ஐரோப்பா, மத்திய ஆசியா உள்ளிட்ட இடங்களில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு வலசையாக வரும் பறவைகளை வரவேற்று, இளம் பறவை ஆர்வலர்கள் சுவரொட்டிகள் மூலம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பறவைகள் தட்பவெப்ப மாற்றம், உணவு, இனப்பெருக்கம் உள்ளிட்ட சில காரணங்களுக்காக, ஆண்டுதோறும் அவற்றின் வசிப்பிடத்தை விட்டு, ஆயிரக்கணக்கான கி.மீ. தொலைவில் உள்ள இடங்களுக்குச் செல்வதுடன், அங்கேயே சில மாதங்கள் வரை தங்கியிருந்து, பின்னர் மீண்டும் சொந்த வசிப்பிடத்துக்கே சென்று வருகின்றன.
பறவைகளின் இந்தப் பழக்கம் 'வலசை போதல்' என்று குறிப்பிடப்படுகிறது. இதுபோல, இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கும், பிற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கும் பறவைகள் வந்து செல்கின்றன.
இதுபோல, வெளிநாடுகளில் இருந்து, சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வலசை போதலாக வந்து செல்லும் பறவைகளை வரவேற்று இளம் பறவையியல் ஆர்வலர்கள் சேலம், ஏற்காடு மலைப்பாதை, தாரமங்கம், வாழப்பாடி உள்பட பல்வேறு இடங்களில் சுவரொட்டிகளை வைத்துள்ளனர்.
இதுகுறித்து சேலம் பறவையியல் கழக நிறுவனர் கணேஷ்வர் கூறுகையில், "சேலம் பறவையியல் கழகம் சார்பில், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு, பறவைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பறவைகள் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ள வசதியாக, ஏராளமான பள்ளிகளில் பறவைகள் சங்கம் அமைத்துள்ளோம்.
சேலம் மாவட்டப் பகுதிகளுக்கு ஆண்டுதோறும் அக்டோபரில், வெளிநாட்டினப் பறவைகள் வலசையாக வரும். இவை மார்ச் மாதம் வரை, இங்கேயே தங்கியிருந்து, பின்னர் மீண்டும் அவற்றின் சொந்த இருப்பிடத்துக்குத் திரும்பிவிடும். தற்போது வலசைபோதல் காலம் தொடங்கும் முன்பாக, மண்கொத்தி, சாம்பல் வாலாட்டி உள்ளிட்ட பறவைகள் வரத் தொடங்கி விட்டன.
இதில், சாம்பல் வாலாட்டி, மண்கொத்திப் பறவை ஆகியவை ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய கண்டத்தில் இருந்து வருகின்றன. அவை இப்போதே வரத் தொடங்கிவிட்டன. அக்டோபர் மாதத்தில் பச்சை கதிர் குருவி, சாம்பல் கரிச்சான், வெண்புருவ வாத்து உள்பட மேலும் பல பறவைகள் வரத் தொடங்கும்.
வலசைபோதல் முறையில் பறவைகள் சேலம் மாவட்டத்துக்கு வருவதைக் கொண்டாடும் விதமாகவும், மக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பறவைகளை வரவேற்றுச் சுவரொட்டிகளை மாவட்டத்தில் ஆங்காங்கே ஒட்டியுள்ளோம்.
எங்கள் இயக்கத்தின் கலைச்செல்வன், செந்தில்குமார், ராஜலிங்கம், ஏஞ்சலின் மனோ, ஸ்ரீ பிருந்தா, சஹாய பெர்ஷியா உள்ளிட்டோர் பல்வேறு இடங்களில் சுவரொட்டியை ஒட்டும்போதே பலர் இது குறித்து ஆர்வத்துடன் விசாரித்தனர்.
மேட்டூரை அடுத்த பண்ணவாடி, வெளிநாட்டுப் பறவைகள் அதிகமாக வந்து செல்லக்கூடிய முக்கிய இடமாக உள்ளது. வலசை வரும் பறவைகள், நீர்நிலைகள், ஈரப்பதம் அதிகம் உள்ள இடங்களுக்கு வருகின்றன. இவை, வயல்வெளிகள், நீர் நிலைகள் ஆகியவற்றில் உள்ள புழுக்கள், பூச்சிகளை இரையாகப் பிடித்து உண்ணுபவை. அதனால், விவசாயத்துக்குக் கெடுதல் செய்யும் பூச்சிகள் அழிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலின் சமச்சீர் பாதுகாக்கப்படுகிறது" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago