கர்நாடகா அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு; மேட்டூர் காவிரி கரையோரங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை: ஒகேனக்கல்லில் தொடர் கண்காணிப்பு

By செய்திப்பிரிவு

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக, கர்நாடக மாநில அணைகளில் இருந்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடிக்கும் கூடுதலாக காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஒகேனக்கல்லில் நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கேரள மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, கர்நாடக மாநில அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகள் ஏற்கெனவே முழுக்கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் 2 அணைகளுக்கு வரும் நீர் முழுவதும் உபரியாக காவிரியில் திறந்து விடப்படுகிறது. இதனால், காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:

கர்நாடக மாநிலம் கபினி அணை ஏற்கெனவே முழுக்கொள்ளளவை எட்டிவிட்டது. இந்த அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதேபோல, 124 அடி உயரம் கொண்ட கேஆர்எஸ் அணையும் நிரம்பிய நிலையில், இங்கு நேற்று காலை விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர்வரத்து இருந்தது.

மேலும், கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை நீடிப்பதால், அங்குள்ள அணைகளுக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

எனவே, கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளுக்கு வரும் உபரிநீர் முழுவதும் தொடர்ந்து காவிரியில் திறக்கப்பட்டு வருவதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கர்நாடக மாநில பொதுப்பணித்துறை சார்பில் தமிழக காவிரி கரையோரங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மேட்டூர் அணையை ஒட்டிய காவிரி கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதனிடையே, மேட்டூர் அணைக்கு நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 11,241 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் 90.26 அடியாகவும், நீர் இருப்பு 52.94 டிஎம்சி-யாகவும் உள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள உபரிநீர் இன்று (21-ம் தேதி) இரவு மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று நீர்வரத்து விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக இருந்தது. கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர் இன்று (21-ம் தேதி) மாலை ஒகேனக்கல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழியிடம் கேட்டபோது, “கர்நாடக மாநில அணைகளில் இருந்து விநாடிக்கு 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும்போது தேவைக்கு ஏற்ப காவிரிக் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும்.

தற்போது, வருவாய், வனம் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் தருமபுரி மாவட்ட காவிரிக் கரையோர பகுதிகளை தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளனர்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்