உரிமைக்குழு இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2017-ல் சட்டப்பேரவைக்குள் குட்கா பொருட்களைக் கொண்டுவந்த விவகாரத்தில் உரிமைக்குழு இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் 18 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் இன்று (செப். 23) நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.
அப்போது, திமுக தலைவர் ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், "குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்கள் இடமாற்றம், பதுக்கல், விற்பனை தொடர்பாகத்தான் தடை இருந்தது. வெளியில் கிடைப்பதை அரசு கவனத்திற்கு கொண்டு வரவே பேரவைக்கு எடுத்து வந்து காண்பித்தனர். 2017-ல் அனுப்பிய நோட்டீஸில் அடிப்படைத் தவறு இருப்பதாகக் கூறி அதை ரத்து செய்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. குட்கா வைத்திருந்தால் அது குற்றமா? இல்லையா என்பது நீதிமன்றத்தில் முடிவெடுக்க வேண்டிய விவகாரம் எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே விவகாரத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்" என வாதிட்டார்.
திமுக எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, "போதைப்பொருள் வணிகத்திற்குத்தான் தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர பேச்சு சுதந்திரத்திற்குத் தடை விதிக்கவில்லை. அதனடிப்படையில்தான் குட்கா கிடைப்பது குறித்த பிரச்சினை பேரவையில் எழுப்பப்பட்டது. உள்நோக்கத்துடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.
» குமரியில் கனமழை: 300 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம்- கடல் சீற்றத்தால் மீன்பிடி தொழில் முடக்கம்
அதேபோன்று, மேலும் சில திமுக எம்எல்ஏக்கள் தரப்பில் வழக்கறிஞர் அமீத் ஆனந்த் திவாரி, "ஏற்கெனவே ஒரு பக்கச் சார்புடன் நடவடிக்கை எடுத்த அதே குழுதான் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பேரவை விதி 228-ஐ மீறும் வகையில் மீண்டும் குழு அமைக்கப்பட்டு, குட்கா விவகாரத்தில் அனுப்பப்பட்டுள்ளது. திமுக மீது முழுக்க அதிருப்தியில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் குழுவில் இருக்கிறார்" என வாதிட்டார்.
பேரவைச் செயலாளர் தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் வாதிடுகையில், "ஸ்டாலினுக்கு எதிராக மட்டுமே உரிமைக்குழு தலைவரான பொள்ளாச்சி ஜெயராமன் சிவில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதனால் 18 பேருக்கும் எதிரான மனப்பான்மையுடன் உரிமைக்குழு இருப்பதாகக் கூறுவது தவறு. குழுவின் முன் இவர்கள் ஆஜராகவில்லை. அங்கு வழக்கறிஞர்கள் ஆஜராகி செப்டம்பர் 24 வரை அவகாசம் பெற்றுள்ளனர்.
பேரவை விதி 226-ன் அடிப்படையில் உரிமை மீறல் என பேரவைத் தலைவர் தானாக முன்வந்து உரிமைக் குழுவுக்குப் பரிந்துரைக்கலாம். பேரவையில் நடந்தவற்றின் வீடியோ பதிவுகளை முழுமையாகப் பார்த்த பிறகுதான் ஸ்டாலின் உள்ளிட்ட 21 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
குட்கா பாக்கெட்டைக் காண்பித்ததை பேரவைத் தலைவர் அனுமதிக்க முடியாது எனப் பலமுறை கூறியுள்ளார். அதனால் இது உரிமை மீறல்தான். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் கண்ணை உருட்டி, நாக்கை துறுத்தியதையும் உரிமை மீறலாகக் கருதி 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டது.
பேரவைத் தலைவருக்கு பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். பேரவைத் தலைவர் தான் முடிவெடுப்பார். இன்றோ நாளையோ அடுத்த வாரமோ பேரவை கூடப்போவதில்லை. எனவே, தடை விதிக்க வேண்டாம். விரைவில் பதில் மனுத்தாக்கல் செய்கிறோம். விளக்கம் அளிக்க விருப்பப்பட்டால் திமுக எம்எல்ஏக்கள் அவகாசம் கேட்கட்டும். எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்குகிறோம்" என்றார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, "ஆகஸ்ட் 25-ல் தீர்ப்பளித்தவுடன், செப்டம்பர் 7-ல் உரிமைக்குழு விரைந்து கூடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குட்காவைக் காண்பிக்கக் கூடாது என அரசாணையில் இல்லை. மனுதாரர்கள் காண்பிக்கத்தான் எடுத்து வந்தார்கள் என்பது தலைமை நீதிபதி உத்தரவிலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நாளை (செப். 24) காலை 10.30 மணிக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
28 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago