விவசாயிகளை கார்ப்பரேட்டுகளிடம் கொத்தடிமை ஆக்குவதா?- தாளம் போடும் தமிழக அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது: கி.வீரமணி

By செய்திப்பிரிவு

விவசாயத்தின் வாழ்வாதாரங்களை மத்திய அரசு பறிப்பதா, விவசாயிகளை கார்ப்பரேட்டுகளிடம் கொத்தடிமை ஆக்குவதா. தாளம் போடும் தமிழக அரசின் முடிவு கண்டிக்கத்தக்கதே, திமுக அனைத்துக்கட்சிக் கூட்டம் காலங்கருதி எடுக்கப்பட்ட முடிவு என தி.க. தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

கி. வீரமணி வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள, அவசரக் கோலம் அள்ளித் தெளித்த கதை என்பதுபோல, மக்களவையில் நிறைவேற்றியுள்ள விவசாயம் சார்ந்த மூன்று முக்கிய மசோதாக்களும் நாட்டின் விவசாயிகளால் பெரிதும் எதிர்க்கப்பட்டு, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் விவசாயிகள் போராட்டங்களில் இறங்கி, வீதிகளுக்கு வந்தும் போராடுகின்றனர்.

மற்ற மாநிலங்களிலும் விவசாயிகளின் வேதனை வெளியே வந்து, கொதி நிலையில் உள்ள அவர்தம் உரிமை உணர்வுகள் கொந்தளிப்போடு மோடி அரசின் விவசாய விரோதப் போக்கினை எதிர்த்துப் போராடத் துவங்கியுள்ளனர்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, அவர்களது வருமானத்தை இரு மடங்காகப் பெருக்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து பதவிக்கு வந்த பாஜக அரசு - இன்று அவர்களது குறைந்தபட்ச உரிமைகளைக்கூடப் பறித்து, கார்ப்பரேட் முதலாளிகளிடம் அவைகளைத் தள்ளி விடும் கொடுமையான நிலைக்கு சட்டப் பாதுகாப்பு அளிப்பதே இந்த மூன்று மசோதாக்களின் உள்ளடக்கமாகும்.

உணவு பாதுகாப்பு பலியிடப்படுகிறது

* விவசாயம் சம்பந்தமான இம்மூன்று சட்டமுன் வடிவுகளும், விவசாயிகளிடமிருந்து விளை பொருள்களை வாங்குவதை முற்றிலுமாக நிறுத்தி தடுத்து விடுகின்றன. இதனால் உணவுப் பாதுகாப்பு பலியிடப்படுகிறது. விவசாயிகளுக்கு விலைப் பாதுகாப்பு கொடுப்பதை அரசாங்கம் (MSP) கைவிட்டு விட்டு, விவசாயிகளைத் தனியார் வர்த்தக பெரு முதலாளிகளிடம் தள்ளி விடுகிறது.

* இன்றியமையாப் பண்டங்களின்கீழ் வர்த்தகக் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குபடுத்தும் முறையின்கீழ் இருந்து வந்த தானியங்கள் - பருப்பு வகைகள், சமையல் எண்ணெய்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு முதலியவை பட்டியலிலிருந்து நீக்கப்படுகின்றன.

* தங்களது நிலத்தில் அவ்வப்போது உள்ள பருவநிலைமைக்கு ஏற்ப, என்ன பயிர் விளைவிக்கலாம் என்று விவசாயி விரும்பினாலும், அந்த விருப்பப்படி அவர் செயல்படுத்த உரிமை எதுவும் கிடையாது. மாறாக, ஒப்பந்தம் செய்திருப்பவர் என்ன விளைவிக்க வேண்டும் என்று ஆணையிடுகிறாரோ அதைத்தான் விளைவித்திட வேண்டும். அவர்கள் நிலத்திலேயே விவசாயிகள் தினக்கூலிகளாக மாற்றப்படுவது போன்ற கொடுமையும் ஏற்படக் கூடும்.

ஏற்கெனவே விவசாயிகளின் தற்கொலைகள் அதிகம்

* ஏற்கெனவே விவசாயிகளின் தற்கொலைகள் மிகவும் அதிக மாகியுள்ள நிலையில், அவர்களின் வாழ்வாதார பறிப்பினால் இது மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயம் ஏற்படவே வழிவகுக்கும். இப்படி விவசாயிகளுக்கு வேதனை ஏற்படுத்திடுவதோடு அவர் களுக்கு உதவுவதாக இல்லையே! ‘கொள்ளிக் கட்டையை எடுத்துத் தலையைச் சொரிந்து கொள்ளும் விபரீதமாகவே ஆகி விடக் கூடும்.

* விவசாயம் - மாநிலங்களின் அதிகாரப் பட்டியலில் உள்ள 14ஆவது அதிகாரம் ஆகும்.
(A) விவசாயம் (அதன் கல்வி ஆராய்ச்சி, பயிர்ப் பாதுகாப்பு, பூச்சிகளிடம் பாதுகாப்பு உட்பட) அதனை மத்திய அரசு மாநில உரிமைகளிடமிருந்து பறித்து, மாநில அரசுகளை அழைத்து கலந்துரையாடி, கருத்துக் கேட்கும் ஒரு குறைந்தபட்ச நடைமுறையைக்கூட கடைப்பிடிக்காது ‘தானடித்த மூப்பாகவே’ இப்படி மூன்று சட்டங்களை நிறைவேற்ற துடிப்பதுபற்றி மாநில முதல்வர்கள் கவலைப்பட வேண்டாமா?

பாரதீய கிசான் சங்கமும் ஏற்கவில்லையே

தமிழ்நாட்டின் ஆளும் கட்சி அதிமுக இதுபற்றி வெறும் தலையாட்டி பொம்மை’ யாகவே நடந்து கொண்டுள்ளது. மக்களவையில் இதனை ஆதரித்ததோடு, இதனால் தமிழ்நாட்டு விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏதும் வராது என்று முதல்வர் கூறுவது விசித்திரமும், வேதனையுமாக உள்ளது. ‘கடைசி வீட்டில்தான் தீ வந்துள்ளது, என் வீட்டில் அல்ல’ என்ற வாதம் போன்றது அது.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இதுகுறித்து கூறுகையில், “இந்த மசோதாக்களை மாநிலங்களை கலந்து ஆலோசிக்காமல் செய்திருப்பது மாநிலங்களின் உரிமையைப் பறிப்பதாக இருக்கிறது” என்று தனது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கும் நிலையில், தமிழக முதல்வர் இதனால் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு பாதிப்பு ஏதும் வராது என்று சொல்லியிருப்பது விந்தையாக இல்லையா?

6. மத்திய பாஜக ஆளுங்கூட்டணியில் உள்ள (SAD) பஞ்சாப் சிரோன்மணி அகாலி தளத்தின் அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் தனது பதவியை ராஜினாமா செய்து வெளியேறியுள்ளார். அதுமட்டுமா? ஆர்.எஸ்.எஸ். அமைப்பான பாரதீய கிசான் சங்கம் (BMS) இதனை ஏற்கவில்லை - “மறுபரிசீலனை செய்ய வேண்டும்; நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்பி இதன் விளைவுகளை பற்றி அலசி ஆராய வேண்டும் என்று கூறியுள்ளது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் திமுகவின் தலைமையில் உள்ள மதச் சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி நாளை (21/9) கூடி முடிவுகளை மேற்கொள்ளுவது காலத்திற்கேற்ற கடமை முடிவும், வரவேற்கத்தக்கதுமாகும். விவசாயிகள் நலனை பலிபீடத்தில் நிறுத்துவதை தடுத்து நிறுத்தியாகவேண்டும்”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்