பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத கோரிக்கைகள்: துயரத்தில் தவிக்கும் டான்டீ தொழிலாளர்கள்

By ஆர்.டி.சிவசங்கர்

தாயகம் திரும்பிய தொழிலா ளர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட டான்டீ நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகள் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமலேயே உள்ளன.

இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோர் நலனுக்காக 1968-ல் நீலகிரி மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகம் (டான்டீ), குன்னூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. குன்னூர், கூடலூர், சேரம்பாடி, சேரங்கோடு, நெல்லியாளம், நடுவட்டம், கோத்தகிரி, வால்பாறை பகுதிகளில், தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. டான்டீ மூலம் 4431.92 ஹெக்டேர் பரப்பில் தேயிலை சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தில் 5,600 நிரந்தரத் தொழிலாளர்களும், அவர்களின் குடும்பத்தார் 400 பேர் தற்காலிகமாகவும் பணியாற்றி வருகின்றனர். பணியாளர்களின் குழந்தைகளுக்காக பள்ளி செயல்படுவதுடன், இலவச மருத்துவ உதவி திட்டம், தொழிலாளர் நலத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

குன்னூர் உட்கோட்டத்துக்கு உட்பட்ட கரன்சி பகுதியில் 7.5 ஹெக்டேரில் இயற்கை முறையில் ஆர்கானிக் தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. குன்னூர் டைகர்ஹில் மற்றும் கோத்தகிரி குயில்சோலையில் உற்பத்தி செய்யப்படும் ஆர்தோடக்ஸ் தேயிலை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. டான்டீ நிறுவனத்தின் கீழ் உள்ள 7 தொழிற்சாலைகளுக்கு ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் பெறும்முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

டான்டீ தொழிற்சாலைகளில் மாதம் 7.5 லட்சம் கிலோ தேயிலைத் தூள் உற்பத்தி செய்யப்பட்டு, குன்னூர், கோவை மற்றும் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஏல மையங்கள்மூலமாக விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக டான்டீ நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதேநிலை தொடர்ந்தால், நிறுவனமே மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியபோது, நிதி கொடுத்து அரசு உதவிய நிலையில், நிறுவனம் தொடங்கி 40 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளதால், நிறுவனம் தன்னிச்சையாக செயல்படவும், லாபத்தை ஈட்டி, நிறுவனத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவும் அரசுஅறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து நீலகிரி எஸ்டேட் தொழிலாளர்கள் சங்க (சிஐடியு) கவுரவத் தலைவர் ஆர்.பத்ரி கூறும்போது, "தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்புகளில் கழிவறை மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால், அவற்றைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், தொழிலாளர்களின் வீடுகளும் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. இவற்றை உடனடியாக சீரமைத்துத்தர வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளாக தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மருத்துவ விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்புக்கான ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். 480 நாட்கள் பணிமுடித்த ஒப்பந்தத் ஊழியர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும். சேரம்பாடி டான்டீ மருத்துவமனையை முழுமையாக சீரமைக்க வேண்டும்.

வனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள 270 ஹெக்டேர் பகுதியில் வளர்ந்துள்ள தேயிலையைப் பறித்து, விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவேண்டும்.ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக பணி வழங்கப்படாததால், அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, அவர்களுக்கு தொடர்ச்சியாக பணி வழங்கி, அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர்களின் பல ஆண்டு கோரிக்கைகளை இனியாவது நிறைவேற்ற வேண்டும்" என்றார்.

வீடுகள், கழிப்பறைகள் சீரமைக்கப்படும்...

டான்டீ நிர்வாக இயக்குநர் சீனிவாச ஆர்.ரெட்டி கூறும்போது, "மேம்படுத்திய தேயிலைக்கு நல்ல விலை கிடைக்கிறது. கடந்த 3 மாதங்களில் ரூ.7 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஐரோப்பிய சந்தையில் தேயிலைத் தூளை விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஏற்றுமதிக்கான சான்றிதழ் பெறும் பணி நடந்து வருகிறது. குன்னூர், கூடலூர் தொழிற்சாலைகள் ரூ.16 கோடி மதிப்பில் நவீனமயமாக்கப்படுகின்றன. டான்டீ நிறுவனத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தொழிலாளர் குடியிருப்புகள் மற்றும் கழிப்பறைகளை முழுமையாக சீரமைக்க ‘சிறப்பு பகுதிகள் மேம்பாட்டு திட்டத்தின்’ கீழ் நிதி கோரப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

விரைவில் அந்த நிதியைப் பெற்று, அனைத்து வீடுகள், கழிப்பறைகள் முழுமையாக சீரமைக்கப்படும். சேரம்பாடி மருத்துவமனையை சுகாதாரத் துறையிடம் ஒப்படைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் முடிவடைந்துவிட்டன. விரைவில் மருத்துவமனையின் கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள தொகைகளை படிப்படியாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 480 நாட்கள் பணிமுடித்த அனைத்து தொழிலாளர்களும் காலதாமதமின்றி பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்