஒருபோதும் ஏமாறமாட்டார்கள். காரணம், இது பெரியாரின் சிந்திக்க வைக்கும் செயற்களம் ஆகும்.

ஒருபோதும் அவர்கள் எதிர்பார்க்கும் வெற்றியைத் தராது!

எனவே, ‘வித்தைகள்' - புதிய பாத்திரங்கள் - புதிய வசனங்கள் - உத்திகள் - தமிழ் மண்ணை ஏமாற்றி பாஜக காலூன்றிட முயலுதல் ஒருபோதும் அவர்கள் எதிர்பார்க்கும் வெற்றியைத் தராது. ஏற்கெனவே ஆளுங்கட்சியை உடைத்து, பிறகு இணைத்துப் பார்த்தும் படுதோல்விதான் மிச்சம் என்பது நாடாளுமன்றத் தேர்தலில் பாடமாக அமைந்ததை மறந்துவிட வேண்டாம். நினைவிருக்கட்டும்”.

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்