கரோனா ஆபத்தை மறந்து பொது இடங்களில் நடமாட்டம்: பொதுமக்களிடம் குறையும் முகக்கவசம் அணியும் பழக்கம்- விற்பனையும் சரிவதாக வியாபாரிகள் தகவல்

By ரெ.ஜாய்சன்

கரோனா ஆபத்தை மறந்து பொதுமக்கள் முக்கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடுவது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக முகக்கவசம் விற்பனையும் குறைந்து வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

உலகை அச்சுறுத்திய கரோனா வைரஸ் அபாயம் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் தலைக்காட்டத் தொடங்கியது. இதனால் மார்ச் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 2 மாதங்களுக்கு மேல் மக்களின் வாழ்க்கையே முழுமையாக முடங்கிப்போனது. பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடந்தனர்.

அதன் பிறகு ஊரங்கு அமலில் இருந்தாலும், பல்வேறு தளர்வுகளை மத்திய மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன. இம்மாதம் 1-ம் தேதி முதல் பொதுபோக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

செப்டம்பர் 7-ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்தும் தொடங்கப்பட்டது. தற்போது பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளை தவிர மற்ற அனைத்தும் திறக்கப்பட்டு விட்டன. இதனால் மக்கள் சகஜ நிலைக்கு திரும்பி, தங்களது அன்றாட பணிகளை செய்ய தொடங்கிவிட்டனர்.

ஊரடங்கில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டாலும் கரோனா தடுப்பு வழிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு நடவடிக்கைக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி பொது இடங்களில் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும். பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் வீடுகளை விட்டு வெளியே வந்த மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து தான் வெளியே வந்தனர். ஆனால், படிப்படியாக முகக்கவசம் அணியும் பழக்கத்தை மக்கள் கைவிட்டு வருகின்றனர்.

இதனால் சாலைகளில் செல்வோரில் பலர் முகக்கவசம் அணியாமல் சர்வசாதாரணமாக செல்கின்றனர். கடைகள், வணிக நிறுவனங்களிலும் முகக்கவசம் அணியாமல் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் இருப்பதை காண முடிகிறது.

அதுபோல பேருந்துகள், பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள் போன்ற பொது இடங்களிலும் மக்கள் பலர் முகக்கவசம் அணியாமல் இருக்கின்றனர். மக்கள் கரோனா அச்சத்தை மறந்து சகஜ நிலைக்கு திரும்பிவிட்டதையே இது காட்டுகிறது.

ஆனால் கரோனா அச்சம் இன்னும் நீங்கவில்லை. கரோனா பாதிப்பு இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. மக்கள் இதேபோல் முகக்கவசம், சமூக இடைவெளியே பற்றி கவலைப்படாமல் சுற்றினால் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறையினர் எச்சரிக்கின்றனர். ரூ200 அபராதம் விதிக்கப்படும் என அரசு உத்தரவிட்டும் அதைப் பற்றி மக்கள் பெரிதாக கவலைப்பட்டதாக தெரியவில்லை.

மக்களிடம் முகக்கவசம் அணியும் பழக்கம் குறைவதால், முகக்கவசம் விற்பனையும் கடந்த சில நாட்களாக குறைந்து வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இது குறித்து தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையோரத்தில் முகக்கவசம் விற்பனை செய்து வரும் வியாபாரி எல்.எஸ். முருகேஷ் குமார் என்பவர் கூறியதாவது:

கரோனா ஊரடங்கு தொடங்கிய காலத்தில் முகக்கவசம் கிடைப்பதே அரிதாக இருந்தது. அதன் பிறகு படிப்படியாக அதிகமாக முக்கவசங்கள் விற்பனைக்கு வந்தன. முகக்கவசங்களை விற்பனை செய்ய ஏராளமான சாலையோர கடைகள் தோன்றின. கரோனாவால் தொழில், வாழ்வாதாரத்தை இழந்த பலருக்கு முகக்கவசம் விற்பனை வாழ்வளித்து வந்தது.

நான் சாலையோரம் கைப்பைகளைப் போட்டு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தேன். கரோனா ஊரடங்கால் அந்த தொழில் பாதிக்கப்பட்டதால் கடந்த ஏப்ரல் முதல் முகக்கவசம் விற்பனை செய்யத் தொடங்கினேன். பல வண்ணங்களில், பல வகையான முகக்கவசங்களை வாங்கி விற்பனை செய்கிறேன். இவைகள் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

ஆரம்ப காலத்தில் முகக்கவசம் விற்பனை நன்றாக இருந்தது. முகக்கவசம் வாங்குவோர் 5 முதல் 10 என மொத்தமாக வாங்குவார்கள். தினமும் 200 முதல் 300 முக்கவசங்கள் விற்பனையாகும்.

ஆனால் கடந்த சில நாட்களாக முகக்கவசம் விற்பனை படுமந்தமாக உள்ளது. இதற்கு காரணம் மக்களிடம் முகக்கவசம் அணியும் பழக்கம் குறைவதே ஆகும். தற்போது தினமும் 50 முதல் 100 முகக்கவசங்கள் தான் விற்பனையாகின்றன. வரும் நாட்களில் முகக்கவசம் விற்பனை கைக்குட்டை விற்பனை போல குறைந்துவிடும் என்றார் அவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்