குடிமராமத்து திட்டத்தின்கீழ் பணிகள் நடைபெறும் பரந்தூர், புதிய தாங்கல் ஏரிகளில் காஞ்சிபுரம் ஆட்சியர் ஆய்வு

காஞ்சிபுரம் வட்டத்தில் நடைபெற்றுவரும் குடிமராமத்துப் பணிகளைமாவட்ட ஆட்சியர் பொன்னையா நேற்று ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் வட்டம் பொதுப் பணித் துறை மற்றும் நீர்வள ஆதாரத் துறையின் சார்பில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பரந்தூர் ஏரி மற்றும் பரந்தூர் புதிய தாங்கல் ஏரிகளில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பரந்தூர் ஏரிக்கு ரூ.92 லட்சமும், பரந்தூர் புதிய தாங்கல் ஏரிக்கு ரூ.25 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து அவர்செய்தியாளர்களிடம் கூறியது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் ஏரிகளின் நீர்வரத்து கால்வாய்கள், மதகுகள், கலங்கல் ஆகியவற்றை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பருவமழையால் தண்ணீர் எவ்வளவு நிரம்பி உள்ளது என்பதையும், ஏரிக்கரையின் உறுதித் தன்மையையும் ஆராய்ந்து அதற்கேற்ப கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பரந்தூர் ஏரியில் நடைபெற்று வரும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நீர்வள ஆதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவிப் பொறியாளர் பாஸ்கரன், இளநிலை பொறியாளர் மார்கண்டேயன், காஞ்சிபுரம் வட்டாட்சியர் பவானி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE