விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய மறுத்து, ‘பி.எம்.கிஸான்’ திட்டத்திலும் ஊழல் முறைகேட்டிற்கு வித்திட்டுள்ள பாஜக, அதிமுக அரசுகள் - இந்தச் சட்டங்களின் மூலம் வேளாண் துறையைச் சீர்குலைக்க முற்பட்டுள்ளது வெளிப்படையாகவே தெரிய வருகிறது என திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இதில் துரைமுருகன், பொன்முடி, கே.எஸ்.அழகிரி, வைகோ,கே. பாலகிருஷ்ணன்,முத்தரசன், திருமாவளவன், வி.குமரேசன், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வேளாண் சட்டத்தை எதிர்த்தும், நாடாளுமன்ற விதிகளை மீறி சட்டத்தை நிறைவேற்றியதைக் கண்டித்தும், சட்டத்தை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசுக்குத் துணைபோன தமிழக அரசையும் எதிர்த்து இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
“நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளைக் காலில் போட்டு மிதித்து, மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடத்தாமல் - குரல் வாக்கெடுப்பு என்ற பெயரில் ‘சர்வாதிகார’மாக மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் தொடர்பான சட்டங்கள், “உணவுப் பொருள்களான வேளாண் விளை பொருட்களை வரம்பின்றிப் பதுக்கி” வைக்கும் சமூக விரோதச் செயலுக்கு வழி செய்கிறது.
“விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் நலனைப் பாதுகாக்கும் அத்தியாவசிய சட்டத்தை”, சீர்குலைக்கும் புதிய திருத்தங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இவற்றின் மூலம், “கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து”; பதுக்குதல் தாராளமயமாக்கப்படுகிறது.
“விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின்” மூலம் “கார்ப்பரேட் - ஏழை விவசாயி” என்ற சமன்பாடற்ற, ஓர் “ஒப்பந்த வணிகம்” திணிக்கப்படுகிறது.
விவசாயிகளின் வாழ்வும், எதிர்காலமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. விவசாயிக்குக் கிடைக்க வேண்டிய குறைந்த பட்ச ஆதார விலைக்கும் கேடு ஏற்படுத்தப்படுகிறது. “விவசாயிகள், விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டத்தினை”த் திணித்து, “மாநிலத்திற்குள்ளான வணிகம் மற்றும் வர்த்தகமும்” பறிக்கப்படுகின்றன.
மத்திய அரசால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள; விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு எதிரானதும் - வேளாண்மை முன்னேற்றத்திற்குப் பின்னடைவைத் தரக்கூடியதும் - கூட்டாட்சித் தத்துவத்திற்குப் புறம்பானதுமான மூன்று சட்டங்களுக்கும், தமிழக அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்கிறது.
மேலும், மாநிலங்களவையின் விதிகளை மீறி நிறைவேற்றியிருக்கும் இந்தச் சட்டங்களைக் கொண்டு வந்திருக்கும் மத்திய பாஜக அரசுக்கும் - அவற்றை ஆதரித்திருக்கும் மாநில அதிமுக அரசுக்கும், இந்தக் கூட்டம் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
“அத்தியாவசியத் திருத்தச் சட்டத்தில்” “12 மாதங்கள்”" 100 சதவீத விலை ஏற்றம் உள்ள தோட்டக் கலை விளை பொருட்கள், 50 சதவீத விலை ஏற்றம் உள்ள அழுகாத விவசாய விளைபொருட்கள் அல்லது சராசரியாக 5 வருடங்கள் விலையேற்றம் உள்ள விளை பொருட்களுக்கு மட்டுமே “இருப்பு வரம்பு” கட்டுப்பாடு விதிக்க முடியும் என்று கார்ப்பரேட்களுக்கு சாதகமான நிபந்தனைகளை விதித்திருப்பது, “சுதந்திரமான வேளாண் சந்தையில்” குறுக்கிட்டு, அதன் இயல்பான போக்கைப் பாதித்து, விவசாயிகளின் விளை பொருட்களுக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச விலை கூட கேள்விக்குறியாகும் சூழல் உருவாகும்.
“விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு)சட்டத்தின்”மூலம்; “5 வருடம் வரைகூட கார்ப்பரேட் நிறுவனங்கள் - விவசாயிகளுடன் பண்ணை ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம்”, “ அதை நீட்டித்துக் கொள்ளலாம்”, “அந்த ஒப்பந்த மாதிரியை மத்திய அரசு அனுப்பி வைக்கும்”.
“பண்ணை ஒப்பந்தத்தில் விளைபொருட்கள் விநியோகம் செய்ய வேண்டிய நேரம், விலை, தரம், அளவு, தர நிர்ணயக் கட்டுப்பாடுகள்”, “ அந்தத் தரம் பற்றி தகுதியுள்ள மூன்றாவது நபர் சான்றிதழ் அளிக்க வேண்டும்”, “எப்போது வேண்டுமானாலும் இந்த ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம்”, “விளைபொருட்களைக் கொள்முதல் செய்யும் போது, வாங்கும் நிறுவனம் அப்பொருள் குறித்து கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும்”.
“ஒப்பந்தத்தில் பிரச்சினை எழுந்தால், அது குறித்து 90 நாட்களில் தீர்வு காணுவதற்கு, அதிகாரிகளை தலைவராகக் கொண்ட அமைப்புகள்” என்ற பிரிவுகள் அனைத்தும், குறு - சிறு - நடுத்தர விவசாயிகள் மட்டுமல்லாமல், பெரும் விவசாயிகளுக்கேகூட பாதிப்பை ஏற்படுத்தும் என்று இக்கூட்டம் கருதுகிறது.
“விவசாயிகள் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டத்தின்” கீழ்; “மாநிலங்களுக்கு இடையிலும், மாநிலங்களுக்குள்ளும் மின்னணு வர்த்தகத்தை அனுமதித்து, கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவிக்கும் மின்னணு வர்த்தக மேடை அமைப்பது”, “விவசாயிகளுக்கும், விவசாய அமைப்புகளுக்கும் நிரந்தரக் கணக்கு எண் கட்டாயம்”, என்பவை மாநிலத்தில் உள்ள சட்டங்களின்படி அமைக்கப்பட்டுள்ள வேளாண் விற்பனை ஒழுங்குமுறைக் கூடங்கள், உழவர் சந்தைகள் போன்றவற்றை அறவே ஒழிக்கும் நடைமுறைகள் ஆகும்.
“வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்தப்படுதலை ஒழுங்குபடுத்தும் மாநில அரசின் சட்டங்கள் மேற்கண்ட சட்டத்தைக் கட்டுப்படுத்தாது”, “ஒரு குக்கிராமத்தில் உள்ள விவசாய சந்தை நிலவரம் குறித்து மத்திய அரசு தெரிவிக்கும் முறை” என்பது, மாநிலங்களின் கையில் உள்ள பட்டியல் 14, 15, 16 மற்றும் 18 - மாநிலத்திற்குள் நடக்கும் வர்த்தகம், வணிகம் (பட்டியல் 26) போன்ற அதிகாரங்களையும் மத்திய அரசே கைப்பற்றிக் கொள்ளும் மேலாதிக்கப் போக்கு என்றே இந்தக் கூட்டம் கருதுகிறது.
விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய மறுத்து, ‘பி.எம்.கிஸான்’ திட்டத்திலும் ஊழல் முறைகேட்டிற்கு வித்திட்டுள்ள பாஜக, அதிமுக அரசுகள் - இந்தச் சட்டங்களின் மூலம் வேளாண் துறையைச் சீர்குலைக்க முற்பட்டுள்ளது வெளிப்படையாகவே தெரிய வருகிறது.
சிறு குறு நடுத்தர விவசாயிகளுக்கு, அவர்களின் விளை பொருட்களுக்குக் கிடைக்க வேண்டிய விலைக்கு, மாநிலத்தில் உள்ள வேளாண் விற்பனை ஒழுங்குமுறைக் கூடங்கள் மற்றும் உழவர் சந்தைக்குப் பாதிப்பை ஏற்படுத்தி - விவசாயிகளின் சந்தைச் சுதந்திரத்தைப் பறிக்கும் உள்நோக்குடன் - கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு “பண்ணை ஒப்பந்த” வாய்ப்பைக் கொடுத்து, விளைபொருட்களை “இருப்பு வரம்பு” ஏதுமின்றி சேமித்து வைத்துக்கொள்ள - ஏன், பதுக்கி வைத்துக்கொள்ள வழி வகுக்கும் இந்தச் சட்டம், பொது நலனுக்கும், விவசாயிகள் மற்றும் நுகர்வோர் நலனுக்கும் எதிரானது என்று இந்தக் கூட்டம் உறுதியாக நம்புகிறது. விவசாயத்தை மறைமுகமாக வருமான வரி வரம்பிற்குள் இழுக்கும் திட்டமிட்ட முயற்சி இது என்றும் இக்கூட்டம் அச்சம் தெரிவிக்கிறது.
“விவசாயம் சம்பந்தமான இந்த மூன்று சட்டங்களும், விவசாயிகளிடமிருந்து விளை பொருள்கள் வாங்குவதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டு விடுகின்றன. அதன்மூலம், உணவுப் பாதுகாப்பு காவு கொடுக்கப்படுகிறது. விவசாயிகளுக்கும் விலைப் பாதுகாப்பு கொடுப்பதை அரசாங்கம் கை விட்டுவிட்டு, விவசாயிகளைத் தனியார் வர்த்தகப் பெரும் புள்ளிகளிடம் தள்ளிவிடுகிறது” என்று, அகில இந்திய விவசாயிகளின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையை இந்தக் கூட்டம் வழிமொழிகிறது. செப்டம்பர் 25 அன்று நடைபெறவிருக்கும் அவர்களது போராட்டத்தை வரவேற்கிறது.
ஏற்கனவே பிஹாரில் தோற்றுவிட்ட இந்த “மாதிரியை”- தமிழகத்தில் திணித்து விவசாயிகளை வஞ்சிக்கும் பாஜக - அதிமுக அரசுகளின் போக்கு மிகுந்த வேதனைக்குரியது மட்டுமல்ல- சூழ்ச்சியான இந்த சட்டங்களின் வளையத்திற்குள் ஏழை விவசாயிகளை சிக்கவைத்து, அவர்களைத் தொடர்ந்து துன்பங்களுக்குள்ளாக்கி, கூட்டாட்சித் தத்துவத்தை மேலும் மேலும் கேள்விக்குறியாக்கும் முயற்சி என்பதால், இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியும் - அதற்குத் துணை போகும் ஆளும் அதிமுக அரசைக் கண்டித்தும் 2020 செப்டம்பர் 28 (திங்கட்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் மாவட்டத் தலைநகரங்களிலும் - நகராட்சி மற்றும் ஒன்றியங்களிலும் “கரோனா” பாதுகாப்பு விதிகளை கடைப்பிடித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அனைத்துக் கட்சிகளின் சார்பில், “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடத்துவது என்று இந்தக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.
அனைத்து விவசாய அமைப்புகளும் - தொழிலாளர் அமைப்புகளும் - வணிக சங்கங்களும், விவசாய பெருங்குடி மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மத்திய - மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை மணியடிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது”.
இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago