‘ரேபீஸ்’ இல்லா மாவட்டமாக நீலகிரி அறிவிக்கப்படும்: குன்னூர் பாஸ்டியர் ஆய்வக இயக்குநர் தகவல்

By ஆர்.டி.சிவசங்கர்

நீலகிரியில் கடந்த 2004 முதல் ‘ரேபீஸ்’நோய் பாதிப்பு கண்டறியப்படாததால், ‘ரேபீஸ்’இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்படவுள்ளதாக, குன்னூர் பாஸ்டியர் ஆய்வக இயக்குநர் சேகர் தெரிவித்துள்ளார்.

உதகை அருகே அருவங்காடு பகுதியில் கடந்த 2010-ம் ஆண்டு சர்வதேச கால்நடை சேவை அமைப்பு செயல்பாட்டுக்கு வந்தது. இந்த அமைப்பில் நாய்களுக்கான மருத்துவமனை, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மையம் இயங்குகிறது. கால்நடை மருத்துவர்களுக்கு, ஆண்டுதோறும் 2 வாரங்கள் அறுவை சிகிச்சை பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும், உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக தெரு நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

இந்த அமைப்பினர், நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 16 ஆயிரம் நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளதுடன், 30 ஆயிரம் நாய்களுக்கு ‘ரேபீஸ்’நோய் தடுப்பூசியும் போட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சர்வதேச கால்நடை சேவை அமைப்பின் இயக்குநர் இலோனா ஆட்டர் கூறியதாவது:

வெறி நாய்க்கடி மூலமாக ‘ரேபீஸ்’நோய் பரவுகிறது. உலக அளவில் ஆசியாவில், குறிப்பாக இந்தியாவில் வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்டு அதிகம் பேர் உயிரிழக்கின்றனர். 15 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் பாதிக்கின்றனர்.

உலகம் முழுவதும் ஆண்டுக்கு 60,000 பேர் ‘ரேபீஸ்’நோயால் உயிரிழக்கின்றனர். இந்நோய் குறித்து, இந்தியாவில் அறிவியல் பூர்வமான கணக்கெடுப்பு இல்லாததால், சரியான புள்ளி விவரங்கள் இல்லை. இந்தியாவில் ஆண்டுக்கு 200 பேர் இறப்பதாகக் கூறப்படுகிறது.

‘ரேபீஸ்’நோய் கிருமி ரத்தத்தில் கலப்பதால் மட்டுமே நோய் ஏற்படுகிறது. இந்நோய் பாதிக்கப்பட்ட நாய், 7 நாட்களில் இறந்துவிடும்.

இந்த குறிப்பிட்ட காலத்தில், அந்த நாய் வேறு நாயையோ, மனிதர்களையோ கடித்தால் அவர்களுக்கும் பரவும். நோய் பாதிக்கப்பட்ட நாயை குணப்படுத்த முடியாது. அதற்கு முன் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடுவதுதான் சிறந்தது.

எங்கள் அமைப்பு சார்பில் அனைத்து நாய்களுக்கும் ‘ரேபீஸ்’நோய் தடுப்பூசி போடப்படுகிறது. அருவங்காட்டில் உள்ள மருத்துவமனையில், நாய்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது கோவாவில் நாய்களுக்கு ‘ரேபீஸ்’நோய் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக, பிரத்யேக மொபைல் செயலி பயன்படுத்தப்படுகிறது. இதனால், துல்லியமான முடிவுகள் தெரியும். இவ்வாறு, அவர் கூறினார்.

குன்னூர் பாஸ்டியர் ஆய்வக இயக்குநர் சேகர் கூறும்போது, “பாஸ்டியர் ஆய்வகத்தில் திசு வளர்ப்பு முறை மூலமாக ‘ரேபீஸ்’தடுப்பு மருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தின் உற்பத்தித் திறன், 3 ஆண்டுகளில் 50 சதவீதம் உயர்த்தப்படும்.

இந்நிலையில், நிறுவனத்தின் செயல்பாடுகளாலும், மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாகவும் 2004-ம் ஆண்டு முதல் ‘ரேபீஸ்’நோயால் யாரும் பாதிக்கப்படவில்லை. நீலகிரியில் ‘ரேபீஸ்’நோய் கண்டறியப்படாததால், விரைவில் ‘ரேபீஸ்’ இல்லா மாவட்டமாக அறிவிக்கப்படவுள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்